தமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி

வழமையானது
முனைவர் சண்முக. செல்வகணபதி 
  தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்கள் இன்றும் இலக்கியக்கூட்டங்களின் வழியாகவும், சமயச் சொற்பொழிவுகள் வழியாகவும் மக்களிடம் தம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் உள்ளார். குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள பேராசிரியரின் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் மரபு வழியாகப் பெரும் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். திருவீழிமிழலை என்னும் பாடல்பெற்ற ஊரில் 15. 01. 1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் கி. சண்முகம், குப்பம்மாள் ஆவர். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையில் பயின்றும், புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியில் பயின்றும் பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றும் தமிழ்ப்புலமையை வளர்த்துக்கொண்டவர்.

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

05.12.1974 இல் திருச்சிராப்பள்ளி – திருவெறும்பூர்  நாவலர் நெடுஞ்செழியன் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி 29 ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி, திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வர் பொறுப்பேற்றுப் பணி நிறைவு பெற்றவர்.

 தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்( 2007-2009) பணியாற்றித் தமிழ் நாட்டிய ஆசிரியர்களின் இந்தியப் பண்பாட்டுப் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வேடு வழங்கிய பெருமைக்குரியவர். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் இயலிசை நாடக மன்றத் திட்டத்தின் சார்பில் பத்துப்பாட்டில் இசைக்குறிப்புகள் என்ற ஆய்வேட்டை உருவாக்கி வழங்கியவர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் தகைஞராக இருந்து, சிலப்பதிகாரம் வழி அறியலாகும் ஆடல் அரங்கேற்ற நுட்பங்கள்என்ற தலைப்பில் ஆய்வேட்டை ஒப்படைத்துள்ளார(2011, நவம்பர்).

பேராசிரியர். சண்முக. செல்வகணபதி அவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ள்ளார். உலக அளவிலான கருத்தரங்குகள் பதினைந்திலும், தேசியக் கருத்தரங்குகள் இருபத்தெட்டிலும், இதரக் கருத்தரங்குகள் எழுபத்தியிரண்டிலுமாகக் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கியுள்ளார். இதுவரை 85 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்  நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியுள்ளார்(2009 சூன் முதல் 2009 ஆகத்து முடிய). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளார்.

 திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருப்புகழ்ப் பொழிவுகளும்(90 பொழிவுகள்), திருவீழிமிழலை ஆலயத்தில் திருமுறைப்பொழிவுகளும்(110) திருத்தவத்துறை ப.சு. நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்புகழ் இசைவிளக்கமும்(64 பொழிவுகள்), திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கில் இசைத்தமிழ் அறிஞர் தொடர்ப்பொழிவும் நிகழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை சார்பில் இசைத்தமிழ் அறிஞர் என்ற தலைப்பில்(38) பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்ப்பணியையும் இசைப்பணியையும் போற்றிய பல்வேறு இலக்கிய அமைப்புகள் செந்தமிழ் அரசு, விரிவுரை வித்தகச் செம்மல், முத்தமிழ் நிறைஞர், தமிழிசைச்செம்மல், செந்தமிழ் ஞாயிறு, திருப்புகழ்த் தமிழாகரர், உயர்கல்விச்செம்மல், இயலிசை நாட்டிய முத்தமிழ் வித்தகர்,  செந்தமிழ்ச்செம்மல், தமிழ்ச்சுடர், தமிழ்மாமணி, முத்தமிழ்ச்செம்மல், குறள்நெறிச் செம்மல், பண்ணாய்வுப்பெட்டகம், தொல்காப்பியர் விருது, பெரும்பாண நம்பி( பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவு தமிழிசை விழாக்குழு) உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளன.

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி அவர்களின் தமிழ்க்கொடை:

·         ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கணம்
·         மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         கல்வி உளவியல் மனநலமும் மனநலவியலும்
·         தனியாள் ஆய்வு
·         வரலாற்று மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம்
·         தமிழ் மொழியியல் மைச்சுருள் அச்சு
·         தமிழிசை ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி அருணாசலக்கவிராயர்
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         மொழிபெயர்ப்பியல்
·         பாரதிதாசன் கார்ல் சாண்ட்பர்க்கு ஓர் ஒப்பியல் ஆய்வு
·         ஒப்பிலக்கிய வரம்பும் செயல்பாடும்
·         திருவீழிமிழலை திருத்தலம்
·         நன்னூல் தெளிவுரை
·         சீர்காழி மூவர்
·         தமிழ்க்கலைகள், இசைக்கலை நுட்பங்கள்(ஆறு பாடங்கள்)
·         தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
·         அருணகிரியாரின் அருந்தமிழ் ஆளுமைகள்
·         இடைநிலைக் கல்வி நூல் தமிழ்ப்பாடம்
·         சித்தர் கருவூரார் வரலாறும் பாடல்களும்
·   பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்வும் வாக்கும்.
·         மேனிலைக் கல்விநூல் தமிழ் ( 3 பாடங்கள்)
·         இசைத்தமிழ் அறிஞர்கள் தொகுதி 1
·         இராவ் சாகிப் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்
·         தஞ்சை தந்த ஆடற்கலை
·         தொல்காப்பியம் செய்யுளியல்
·         அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருத்தலப் பெருமை
·         கட்டளைகள் ஒதுவார் பட்டயப் படிப்பு பாட நூல்(அச்சில்)
·         தமிழிசை மூவர்- ஓதுவார் பட்டயப் படிப்பு பாடநூல்
·         திருமங்கலமும் ஆனாய நாயனாரும்(அச்சில்)
தொடர்பு முகவரி:

பேராசிரியர்  சண்முக. செல்வகணபதி,
2802, நாணயக்கார செட்டித்தெரு,
தஞ்சாவூர்-613 001
செல்பேசி: 94427 68459

குறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், நூல் எழுதுவோர் இக்குறிப்புகளை, படத்தை எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டுக.

கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்புகள் வரவேற்பு

வழமையானது

எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி

கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு விருதுக்கு இந்தியா, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
                                                                                           
நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
புதினம்(நாவல்), கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை, மொழி பெயர்ப்பு, ஆகிய  நான்கு பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப்பெற்ற இலக்கியங்களுக்குச் சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
முதன்மை விருதுக்குத் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாவிட்டால், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒரு இலட்சம் உரூபாய் பண முடிப்பு வழங்கப்படும்.
இந்த அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

நூல்களின் முதல் பதிப்பு 2011, னவரி 1-ஆம் தேதி முதல் 2013, திசம்பர் 31-ஆம் தேதிக்குள் வெளிவந்திருக்க வேண்டும்.

படைப்புகளின் இரு படிகளுடன், தாமே உருவாக்கிய விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

 திரு. சி.ரங்கசாமி,
6-175, கே.ஜி.போஸ் அஞ்சல் நகர்,
போதுப்பட்டி கிளை அஞ்சல், நல்லிப்பாளையம் (வழி),
நாமக்கல் –637 003, தமிழ்நாடு

என்ற முகவரிக்கு ஆகத்து 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

காலங்கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நூல்களுடன் எழுத்தாளர்கள் சார்ந்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நூல்களைப் படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் அனுப்பலாம். படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என்று டாக்டர் பொ. செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்

வழமையானது

கலைமாமணி சு. கோபகுமார் (தண்ணுமைக் கலைஞர்)

புதுவை மாநில அரசு அறுமுகனம் என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் இராம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.

சு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்திறன் மிகுதியாக இருந்தது
சு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர்  கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சிசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.
சு. கோபகுமார்  அவர்கள் கானபூனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

சு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.

அறுமுகனம் இசைக்கருவியுடன் சு. கோபகுமார்(பழைய படம்)

இதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது .இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.
இந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

சு. கோபகுமார்  அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
இவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.

ஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.
சு. கோபகுமார்  அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.

மேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர்கீர்த்தனம்,  தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு,  ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய தியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.

இவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு இசைக்கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார்  அவர்கள் விரும்புகின்றார்.
புள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

   தமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.

பொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.

குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்களுக்கு இசை அமைப்பது குறித்த கலந்துரையாடலில் சு. கோபகுமார், மு.இளங்கோவன்
முகவரி:
கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்
எண் 98, ஆறாம் குறுக்கு,
தந்தை பெரியார் நகர்,
புதுச்சேரி– 605 005, இந்தியா

செல்பேசி: 0091 94433 76671

கலைமாமணி சுகோபகுமார் அவர்களின் இணையதளம் செல்ல இங்குச் சொடுக்குக.

குறிப்பு:
கலைக்களஞ்சியம் உருவாக்குவோர். நூல் எழுதுவோர், கட்டுரை வரைவோர் இக்கட்டுரைக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்ட மகிழ்வேன்.

பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்)

வழமையானது
பேராசிரியர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)

தமிழகத்தின் கல்வி வரலாறு பல்லாயிரம் பேராசிரியர்களைக் கண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் அறிவாலும் உழைப்பாலும் பல்துறைப் பங்களிப்பாலும் இந்த வரலாற்றின் பக்கங்களில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். அவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்னும் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திப் பல நூறு மாணவர்கள் தமிழாராய்ச்சித்துறையில் கால்பதிக்க வழிகண்ட பெருமை அறிஞர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்களுக்கு உண்டு.

சங்க இலக்கியம், சமய இலக்கியம், சமகால இலக்கியம் எனப் பல்துறையிலும் சுடர்மிகு அறிவுபெற்ற பேராசிரியர் மா. இரா. அவர்கள் மொழிபெயர்ப்புத்துறையிலும் ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளவர். புதினத்துறையில் ஆய்வுகள் பல நடைபெற இவர் காரணமாக இருந்தவர். தமிழ் மரபுப்பாடல்கள், புதுப்பாக்கள் வரைந்தவர். தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவரின் புதிய உரைநடை என்னும் அரிய நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு இவருக்குக் கிடைத்தது. தமிழ் இலக்கிய உலகில் இந்த நூலுக்கு என்றும் தனிமதிப்புண்டு.

