பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ் இசைப்பணிகள் குறித்த ஆய்வை ஊக்கப்படுத்திய இந்து- தமிழ் நாளிதழுக்கு நன்றி.

வழமையானது


நாள்: 16.05. 2014 புதுவை பதிப்பு

திருவையாறு அருகே நல்லேர் பூட்டும் விழா

வழமையானது

கோடைமழை பெய்ததைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் பூட்டி வேளாண்மைப் பணிகள் தொடங்குவது வழக்கம். இந்த வழக்கம் பல சிற்றூர்களில் மறைந்து விட்டாலும், சில சிற்றூர்களில் இன்னும் தொடர்கின்றன.

கடந்த வாரம் கோடைமழை பெய்ததைத் தொடர்ந்து, சித்திரை மாத வளர்பிறையையொட்டியும், திருவையாறு அருகேயுள்ள பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதற்காக மாடுகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்தும், விளைநிலத்தில் பூசைகள்  நடத்தப்பட்டன. பின்னர், கலப்பையில் மாட்டை பூட்டி உழவு செய்யப்பட்டது.

வேளாண்மைக்குப் பயன்படும் நெல், பயறு, எள் போன்ற தானியங்களைத் தெளித்தனர். இதில், விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இராசேந்திரன் கூறுகையில், ஆண்டுதோறும் நல்லேர் பூட்டும் விழா நடைபெற்று வருகிறது. இதன்மூலம் விவசாயப் பணிகளைத் தொடங்கி நிலத்தை உழவு செய்யப்படும். தென் மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பைப் பொருத்து குறுவை சாகுபடியைத் தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆழ்குழாய் மூலம் சாகுபடி மேற்கொள்வோம் என்றார்.

நன்றி: படமும் செய்தியும் தினமணி நாளிதழ் 13.04.2014

தோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு

வழமையானது
பெரியார் சாக்ரடீசு
உண்மைஇதழின் பொறுப்பாசிரியரும், திராவிடர் கழகத் தலைமை நிலைய பேச்சாளரும், அருமைத் தோழருமான பெரியார் சாக்ரடீசு (அகவை 44) அவர்கள் சென்னையில் நேற்று இரவு நடந்த சாலை நேர்ச்சியில் சிக்கி “ராசீவ்காந்தி அரசு மருத்துவமனை”யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தி அறிந்து அருமை நண்பர் பிரின்சு அவர்களிடம் நலம் வினவினேன். மீண்டும் நலம்பெற்று இயக்கப்பணிகளில் ஈடுபடுவார் என்று நம்பியிருந்த வேளையில்  மருத்துவம் னளிக்காமல் இன்று(12.05.2014) இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அருமை தோழரின் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும்ன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலேசியப் புலவர் மு. முருகையன் 18. 05. 1942 – 27. 05. 2013

வழமையானது
 புலவர் மு. முருகையன் அவர்கள் (மலேசியா)
புலவர் மு. முருகையன் அவர்கள் மலேசியாவில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திரு. சி. முத்துசாமி, திருவாட்டி இராசம்மாள் அம்மா. முருகையன் அவர்களின் துணைவியார் பெயர் செயபத்மினி ஆவார். இவர்களுக்குக் கவிதா, வினோத் கண்ணா என இரு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

புலவர் முருகையன் அவர்கள் பேராக் மாநிலத்தில் தெமொ பானிர் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர். கம்பார் தமிழ்ப் பள்ளியிலும் படித்தவர்.  கம்பார் இடைநிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைக் கல்வி பெற்றவர். அந்நாளில் மலேசியாவிலிருந்து வந்து தமிழ் கற்றவர்கள் என்று நினைவுகூரும்பொழுது புலவர் மு. முருகையன் அவர்களே அனைவராலும் நினைவுகூரப்படும் வகையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்தவர்.

திண்டுக்கல் பைந்தமிழ்க் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, சென்னை மாருதி திரைப்படக் கல்லூரியில் பயின்றுள்ளார். தென்கிழக்காசியத் திருக்கோயில் ஆய்வுக்காகப் புலவர் பட்டயம் பெற்றவர். முதுகலைத் தமிழ், இளங்கலை மொழியியல் ( B.O.L.) பட்டங்களைப் பெற்றதுடன் கல்வெட்டுகள், ஊடகக் கல்விக்காகச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். திரைப்படத்துறையில் ஈடுபாடு காட்டி ( D. F. Tec ) பட்டம் பெற்றவர்.

பள்ளி ஆசிரியராகப் பாரிட் புந்தார், பேராக், சுங்கைப் பட்டானி, கெடா ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நேசன் நாளிதழில் ஞாயிறுமலர் ஆசிரியராகப் பணியாற்றியவர் (1976 – 1990). மலேசிய நண்பனில் ஞாயிறுமலர் ஆசிரியராகவும் பணியாற்றியவர் (2005 – 2006). விடியல் வார இதழின் ஆசிரியராகவும் (2006-2010) பணிபுரிந்துள்ளார். ஆலமரம் மாத இதழ் ஆசிரியராகவும்(2010-11) பணிபுரிந்துள்ளார். 2011 முதல் 2013 வரை ஒளிவிளக்கு என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சற்றொப்ப ஐம்பதாண்டுகள் மலேசியாவில் இதழியல்துறையில் தொடர்புடையவராகவும் எழுத்துத்துறைத் தொடர்புடையவராகவும் புலவர் மு. முருகையன் விளங்கியுள்ளார்.

ஒலிப்பேழை, குறுவட்டுகள் வெளியீட்டு முயற்சி

தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு பல்வேறு ஒலிவட்டுகளையும், குறுவட்டுகளையும் வெளியிட்டுள்ளார். இதில் இவர் பாட்டியற்றியும் இசை அமைத்தும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பத்துமலை முருகன், கோலாலம்பூர் மாரியம்மன், ஒன்பது தெய்வங்கள், மலாக்கா திரௌபதி அம்மன், சீரடி சாய், ஒரு மலர் கனலாகிறது, மலேசிய மலர்கள், சாதனைத் தலைவர் சாமிவேலர், களம் கண்ட கலைஞர், அவசர அழைப்பு, சித்தார்த்த நாடகம்(தமிழ், தெலுங்கு), நினைவலையின் ஓசையில், கூட்டுறவுப் பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கன.
புலவர் முருகையன் அவர்களின் இசையமைப்பில் வாணி செயராம், உமா ரமணன், டி.எல்.மகாராசன், சுரேந்தர். சிவசிதம்பரம், சிந்து, அமிர்தா, வீரமணி கர்ணா, எம்.ஆர். விசயா உள்ளிட்ட தமிழகக் கலைஞர்கள் பாடியுள்ளனர். வீ. சாரங்கபாணிசுசிலா மேனன், சுசிலா திருச்செல்வம், எம். மாரிமுத்து, வி.செயந்தி, சந்திரிகா உள்ளிட்ட உள்நாட்டுக் கலைஞர்களும் பாடியுள்ளனர்.
நாட்டிய நாடகங்கள்

புலவர் மு. முருகையன் நாட்டிய நாடகங்கள் இயற்றுவதில் வல்லவர்.  1986 இல் உருவாக்கிய சித்தார்த்தா நாட்டிய நாடகம் கோலாலம்பூரில் அரங்கேறியது. இசை, இயக்கம், பாடல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்று இயக்கிய இந்த நாட்டிய நாடகம் இவர்தம் அன்னை புரடெக்சன்சு சார்பில் உருவானது. இது தமிழ்நாடு, இலங்கை, தாய்லாந்து, பினாங்கு, கோலாம்பூர், ஈப்போவிலும் அரங்கேறியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இவர் இயற்றியுள்ளார். தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் தம்மை இணைத்துக்கொண்டார்.

புலவர் மு. முருகையன் அவர்களின் தமிழ்க்கொடை:

இலக்கிய இலக்கண ஆய்வுகள் குறித்து புலவர் மு. முருகையன் அவர்கள் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார்.

உலகத்தின் ஒளிவிளக்குபெற்றோரும் பிள்ளைகளும் 
மொழியியல் (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் தொல்காப்பியமும், (ஆய்வுநூல்)
உலகத் தமிழர்களும் திருக்குறளும் (ஆய்வுநூல்

முதலியன வெளிவர உள்ளன.
பெற்ற விருது:

உலகத் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவர் உவமைக்கவிஞர் சுரதா அவர்களும் க. . திருநாவுக்கரசு அவர்களும் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  இலக்கியச் சித்தர் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளனர்(23.08.1988).
டாக்டர் விக்டர் சுப்பையா

புலவர் மு. முருகையன் அவர்களின் முதலாண்டு நினைவு விழாவைச் சென்னையில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்திய ஒன்றியமும், கோலாலம்பூர் ஒளிவிளக்கு அமைப்பும் 18.05.2014 இல் நடத்துகின்றன. மறைந்த புலவர் மு. முருகையனை நினைவுகூர முயற்சி எடுக்கும் டாக்டர் விக்டர் சுப்பையா , செந்தமிழ்த்தேனீ இரா. மதிவாணன் ஆகியோர் நம் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.