மாணவர்களை விடுதலையாகச் சிந்திக்கச் செய்து, தானே நீச்சலடித்துக் கல்விக்கடலைக் கடக்கச் செய்யும் அதிசய ஆற்றல் மா. இரா. அவர்களுக்கு உண்டு. இவர் உரையாற்றும்பொழுது புதுமைப் பாதைகள் சிலவற்றை அடையாளம் காட்டுவார். செக்குச் சுழற்சிகள் கொண்ட சிந்தனைகளைத் தவிர்த்து, புதிய ஒளிக்கீற்றுகள் இவர் எழுத்தில் மின்னும். அலுவல்சார் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மா.இரா. அவர்கள் இப்பொழுது விருப்பமான பணிகள் செய்வதை வேள்வியாக்கிக்கொண்டுள்ளார். தமிழ்த்தவம் செய்யும் இப்பெருமகனாரை அண்மையில் அவர் இல்லில் கண்டு உரையாடி அவர்தம் வாழ்க்கைக்குறிப்பைப் பெற்றுவந்தேன். தமிழுலகின் பார்வைக்கு அவரின் வரலாற்றையும் பெருமிதப் பணியையும் மாணாக்கனாகிய யான் பணிந்து வைக்கின்றேன்.
அறிஞர் மா. இரா.

பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5 – 10 – 1939 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் வ. மாணிக்கம் திருமதி மா. இராமாமிருத அம்மையார். உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர்.
1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பணிஓய்வு பெற்றவர்.

மா. இராமலிங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:

·         நாவல் இலக்கியம் (1972)
·         இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்(1973)
·         புனைகதை வளம்(1973)
·         அகிலனின் கலையும் கருத்தும்(1974)
·         விடுதலைக்குப்பின் தமிழ்ச்சிறுகதைகள்(1977)
·         புதிய உரைநடை(1978)
·         இலக்கியத் தகவு(1979)
·   திறனாய்வுநெறி(1983)
·       நோக்குநிலை(1984)
·       உரைகல்லும் துலாக்கோலும்(1989)
·         பனிப்பாறையும் சில தீப்பொறிகளும்(1990)
·         கவண்கற்களும் சிறகுகளும்(2000)
கவிதைகள்
           ·          இனிக்கும் நினைவுகள்(1966)
           ·         எங்கெங்கு காணினும்(1982)
           ·         இரண்டாவது வருகை(1985)
           ·         யாதுமாகி நின்றாய்(1986)
           ·         தமிழ்க்கனல்(1987)
           ·         எழில்முதல்வன் கவிதைகள்(2000)
புனைகதை நூல்கள்
·         பொய்யான இரவுகள்(1973)
·         அதற்கு விலையில்லை(1974)
·         நாளைக்கும் இதே கியூவில்(1985)
·         வாழ்க்கை வரலாறு
·         பேராசிரியரியப் போராளி(2013)
மொழிபெயர்ப்புகள்
·         மகாகவி உள்ளூர்(1986)
·         ஜதீந்திரநாத் சென்குப்தா(1992)
·         பாபா பரீத்(1994)
·         நிச்சய தாம்பூலம்( 2008)
·         பொழுது புலர்ந்தது(2009)
·         பாகிஸ்தான் கதைகள்(2010)
·         கபீரின் நூறு பாடல்கள்(2011)
·         கிழக்குமேற்கு பாகம்1(அச்சில்)



பதிப்பித்த நூல்கள்

·         Selected Poems of Bharathidasan( in English)
·         Bharathidasan Centenary Souvenir(1991)
·         Velvi (வேள்வி) A Collection of seminar Papers in Tamil(1991)
·         Medieval Indian Literature in English Translation, Tamil Literature(1100-1800).
· உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்(2000)
·         உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்
·         பகவத் கீதை வெண்பா(2004)

மா.இராமலிங்கம் அவர்கள் பெற்ற விருதுகளும் சிறப்புகளும்:

மா.இரா அவர்களின் புதிய உரைநடை நூலுக்கு1982 இல் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1988-92), செயற்குழு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றியவர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவர் எழுதிய விடுதலைக்குப் பின் தமிழ்ச்சிறுகதைகள் என்ற நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் விருதினை 1991 இல் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புக்கான நல்லி குப்புசாமி செட்டி, திசை எட்டும் விருதினைப் பெற்றவர். பாண்டித்துரைத் தேவர் விருதினையும் பெற்றவர். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் இவருக்கு மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருதினை வழங்கி2006 இல் பாராட்டியுள்ளது. மேலும் பல்வேறு அமைப்புகள் திறனாய்வுக்குரிசில், சிலம்பாய்வுச்செல்வர், தமிழ்மாமணி விருது, ஆய்புல அண்ணல் விருது, குறள் ஞாயிறு விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளன.
மா.இரா. அவர்கள் கருத்தரங்குகளில் கலந்துகொள்ள மலேசியா, யுகோசுலேவியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், பணிமனைகளில் ஆயுவுரைஞராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியுள்ளார்.
  முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம் அவர்கள் நடத்திய தமிழகப் புலவர் குழு என்னும் அமைப்பில் இருபதாண்டுகள் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ஓங்குதமிழ் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து பணிபுரிந்தவர். புவனேசுவர் நகரத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் இருந்து பணிசெய்தவர். இவர்தம் கவிதைகளை ஆராய்ந்து மலைச்சாரலும் நெருப்பு அருவிகளும் என்னும் தலைப்பில்  திரு. செல்வசேகரன் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.
  EAST – WEST என்னும் புதினத்தின் இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்து முடிக்கும் நிலையில் உள்ளார். மேலும் வட இந்திய ஞானியான சுவாமி இராமதீர்த்தர் என்பவரின் வாழ்வும் பணியும் குறித்த பெரிய நூலொன்றை எழுதி வெளியிடும் திட்டத்துடன் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் செயல்பட்டு வருகின்றார். நிறைவாழ்வு ஐயா அவர்களுக்கு அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம்
பேராசிரியர் மா.இரா. அவர்களின் முகவரி:
முனைவர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)
தமிழ்க்குடில், எண் 4, பவானி நகர், தஞ்சாவூர்– 613 004
குறிப்பு:

கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை வரைவோர், இலக்கிய வரலாறு எழுதுவோர் இக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாளும்பொழுது எடுத்த இடம் சுட்டினால் மகிழ்வேன்.