குறிப்பு: களஞ்சியங்களுக்குக் கட்டுரை உருவாக்குவோர், எடுப்போர் எடுத்த இடம் சுட்டி ஆய்வு நாகரிகம் போற்றுக.

தமிழைத் துறவாத துறவி ஊரன் அடிகளார்…

வழமையானது
தவத்திரு ஊரன் அடிகளார்
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரைப் பற்றி அறிந்தவர்களை அண்மைக் காலமாகத் தேடிச் சந்தித்து செய்திகளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது ப. சு. அவர்களை அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஐயா அவர்களிடத்து ஆற்றுப்படுத்தியவர் தவத்திரு ஊரன் அடிகளார் என்று நினைவூட்டினர். என் பிறந்த ஊருக்குச் செல்லும்பொழுது வடலூரில் இறங்கி அடுத்த பேருந்து மாறுவது வழக்கம். வடலூரில் வாழும் ஊரன் அடிகளாரை இதுநாள்வரை அவர்தம் இல்லம் சென்று கண்டதில்லை. ஆனால் தவத்திரு ஊரன் அடிகளாரை முன்பே ஆர்க்காட்டில் ஒருமுறை கண்டு வணங்கியுள்ளேன். வேறு சில நிகழ்வுகளில் அவர்களின் இனிய உரையைச் செவிமடுத்துள்ளேன்.

     . சு. நூற்றாண்டு விழாவில் அடிகளாரை அழைத்துச் சிறப்பிக்க நினைத்தேன். அவர்களின் செல்பேசி எண் பெற்று உரையாடினேன். வரும் 25 ஆம் பக்கல் திருவருட்பா அகவலுக்கு அவர் வரைந்துள்ள உரைநூல் வெளிவர உள்ளதாகவும் அதுவரை எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இயலாது எனவும் முடிவெடுத்துள்ளதைத் தெரிவித்தார்கள். . சு. நூற்றாண்டு என்றதும் அந்தத் தூய துறவு உள்ளம் இளகியது. பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து ப. சு. வுக்கும் தமக்குமான நினைவுகளை அடிகளார் அசைபோட்டார்கள். விழாவுக்கு வருவதாக இசைவு தந்தார்கள். அழைப்பிதழை அணியப்படுத்தி அடிகளாருக்கு நேரில் வழங்க அமையம் பார்த்தேன்.

ஞாயிறு (04.05.2014) காலை 11. 30 மணிக்கு வடலூரில் இறங்கி அடிகளாரின் தவமனைக்குச் சென்றேன். அன்பொழுக வரவேற்றார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டு உரையாடலைத் தொடங்கினேன். தவத்திரு ஊரன் அடிகளாரின் சைவ ஆதீனங்கள் உள்ளிட்ட நூல்களை நான் முன்பே படித்துள்ளதைச் சொன்னேன். அதுபோல் அவர்களின் வரிசை நூல்களையும் படித்துள்ளதை நினைவூட்டினேன். தம் நூல்கள் வெளிவந்தமைக்கான காரணத்தை அடிகளார் அவர்கள் சொன்னபொழுது அவர்களின் தமிழ்ப்பற்று விளங்கியது. அவர்களின் சமய ஈடுபாடு மதிக்கும்படியாக இருந்தது. தமிழகத்துத் திருமடங்களைப் பற்றியும் அவைகள் செய்துவரும் சமயப்பணிகள் பற்றியும் நெடுநாழிகை உரையாடினோம்.

. சு. நினைவுகளைத் தவத்திரு அடிகளார் தொடங்கும் முன் தாம் எழுதிய 10 பக்கத்தில் அமைந்த கட்டுரை ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார்கள். படிக்கத் தொடங்கியது முதல் அடிகளார் மேல் எனக்கு மிக்க மதிப்பு ஏற்பட்டவண்ணம் இருந்தது. அடிகளாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த புலமை எனக்குப் பளிச்செனத் தெரிந்தது. தம் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையே சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளுமே என்று குறிப்பிட்டார்கள். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அல்லவா?