தொடர்புடைய பதிவுக்கு : இங்குச் செல்க

தஞ்சைச் செலவுநயப்பு…

வழமையானது

மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்) 
தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இருக்கும் பழைய தமிழ்ப்பொழில் ஏடுகளைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பலவாண்டுகளுக்கு முன்பே கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றிருந்தாலும் இப்பொழுது செல்வதில் சிறப்பு இருந்தது. நண்பர் கரந்தை செயகுமார் அவர்கள் அங்குப் பணியில் இருப்பதால் அவரைச் சந்திக்கலாம் என்பதே சிறப்பிற்குக் காரணம். அவர் வழியாக நூலகத்தில் தேவைப்படும் உதவிகளை எளிதில் பெறலாம் என்று அவருக்குப் பேசி, என் வருகையை உறுதி செய்தேன்.

அறிவன் (புதன் 11. 06. 2014) கிழமை இரவு தொடர்வண்டியில் சென்று தஞ்சையில் இறங்கிய என்னை அழைத்துச் செல்வதற்கு மேலைப்பெருமழை திரு. சிவபுண்ணியம் அவர்கள் காத்திருந்தார். அவர்களின் இல்லம் சென்று நடுஇரவு வரை உரையாடினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழுந்து, கடன் முடித்தேன்.

 முதற்பணியாகப் பழைய நண்பர் தஞ்சை திரு. கபாலீசுவரன் ஐயா அவர்களின் இல்லத்திற்கு முகவரி தேடிச் சென்று சேர்ந்தோம். முன்பே திட்டமிட்டபடி பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் தமிழ் பாலாவும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். திரு. சிவபுண்ணியம் அவர்களுக்கு அப்பொழுது விடைகொடுத்தோம், அண்ணன் சிவபுண்ணியம் அவர்கள் தம் சேலம் செலவை எனக்காகச் சற்றுத் திருத்திக்கொண்டு காலத்தாழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார். இவர் மேலைப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலைப்பெருமழையில் நட்பாகக் கிடைத்த பெரியவர்களுள் அண்ணன் சிவப்புணியம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். கடும் உழைப்பாளி. எளிய நிலையிலிருந்து இன்று உயர்நிலைக்கு வந்துள்ளவர். கட்டடம் கட்டி, அதனை நேர்மையான விலையில் மக்களுக்கு வழங்கும் அறநெறித்தொண்டைச் செய்துவருபவர்.

திரு. கபாலீசுவரன் அவர்களின் இல்லத்தில் நுழைந்தபொழுது அவர்களின் துணைவியார் வரவேற்றார். திரு. கபாலீசுவரன் அவர்களின் தாயார் வாயிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். என்னை இருபதாண்டுகளுக்கு முன்னர் வரவழைத்துப் பார்த்து, அன்பு பாராட்டிய அந்தப் பாட்டி இப்பொழுது தொண்ணூறு அகவையில் என்னை அடையாளம் தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஓய்வில் ஒயர்கூடை பின்னுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு வேலைகளைச் செய்துவருவதாகத் திரு. கபாலீசுவரன்  துணைவியார் அவர்கள் சொன்னார்கள்.

என்னை இருபதாண்டுகளுக்குப் பிறகு திரு.கபாலீசுவரன் அவர்களின் துணைவியார் பார்ப்பதால் என்னை நினைவிருக்கின்றதா என்று கேட்டேன். என்னை நினைவுக்குக் கொண்டுவரத் தயங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் படித்த வரலாற்றைச் சொன்னதும் அம்மாவுக்குப் பழைய நினைவுகள் வந்தன. ஐயா எங்கே? என்று கேட்டேன். சுவரில் கண்ணாடியிட்டு மாட்டப்பெற்றிருந்த திரு. கபாலீசுவரன் அவர்களின் படத்தைக் காட்டி, கண்ணீர் விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக      திரு. கபாலீசுவரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கை எய்திய செய்தியைச் சொல்லி அழுதார்கள். அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைப் பகர்ந்து நான் இனித் தஞ்சை வரும்பொழுது அனைவரையும் வந்து பார்ப்பதாகவும், ஆறுதல் பெறுங்கள் என்றும் சொல்லி சிறிது நேரம் உரையாடி, குடும்பநலம் வினவி விடைபெற்றுக்கொண்டோம் ( திரு.கபாலீசுவரன் அவர்கள் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர். நேர்மைக்குப் பெயர்பெற்றவர். அமைதி வழியினர். அறவழியினர். பல்வேறு காவல்துறை முற்றுகைகளில் பங்கேற்று முதலமைச்சரின் பாராட்டுகள். சிறப்புகளைப் பெற்றவர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அவர் என்னைச் சந்திக்க நேர்ந்த தனிக்கதையைப் பிறகு சொல்வேன்).
திரு. கபாலீசுவரன் ஐயா இல்லத்தில் நான் உரையாடிக் கொண்டிருந்தபொழுதே தம்பி பாலா என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களிடம் உரையாடி, என் வருகையைச் சொல்லி சந்திக்க இசைவு பெற்றார். நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு என் பேராசிரியரைச் சந்திக்கச் செல்ல உள்ளதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். கையுறையாகச் சில பழங்களை வாங்கிக்கொண்டு, பேராசிரியரின் தமிழ்க்குடிலுக்குச் சென்றோம். மாடியிலிருந்து இறங்கி வந்து, பேராசிரியர் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் படிக்கச் சென்றபொழுது விரும்பிச் சென்று இவரிடம் ஆய்வுமாணவனாக இணைந்துகொண்டேன்(1993). பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய நெறிப்படுத்திய பெருமகனார் இவரே. விடுதலையாக ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு நல்கியவர். தமிழகத்தின் முன்னணிக்கவிஞர்களான உவமைக்கவிஞர் சுரதா, பாவலர் முடியரசன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர். என் அறிவுலக வாழ்க்கை இவ்வாறு செழுநீரோட்டமாகச் செல்வதற்கு வழிகோலியவர் இவர்களே!
பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் எழில்முதல்வன் என்ற பெயரில் அனைவருக்கும் அறிமுகமானவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவர். திறனாய்வு உலகில் கொடிகட்டிப் பறந்தவர்மொழிபெயர்ப்புப் பணிகளில் விருப்பமுடன் இப்பொழுதும் இயங்கி வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து எம்போலும் மாணவர்களுக்கு ஆதரவு காட்டியவர் (இவர்களின் சிறப்புகளைத் தனித்து எழுதுவேன்).

பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் ஒரு தந்தையாரைப் போல் கனிவுடன் என் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் வினவினார்கள். தம் துணைவியார் திருவாட்டி கமலா அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். அண்மைக்காலப் பணிகளை வினவினார்கள். இணையத்தில் ஈடுபாடு வந்தது எப்படி என்று ஆர்வமுடன் கேட்டார்கள். தம்மிடம் இருந்தபொழுது கணினி பற்றி உரையாடியதே இல்லையே என்று வியந்தார்கள். நானும் படிப்படியாக எனக்குக் கணினி அறிமுகம் ஆன வரலாற்றைக் கூறினேன்.
குடந்தை ப சுந்தரேசனார் ஆவணப்பட முயற்சி பற்றி சொன்னபொழுது மகிழ்ந்தார்கள் என்றாலும் ஒரு தந்தையாருக்கு உரிய கண்டிப்புடன் பணத்தால் நான் இடர்ப்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நம் குடும்ப நிலைகள், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, எதிர்கால வாழ்க்கை இவற்றை நினைவூட்டிப் பரிவுடன் கூறிய சொற்களை மறைமொழிபோல் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். ஐயாவிடம் உரையாடி, நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொள்ள இசைவு கேட்டேன். மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். அவர்களிடம் விடைபெற்றோம்.

 இரு நகரப் பேருந்துகள் பிடித்துக் கரந்தைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக நல்லாசிரியர் கரந்தை செயகுமார் காத்திருந்தார். அன்பொழுக வரவேற்றார். பள்ளியாசிரியர்களிடம் எங்களை அறிமுகம் செய்தார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திற்குச் சென்று முப்பதாண்டுகள் வெளியான தமிழ்ப்பொழில் ஏடுகளைக் கேட்டு அனைத்தையும் பார்த்துத் தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டோம். இடையில் பகலுணவுக்கு நண்பர் செயகுமார் அழைத்தார். ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து ஆட்டுக் கறியில் அமைந்த புலவுச்சோற்றினை விரும்பி உண்டோம். குடற்கறி நன்றாக இருந்தது.

மீண்டும் படிப்பு. குறிப்பு எடுத்தல். பருந்துப் பார்வையாக நூலகத்தைப் பார்வையிட்டோம். அனைத்தும் நிறைநிலைக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

 திருவையாறு அரசர் கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பணிசெய்துள்ளார் என்பதாலும் ஐயாறப்பர் கோயிலைப் .சு. அவர்கள் விரும்பி வழிபட்ட இடம் ஆதலாலும் அவ்வூருக்கு ஒரு நகர்(!) வண்டியில் புறப்பட்டோம். அங்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம். திருவையாற்றின் புகழ்பெற்ற அல்வாக் கடைக்குச் சென்று அங்கு அமர்ந்து அல்வா உண்டோம். பின்னர் அங்கிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வந்துசேர்ந்தோம்.

பேராசிரியர் சண்முக செல்வகணபதி அவர்களின் இல்லத்திற்குப் பேராசிரியர் பாலா அழைத்துச் சென்றார். பேராசிரியர் அவர்கள் ஒரு சமயச் சொற்பொழிவுக்காக வெளியில் புறப்பட அணியமாக இருந்தார். எங்களுக்காக அரைமணிநேரம் ஒதுக்கினார். பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய நூல் எழுதியவர். இவர், தமிழிசை, நாட்டியம், கலை குறித்த பேரறிவு பெற்றவர். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகக் கலைகுறித்துப் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.


குடந்தை ப. சுந்தரேசனார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய நித்திலம் இதழின் ஒரு படியை இவர் இல்லத்தில் பார்த்தேன். அதனைப் படமாக்கிக்கொண்டேன். ஐயாவிடம் விடைபெற்று, பேராசிரியர் மது. . விமலானந்தம் இல்லம் நோக்கித் தானியில் புறப்பட்டோம்.