தவத்திரு அடிகளாரிடம் மெதுவாகப் பேசத்தொடங்கினேன். . சு. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அருட்செல்வரிடத்து நேரம் பார்த்து அறிமுகம் செய்த நிகழ்வுகளையும் பூம்புகாரில் ப.சு. அவர்களைச் சந்தித்தையும், . சு. அவர்களின் சைவ நெறி ஈடுபாட்டையும் ஆர்வமுடன் எடுத்துரைத்தார்கள். அனைத்தையும் என் கையிலிருந்த காணொளிக் கருவியில் படம் பிடித்துக்கொண்டேன். சில புகைப்படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்

தவத்திரு ஊரன் அடிகளார் அவர்கள் தம் மனையின் முதல்மாடியில் நூலகத்தின் நடுவில் வாழ்ந்துவருகின்றார். அரிய, பெரிய நூல்கள் அவர்தம் நூலகத்தில் அணிசெய்கின்றன. முறைப்படுத்தி நூல்களை அடிகளார் அவர்கள் பாதுகாக்கின்றார்கள். அவர்கள் நூலகத்தில் உள்ள திருவருட்பா குறித்த பல பழைய பதிப்புகளை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். சமய நூல்கள், ஆய்வு நூல்கள் பல உள்ளன. தமிழாராய்ச்சியையே தம் வாழ்க்கையாகக் கொண்டுள்ள அடிகளாரிடம் விடைபெறும்பொழுது நெஞ்சார வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்கள்.

 தவத்திரு ஊரன் அடிகளார் நூலகத்தில்

தவத்திரு ஊரன் அடிகள் நூலகத்தின் ஒரு பகுதி

பேராசிரியர் இராசு. பவுன்துரை மறைவு (06.01.1953- 19.03.2014)

வழமையானது
பேராசிரியர் இராசு. பவுன்துரை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் இராசு. பவுன்துரை அவர்கள் இயற்கை எய்திய செய்தியைக் காலம் கடந்து அறியமுடிந்தது. பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்களைக் கடந்த கால்நூற்றாண்டாக அறிவேன். இவர் கட்டடம், சிற்பம், ஓவியம்,  கோயிற்கலை உள்ளிட்ட துறைகளில் பேரறிவு பெற்றிருந்த பெருமகனார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அன்பொழுகப் பேசிய அப்பெருமகனாரை “எப்பிறப்பில் காண்பேன் இனி” என்று ஏங்குகின்றேன். எம் போலும் இளைய ஆய்வாளர்களை ஆற்றுப்படுத்தி வளர்த்த பெருமைக்குரியவர். துறைசார் பணிகளில் தம்மை முற்றாக இணைத்துக்கொண்டு உழைத்தவர். அவர் துறைசார்ந்த அரிய நூல்களைத் தமிழில் எழுதித் தமிழர்களின் மரபுவழி அறிவுப்பெருமையை நிலைநாட்டியவர். பேராசிரியர் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.
பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்கள் தேனி மாவட்டம் தேவாரம் என்னும் ஊரில் 06.01.1953 இல்பிறந்தவர். தந்தையார் பெயர் திரு. பே. இராசு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழத்தில் 1987 முதல் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிருவாகப் பணியில் இயக்குநர்(பொ) பொறுப்பு வகித்தவர். கொரியா, சீனா, இலங்கை, சிங்கப்பூர், போர்ச்சுக்கல், ஆங்காங்கு, மெக்காவ், இந்தோனேசியா, பாலித்தீவு, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆய்வின்பொருட்டுச் சென்று வந்தவர். நான்கு பன்னாட்டு ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டவர். பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வரைந்தவர். 60 மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர். பதினைந்திற்கும் மேற்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.

பேராசிரியர் இராசு. பவுன்துரை எழுதிய நூல்களுள் தமிழகப் பாறை ஓவியங்கள்( 1987) தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்(2004) ஆகியன சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற்றன.

தமிழர்களின் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் அவர்கள் உடல்நலக் குறைவால் 19. 03. 2014 அன்று தம் புவிவாழ்வை நிறைவுசெய்துகொண்டார். புகழோடு என்றும் நம் நெஞ்சில் நிலைபெறுவார். பேராசிரியர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்களுக்கு என் ஆறுதல் உரியவாகட்டும்.
பேராசிரியர் இராசு. பவுன்துரையின் தமிழ்க்கொடை:

1.   தமிழகப் பாறை ஓவியங்கள்(1986)
2.   அருங்காட்சியகவியல்(1990)
3.   கும்பகோணம் மகாமகத் திருவிழா(1991)
4.   மனோரா(1995)
5.   Manora : Maritime History and Architecture(1996)
6.   தமிழகப் பாறை ஓவியங்கள்(2000)
7.   பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும்(2000)
8.   இந்திய அருங்காட்சியகங்கள்(2004)
9.   தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு(2004)
10. பெங்சுய் : சீனக் கட்டடக்கலைமரபும் தொழில்நுட்பமும்(2004)
11. செட்டிநாட்டுக் கட்டடக்கலை மரபு(2004)
12. தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும்(2004)
13. மகாமகம் மலர் (பதி) தமிழக அரசு வெளியீடு (2004)
14. தமிழகக் கட்ட்டக்கலை மரபு: மயன் அறிவியல் தொழில்நுட்ப மரபு(2004)
15. தமிழகக் கோயிற் கட்டடக்கலை மரபு: தூண்கள்(2005)
16. முல்லைநிலத்து முகங்கள்(2005)
17. பண்டைத் தமிழர் வரைவுகளும் குறியீடுகளும்(2005)
18.தஞ்சை இராஜராஜீஸ்வரம் திருக்கற்றளி விமானக் கட்டடக் கலை மரபு(2010)
19. தமிழர் கலை வரலாற்றில் பேரறிஞர் அண்ணா
20. தமிழகக் கலம்காரி ஓவியக்கலை மரபு
21. சிந்து சமவெளி நாகரிகமும் திராவிடக் கட்டடக்கலை மரபும்
22. தமிழகப் பொற்கோயில்கள்
23. தமிழகப் பெருங்கற்காலம் கட்டடக்கலை மரபு
24.தமிழர் குடியேற்றங்களும் கட்டடக்கலைத் தொழில்நுட்ப வரலாறும்
25. தமிழகத் திருக்குளங்களும் கட்டடக்கலை மரபும்
26. கம்பம் பள்ளத்தாக்கு வரலாறு
27. தமிழர் வரலாற்றில் சின்னமனூர்
28. தமிழகக் கோயில் விமானக் கட்டடக்கலை மரபு
29. T amil Cultural Connections with South Korea
30. Indian Architectural Traditions with south East Asia
31. Korean studies in India
32. Tamil Cultural Connections with China
33. Tranquebar Fort – Danish Maritime History and Architecture
34. Maritime Architectural Heritage in Tamil Nadu
குறிப்பு : கலைக்களஞ்சியத் தொகுப்பில் ஈடுபடுவோர் இக்குறிப்புகளைப் பயன்படுத்தும்பொழுது எடுக்கும் இடத்தைக் குறிப்பிடவும்.

பஞ்சமரபு நூல் சிறப்பு

வழமையானது

தமிழிசை வரலாற்றில் பஞ்சமரபு நூலுக்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு. மறைந்த நூல்கள் வரிசையில் புலவர்களால் அடிக்கடி குறிப்பிடப்பட்ட நூல் இதுவாகும். இதனை வே. இரா. தெய்வசிகாமணி கவுண்டர் அவர்கள் தம் ஓலைச்சுவடித் தொகுப்பில் பாதுகாத்து வந்தார். இச்சுவடி இருக்கும் செய்தியறிந்து பதிப்பிக்க கேட்டபொழுது முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு ஓலைச்சுவடி கொடுத்த கவுண்டர் ஐயா அவர்களின் உதவியை அந்த நிறுவனம் சுட்டாமல் பதிப்பித்தது. அதன் பிறகு இனி ஓலைச்சுவடியை யாருக்கும் தருவதில்லை என்று முடிவெடுத்திருந்த கவுண்டர் ஐயாவின் முடிவை நம் அருட்செல்வரின் வேண்டுகோள் மறுசிந்திப்புக்கு உள்ளாக்கியது. அதன் பயனாய் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் அரிய ஆராய்ச்சி, பதிப்பு நுட்பம் துணைகொண்டு பஞ்சமரபு தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தது. 

1973 இல் முதல் பகுதி முதல்பதிப்பாக வெளிவந்தது. அடுத்த பகுதியும் இணைந்த முழுப்பதிப்பு 1975 இல் வெளிவந்தது. இந்த நூல் வெளிவந்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் பணியாற்றிய குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயர் அணிந்துரைப் பகுதியில் மட்டும் இடம்பெற்றது. இந்த நூலின் அடுத்த பதிப்பு என் இசை ஆசிரியர் முனைவர் வீ.ப. கா.சுந்தரம் அவர்கள்  பதிப்பிக்க, கழகம் வழியாக 1991 திசம்பரில் வெளிவந்தது. இந்தப் பதிப்பிலும் சில குறைகள் உள்ளன. சிலப்பதிகார உரையாசிரியர் எடுத்துக்காட்டும் பஞ்சமரபு வெண்பாக்களின் விளக்கங்கள் பழந்தமிழர்களின் நுட்பமான அறிவைக் காட்டும் ஆவணங்களாகும். எந்தமிழரின் விழிப்பின்மையால் இந்த நூலின் சிறப்பும் தமிழகத்திற்குத் தெரியாமல் உள்ளது.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்(28.05.1914 – 09.06.1981) நூற்றாண்டு விழா – அழைப்பிதழ்