பேராசிரியர் மது.. வி. அவர்களின் இடையர்தெரு இல்லம் தேடி அலைந்து, ஒருவழியாக இல்லத்தை அடையாளம் கண்டோம். பேராசிரியர் மது. வி. அவர்கள் உறவினர் இல்லம் சென்றிருப்பதாகத் தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் என்னை விட்டுவிட்டு தம்பி பாலா பூண்டிக் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். நான் உழவன் தொடர்வண்டிக்குரிய சீட்டினைப் பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்தேன். ஒர் உழவனைச் சுமந்துகொண்டு உழவன் விரைவாகச் சென்னையை நோக்கிப் புறப்பட்டான்

திருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா

வழமையானது

  தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவரும் தூய தமிழில் உரையாற்றி மாணவர்களின் உள்ளத்தில் தமக்கான ஓர் இடத்தைப் பெற்றிருப்பவரும், நெல்லைத் தனித்தமிழ்க்கழகத்தின் நிறுவுநருமான முனைவர் பா. வளன் அரசு அவர்களின் பவள விழா திருநெல்வேலி, சானகிராம் உணவகத்தின் மிதிலை அரங்கில் 15.06.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதுபெரும் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

சிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…

வழமையானது
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள்

கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் வளங்கொழிக்கும் ஊராக விளங்குவது திருமழபாடி என்னும் ஊராகும். பாடல்பெற்ற திருக்கோயிலும், திருமழபாடித் தமிழ்ச்சங்கமும் பெரும் பேராசிரியர் ஆ. ஆறுமுகம் ஐயா அவர்களும் இவ்வூரின் அளப்பரும் சொத்துக்களாகும். இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கும் பெருமக்களுள் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மெய்யன்பராக விளங்கும் மா.திருநாவுக்கரசு அவர்கள் பழகுதற்கு இனிய பண்பாளர். மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர். பல நூறு தமிழ்த்திருமணங்களை முன்னின்று நடத்திய பெருமகனார். திருக்குறள் வகுப்பு, பெரிய புராண வகுப்புகளை அச்சிற்றூரில் மாதந்தோறும் ஏற்பாடு செய்து அவ்வூர் மக்களுக்குத் தமிழறிமுகம் செய்வதைத் தலையாயப் பணியாகச் செய்து வருபவர்.

திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக அமைதியாகத் தமிழ்ப்பணி செய்யும் மா. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ப. சுந்தரேசனார் அன்னம் விடு தூது என்னும் நூலை நான் மாணவப்பருவத்திலேயே கற்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. எங்கள் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் ஐயா இந்த நூலை வழங்கிப், படிக்கும்படி அறிவுறுத்தினார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அண்மையில் கங்கைகொண்ட சோழபுரத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்க விழாவில் சிறப்புச் செய்யும் சூழல் அமைந்தது. அதன் பிறகு திருமழபாடிக்குக் களப்பணியின் பொருட்டு அண்மையில் சென்றபொழுது குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுக்கும் இவர்களுக்குமான அன்பு அறிந்து மகிழ்ந்தேன். மேலும் புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியப் பணியறிந்து அவர்களை நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன். மரபுக்கவிதையை மறையவிடாமல் தொடர்ந்து பாடலியற்றும் இவர்களைப் போன்றவர்களைத் தமிழுலகும் எதிர்பார்க்கின்றது.

இன்றைய ஆரவார ஆர்ப்பாட்ட ஊடக உலகில் இப்பெருமக்களின் பணிகள் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பு இல்லை.  இவர்கள் எந்த வட்டத்துக்குள்ளும் அடங்காதவர்கள். பரிசுகளுக்கும் பட்டங்களுக்கும் விருதுகளுக்கும் ஆள் பிடித்து அலையும் போலி ஆர்ப்பாட்ட மாந்தர்கள் மலிந்து கிடக்கும் இற்றை உலகில் உண்மையான தமிழ்ப்பணியாற்றும் இப் பெருமகனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி வைப்போம் என்று ஐயா மா. திருநாவுக்கரசு அவர்களின் எளிய தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டை என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். இடைநிலைத் தமிழாசிரியராக அரசு பள்ளிகளில் 32 ஆண்டுகள் தமிழ்ப்பணி செய்தவர்.
திருமழபாடி அப்பர் அருள்நெறி மன்றத்தின் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் பெருமைக்குரிய செயலாளராக 1980 முதல் இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணி புரிபவர். திருமழபாடி பெரிய கோயிலில் நான்கரை ஆண்டுகள் சமய வகுப்புகள் நடத்தியவர். அப்பர் அருள்நெறிக்கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையில் அப்பர் ஐம்பொன் சிலை நிறுவத் துணைநின்றவர்.

திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர். வானொலி நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.
புலவர் மா. திருநாவுக்கரசு வழங்கிய தமிழ்க்கொடை:
  • பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சுந்தரேசனார்                            அன்னம்விடுதுதூது(1991)
  • மருத்துவ வள்ளல் விசுவநாதம் கொண்டல்விடு தூது (1998)
  • திருமகள் மலர்விடு தூது(1994)
  • நல்லாசிரியர் இரத்தினசபாபதியார் சங்குவிடு தூது(1997)
  • திருப்பூசை செல்வர் மூக்கப்பிள்ளை சந்தனவிடு தூது(2003)
  • அருள்மிகு பழநியப்பர் பொன்விடு தூது
  • அருள்மிகு அழகம்மை பிள்ளைத்தமிழ்(2004)
  • பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ்(2003)
  • கப்பலோட்டிய தமிழன் பிள்ளைத் தமிழ்(அச்சில்)
  • பெருந்தலைவர் காமராசர் மயில்விடு தூது
  • நேரு மாமா பாடல்கள்
  • பழங்கதைகளும் புதிய பாடல்களும்
  • முத்துக்குமார் இலக்கண வினா-விடை(1991)

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் பெற்ற சிறப்புகள்:
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றி அரியலூர் மணிமன்றம் தூதிலக்கியத் தோன்றல்(1997) என்னும் சிறப்பினை வழங்கியும், திருத்தவத்துறை அறநெறிக் கழகம் மரபுக்கவிமணி என்னும் பட்டம் வழங்கியும்(1989), திருவையாறு ஔவைக்கோட்டம் புலவர் மாமணி(2009) எனும் பட்டம் வழங்கியும்,  குடந்தை புனிதர் பேரவை சிற்றிலக்கியச் செல்வர்(2008) என்னும் பட்டம் வழங்கியும், திருச்சிராப்பள்ளி திருமுறை மன்றம் சைவத் தமிழறிஞர் விருது அளித்தும், சூரியனார் கோயில் ஆதீனம் சிவநெறி வித்தகர்(2012) என்னும் பெருமை தந்தும் பாராட்டியுள்ளன. புலவர் மா. திருநாவுக்கரசு அவர்களின் சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன. இவர்தம் படைப்புகளைப் பலர் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையாருடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு  ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் மூவருமாக ஈன்றெடுத்துப் புகழ்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் முகவரி:

புலவர் மா. திருநாவுக்கரசு
4/82 நடுத்தெரு, திருமழபாடி – 621851
அரியலூர் மாவட்டம்

குறிப்பு: கலைக்களஞ்சியம் உருவாக்குவோர், கட்டுரை படைப்போர், நூல் எழுதுவோர் இக்கட்டுரைப் பகுதியை எடுத்தாள நேரும்பொழுது எடுத்த இடம் சுட்டின் மகிழ்வேன்.

இன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நினைவுநாள் (09.06.1981)

வழமையானது

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

(28. 05. 1914 – 09. 06. 1981)

தமிழின மீட்சிக்கு உழைத்த தந்தை பெரியார் போலவும், தமிழ்மொழி மீட்சிக்கு உழைத்த மொழிஞாயிறு பாவாணர் போலவும், தமிழிசை மீட்சிக்கு உழைத்தவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களிலும், பொது அரங்குகளிலும் மக்கள் மன்றத்தில் பாடிக்காட்டி விளக்கிய இப்பெருமகனாரை அவரின் நினைவுநாளில் நினைவுகூர்வோம்.

குடந்தை ப. சுந்தரேசனார் பாடிய பாடல்களைப் பரப்புவோம். அவர் நூல்களை அறிஞர் உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். மீண்டும் தமிழகத்தில் தமிழர் இசைமுழக்கம் கேட்க வழிசெய்வோம். 

“தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்னும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம்.

பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு…

வழமையானது
திருமுருகாற்றுப்படையைக் கற்போர் முருகப்பெருமானின் அருளுருவம் காண்பர். அவ்விறைவனின் அறப்பண்பும், மறப்பண்பும் நினைவூகூரப்பெறுவர். அருட்புலவர் நக்கீரர் அற்றைநாள் இயற்கைக் காட்சிகளை இந்நூலில் காட்டும் பாங்கினை எம் போலும் இயற்கையில் திளைப்போர் எண்ணியெண்ணி வியப்பர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் முருகப்பெருமான் அருள்பெற்றவர் போல் இத் திருமுருகாற்றுப்படையை எண்ணி, எண்ணி  உருகிப் பாடியதை அவர் குரலில் கேட்டதிலிருந்து , திருமுருகாற்றுப்படையின் சில பகுதிகளைக் காட்சிப்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்.

அதற்காகப் “பலர்புகழ் ஞாயிறு” கடலிலிருந்து தோன்றி, உலக உயிர்களை ஊக்கம்பெறச் செய்யும் காட்சியைச் சுவைக்கப் பல நாள், பல ஊர்களிலிருந்து, ஒவ்வொரு மணித்துளியாகக் கடற்காட்சியைக் கண்டுள்ளேன். இன்று புதுச்சேரியை அடுத்துள்ள சிற்றூர்களிலிருந்து சில கடற்காட்சிகளைக் காணும் வாய்ப்பு அமைந்தது. கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைப் பார்த்ததுடன் மட்டும் அமையாமல் கடலையொட்டிய ஆற்றங்கரையிலிருந்தும் கதிர்த்தோற்றம் காண முடிந்தது.