வழமையானது
அன்புடையீர் வணக்கம்.
தமிழிசை ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பணிசெய்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியைச் சிறப்புச்செய்வான் வேண்டி மலேசியாவிலிருந்து வருகைதரும் தமிழுறவுகளுக்கு விழாவில் வரவேற்பு வழங்க உள்ளோம். தமிழிசை ஆர்வலர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

நாள்: 17. 05. 2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன்

நோக்கவுரை: முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், தமிழிசை அறிஞர்

முன்னிலை:
டாக்டர்  விக்டர் சுப்பையா (தேசியத் தலைவர், மலேசிய, இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை)

செந்தமிழ்த் தேனீதிரு. இரா. மதிவாணன், சென்னை

அறிஞர்களைச் சிறப்பித்தல்:
திரு நா. சோமசுந்தரம், கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல்படை

நினைவுரைகள்

தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்
புலவர் செந்தலை ந. கௌதமன், பாவேந்தர் தமிழ்ப் பேரவை,சூலூர்
முனைவர் மு. இளமுருகன், தமிழியக்கம், தஞ்சாவூர்
முனைவர் . அங்கயற்கண்ணி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் சு. குமரன்,இந்திய ஆய்வியல்துறை, மலேயா பல்கலைக்கழகம்
திரு. வி. வயித்தியலிங்கம், ஆடுதுறை
திரு. . பிழைபொறுத்தான், சென்னை
புலவர் பொ. வேல்சாமி, நாமக்கல்

சிறப்புரை: பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், சென்னை

நன்றியுரை: பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன்

அழைப்பில் மகிழும்
    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் & புதுச்சேரி இலக்கிய வட்டம்

தமிழிசைத் தேடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் எனக்கு அறிமுகமான வரலாறு…

வழமையானது
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை படிக்கும்பொழுது(1987-90) சிலப்பதிகாரம் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிலப்பதிகாரத்தை இசைநுட்பம் அறிந்தவர்கள் வாயிலாகப் படிக்க வேண்டும் என்று அப்பொழுது பேராசிரியர்கள் குறிப்பிடுவார்கள். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரங்கேற்று காதையை நடத்தும் பேராசிரியர் அதில் உள்ள இசை, நாட்டியம் குறித்த பகுதிகளை விளக்கும்பொழுது முழுவதும் விளக்க இயலாமல் இடர்ப்பட்டதை உணர்ந்தேன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இசை நுட்பங்களையும் மரபுகளையும் உணரமுடியாமல் ஓர் இடைவெளி இருந்ததால் அத்தகைய தடுமாற்றம் மிகப்பெரும் சான்றோர்களுக்கே இருந்தது. அதனால்தான் என் இசைப்பேராசான் முனைவர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார். ”சிலப்பதிகாரத்தைப் பத்தாண்டுகள் தொடர்ச்சியாகப் படித்த பிறகுதான் ஓரளவு விளங்கிற்று. அறுபதாண்டுகளாகத் தொடர்ச்சியாகப் படித்த பின்பும் இன்னும் பல இடங்கள் விளக்கம்பெற வேண்டியுள்ளது” என்பார்கள்.

சிலப்பதிகாரத்தின் பழைய உரை, அடியார்க்குநல்லார் உரை இவற்றைப் படித்தபொழுது சிலப்பதிகாரத்தின் இசைநுட்பமும் அதன் சிறப்பும் எனக்கு ஓரளவு தெரியத் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்கு அடியார்க்கு நல்லார் வரைந்துள்ள உரைக்குறிப்புகள் இசைவரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதை முழுவதும்(175 அடிகள்) அப்பொழுது எனக்கு மனப்பாடம்.

அப்பொழுதுதான் குடந்தை ப.சுந்தரேசனார் என்ற பெயர் எனக்கு அறிமுகம் ஆனது. ஆனால் குடந்தை பசுந்தரேசனார் அப்பொழுது உயிருடன் இல்லை. சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியும், நடித்தும் காட்டி விளக்குவார் என்று அவருடன் பழகியவர்கள் குறிப்பிட்டனர். அதனால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களைக் கண்டு உரையாடும் வேட்கையுடன் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பலருடன் பழகியுள்ளேன். அவர்கள் வாயிலாகக் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை ஓரளவு புரிந்துகொண்டேன்.

நாகைத் தமிழ்ச்சங்கத்தில் சுந்தரேசனார் சிலப்பதிகார உரை நிகழ்த்தியபொழுது அவரிடம் பாடம் கேட்ட ஆ. பிழைபொறுத்தான் வழியாகச் சுந்தரேசனாரின் இசைப்புலமை எனக்கு அறிமுகமாகத் தொடங்கியது. அந்த நாகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் ஐயா அவர்களை அவர்களின் தஞ்சை இல்லத்தில் சென்று கண்டேன்(1992). குடந்தை சுந்தரேசனாரின் ஒலிவட்டுகள் இருக்கும் என்று நினைத்துச் சென்றேன். ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் கோவை இளஞ்சேரனார் சிலம்பின்மேல் மேலும் ஆர்வம் உண்டாகும்படி உரையாடினார்.

குடந்தையில் வாழ்ந்த கதிர். தமிழ்வாணன் வழியாகவும் சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை உள்வாங்க முடிந்தது. கதிர் ஐயா வழியாகவும் அக்குறிப்புகளைப் பதிந்துவைக்கமுடியாமல் போனது. அடுத்து நெய்வேலியில் இருந்த பாவாணர் தமிழ்க்குடும்ப அன்பர்கள் வழியாகவும் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைப் பற்றி அறிந்தேன். பொறியாளர் அறவாழி அவர்கள் பல குறிப்புகளைச் சொன்னார்கள். திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி அவர்கள் சுந்தரேசனாரின் சில ஒலிப்பேழைகள், நூல்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். மதுரையில் வாழும் மூத்த தமிழறிஞர் ஐயா தமிழண்ணல் அவர்களிடம் இருந்தும் சில ஒலிநாடாக்களை வாங்கிவந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகினேன். திருத்தவத்துறை அன்பர்கள் வெளியிட்ட ஒலிவட்டுகளை ஐயா ஆ. பிழைபொறுத்தான் கொண்டுவந்து தந்து உதவினார்கள். நண்பர் ப. திருநாவுக்கரசு அவர்களும் எனக்குப் ப. சு. ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாக நான் இருந்து தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் நான்காம் தொகுதியை எழுதிக்கொண்டிருந்தபோது வீ.ப.கா.சுந்தரனார் நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. ஐயா அவர்களைப் பற்றி நிரம்பச் சொல்வார்கள். அவர்களின் பாடுதுறை ஆற்றலை விளக்குவார்கள்.
என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் வழியாகவும் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைச் சிறப்பை உரையாடல்களில் கேட்டு மகிழ்ந்ததுண்டு. தஞ்சைப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை அழைத்துச் சென்று அவரின் பிறந்த ஊரான வடுவூரில் (தஞ்சை மாவட்டம்) உரை நிகழ்த்தச் செய்தமையைக் கூறி ஐயாவின் மேல் உயர்ந்த மதிப்பு ஏற்படும்படி செய்தார்கள்.

சூலூர் பாவேந்தர் தமிழ்ப்பேரவையின் நிறுவுநர் புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் தம்மிடம் இருந்த சுந்தரேசனாரின் ஒலிவட்டுகளைக் கிடைக்கும்படி செய்தார்கள். கோவை கு.வெ.கி. ஆசான் அவர்களின் திருமகனார் திரு. கு.வெ.கி. செந்தில் அவர்களும் ஒருமணிநேரம் ஒடும் ஓர் ஒலிவட்டைத் தந்தார்கள்.
ஆடுதுறை துணிவணிகர் திரு வி. வயித்தியலிங்கம் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்பே கண்டு பழகியுள்ளேன். அதன் பிறகு அண்மையில் சிதம்பரத்தில் கண்டு உரையாடி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழைத்துச்சென்று பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களின் தமிழ்த்துறை அலுவலகத்தில் ஒருமணி நேரம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்படிச் செய்து காணொளியில் பதிவுசெய்துள்ளேன்.