நன்றி: Villa Paradise 

சிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் விளக்கமும்…

வழமையானது
புலவர் நா. தியாகராசன்( தலைவர், மாதவி மன்றம், பூம்புகார்)
சிலப்பதிகாரம் குறித்தும் அதன் கதையமைப்பு, இசைக்கூறுகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பலர் அளிக்கும் விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு அவ்வப்பொழுது மகிழ்வதுண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதியார். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது “பத்தாண்டுகள் படித்தேன். சிலப்பதிகாரம் கொஞ்சம் விளங்கியது. அறுபதாண்டுகளாகப் படிக்கின்றேன். இன்னும் சில இடங்களில் ஐயம் உள்ளது” என்றார்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு உரைக்கும் நூல் மட்டுமன்று. தமிழர்களின் மலையளவு இசையறிவை விளக்கும் ஒப்பற்ற நூலாகும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலத்திற்குமான இசையைப் பொருத்தமாக அங்கங்கு இளங்கோவடிகள் வைத்துள்ளார்.  ஒவ்வொரு பாடலடிகளிலும் மிகப்பெரிய உண்மைகளைப் பொதிந்துவைத்துள்ளார். சிலப்பதிகாரத்தை வல்லார்வாய் கேட்கும்பொழுது அரிய உண்மைகள் வெளிப்படும்.

பலவாண்டுகளாக அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசையுரைகளை நாடாக்களிலிருந்து வட்டாக்கிக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பூம்புகார் சென்றபொழுது புலவர் நா. தியாகராசன் அவர்கள் பழைய ஒலிநாடா ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் காட்டி, இந்த நாடாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய கானல்வரிப் பாடல்கள் உள்ளன என்றார். அதனை உடனே கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.

1971 ஆம் ஆண்டு காவிரிப்புகும்பட்டினத்தின் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளில் இந்த நாடாவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது என்ற குறிப்பையும் புலவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனைக் கேட்கமுடியாத அமைப்பில் அந்த நாடா இருந்தது. spool tape recorder இருந்தால் நம் கையினுக்குக் கிடைத்த ஒலிநாடாவைக் கேட்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஐயாவிடம் அந்த நாடாவைப் பெற்று வந்தேன். புதுச்சேரி முழுவதும் அலைந்து பார்த்தோம். இந்த வகைக் கருவி கிடைக்கவில்லை. முகநூலில் இதுகுறித்த உதவி கேட்டபொழுது திரு. எஸ். வி. சேகர் உள்ளிட்ட நம் நண்பர்கள் பலவகையில் வழிகாட்ட முன்வந்தனர். 

இதனிடையே ஒலிப்பொறியாளர் ஒருவரைப் பற்றி அண்ணன் தேவா நினைவூட்டினார். கடந்த வெள்ளியன்று சென்னைக்குச் சென்று என் கையில் இருந்த ஒலிநாடாவைக் கொடுத்து எம் பி. 3 வடிவில் மாற்றித் தரும்படி அந்த ஒலிப்பொறியாளரைக் கேட்டோம். அவர் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வட்டில் மாற்றி, இன்று(04.06.2014) வழங்கினார். ஒலித்தூய்மை செய்து கேட்கும் தரத்தில் என் கையினுக்கு நாடா இன்று கிடைத்தது. அரிய புதையல் ஒன்று கிடைத்த மன மகிழ்வைப் பெற்றேன். இரண்டு வட்டில் முதற்படியும், அடுத்த இரண்டு வட்டில் ஒலித்தூய்மை செய்த வடிவும் கிடைத்தன.

ஒரு வட்டில் 25 நிமிடமும் இன்னொரு வட்டில் 45 நிமிடமும் என சற்றொப்ப 70 நிமிடங்கள் சிலப்பதிகாரக் கானல்வரிக்குக் குடந்தை ப. சுந்தரேசனார் விளக்கம் சொல்கின்றார்.(எஞ்சிய சில மணித்துளிகள் அறிஞர் மு. வ. அவர்களின் பேச்சு உள்ளது). சிலப்பதிகாரத்தை ஐயா ப.சு. அவர்கள் எவ்வளவு நுட்பமாகப் படித்துள்ளார் என்பதும் எவ்வளவு பெரிய இசைப்பேரறிவு அவர்களுக்கு இருந்துள்ளது என்றும் இந்த நாடாவைக் கேட்டு வியப்புற்றேன். மரபு வழியான விளக்கங்களைத் தகர்த்தெரிந்து இசை நுட்பம் கலந்த விளக்கம் தருவது பாராட்டும்படியாக உள்ளது. இந்த இசை உண்மைகளை விளக்க மற்ற நூல்களிலிருந்து விளக்கம் காட்டுவது ப. சு. வின் பேரறிவுக்குச் சான்றாகும்(எ.கா. சங்கதி= இயைபு).

கானல்வரியை விளக்கும்பொழுது திங்கள் மாலை வெண்குடையான், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, கரிய மலர் நெடுங்கண், கயலெழுதி வில்லெழுதி, தீங்கதிர் வாள்முகத்தாள், நுளையர் விளரி நொடி தருதீம் பாலை எனும் பாடல்களுக்கும் கட்டுரைப்பகுதிகளுக்கும் அளித்துள்ள விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.

தமிழிசையின் மேன்மையை விளக்கும் சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் அளித்த விளக்கத்தை நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாக, கங்காரு தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்துத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்ட புலவர் நா. தியாகராசன் அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெருமகனார் ஆவார். இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு, அன்னார் நிறைவாழ்வுவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

மாதவி மன்றத் தலைவர் புலவர் நா. தியாகராசனுடன் மு.இ, (பூம்புகாரில் படப்பிடிப்பின்பொழுது, 20.05.2014)