திருமழபாடி, அரியலூர் பகுதிகளில் சுந்தரேசனார் தொடர்ப்பொழிவுகள் செய்த வரலாற்றை அறிந்து திருமழபாடி புலவர் திருநாவுக்கரசு, முனைவர் அ. ஆறுமுகம், அரியலூர் சுவை. மருதவாணன் உள்ளிட்ட புலவர்களைச் சந்தித்து ப.சு. ஐயா பற்றிய குறிப்புகளைத் திரட்டினேன். அதுபோல் திருத்தவத்துறை திரு. சிவப்பிரகாசம் அவர்களை நான் முனைவர் பட்டம் படித்தபொழுது கண்டு உரையாடியும் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துள்ளேன். அண்மைக்காலமாகவும் திருத்தவத்துறை அன்பர்கள் வழியாகச் செய்திகளை அறிந்து வருகின்றேன். திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு இராச. இளங்கோவன் அவர்களும் பல நிலைகளில் எனக்குத் துணைநின்று ப.சு. அவர்களைப் பற்றி அறிய உதவி வருகின்றார்.
சேலம் புலவர் வேள்நம்பி அவர்கள் வழியாகவும், சிலம்பொலி செல்லப்பன் ஐயா வழியாகவும், பேராசிரியர் வயித்தியலிங்கன் வழியாகவும் பல செய்திகளை அறிந்த நான் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு வருவதை அறிந்து அவர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் குடந்தைக்குச் சென்று சிலநாள் தங்கிக் களப்பணி செய்தேன். பொறியாளர் இராச. கோமகன் அவர்களும் குடந்தைப் பேராசிரியர் சிவக்குமார் அவர்களும் குடந்தைக் களப்பணியில் உடனிருந்து உதவினர். நாகையில் சென்று தங்கிக் களப்பணி செய்தேன்.

வடலூர் தவத்திரு. ஊரன் அடிகளார் புலவர் சுந்தரேசனாருடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர்களை அருட்செல்வரிடத்து ஆற்றுப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களும் பல செய்திகளை எனக்குத் தந்து உதவினார்கள். என் நண்பர் திரு. சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களிடத்து மிகுந்த மதிப்புடையவர்கள். . சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் பலநிலைகளில் துணைநின்றார்

என் தமிழ் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த நண்பர் திரு. தமிழ்நாடன் அவர்கள் (குவைத்) குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்திக் காட்டும் முயற்சிக்கு உரமிட்டு, ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகின்றார்கள். அவர்களின் நெறிப்படுத்தலில் பல தமிழ்ப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
முதலில் எனக்குக் கிடைத்த ப சுந்தரேசனார் நூல்களையும் பேச்சுகளையும், படங்களையும், குறிப்புகளையும் மின்வடிவில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கத் தொடங்கினேன். கிடைத்த ஒலிநாடாக்களையெல்லாம் எம் பி3 கோப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் பிறகு தக்காரிடம் இப்பாடல்களைக் காட்டி இதன் தரத்தைக் கூட்டவும், மறு ஒலிப்பதிவு செய்யவுமான என் முயற்சிகளுக்கு உதவும்படி பலரை வேண்டினேன். ஆனால் போதிய ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி அமையவில்லை

ஆனால் அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருமைக்குரிய தோழர்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் நூற்றாண்டுவிழா கொண்டாட முன்வந்தமை எதிர்காலத் தமிழிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க ஒன்றாகும். அவர்கள் இவ்வாறு தந்த ஊக்கம் துவண்டிருந்த என் நெஞ்சுக்குத் துணிவைத் தந்தது. அதேபொழுது சென்னையில் வாழும் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி ஐயாவிடம் நாமும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டவுடன் புதுச்சேரியில் நடத்துவதற்கு இசைவு தந்தார்கள். தம்மாலான உதவிகளை ஐயா இரா. மதிவாணன் அவர்கள் வழியாகச் செய்ய முன்வந்தார்கள். 

புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நூற்றாண்டு விழாக்குழு அமைத்தோம். முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் வழிகாட்டலில் மாநாட்டில் உரையாற்றும் அறிஞர்களின் பட்டியல் அணியமானது. நூற்றாண்டு விழாப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகின்றன. இதனிடையை  ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எங்கள் முயற்சியைத் திரைத்துறை சார்ந்த நண்பர்களிடமும், தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் பகிர்ந்துகொண்டபொழுது பலரும் உதவ முன்வந்துள்ளனர். இயக்குநர் குணவதிமைந்தன் உள்ளிட்டவர்களின் நெறிகாட்டலைப் பெற்று குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆவணப்பட முயற்சி தொடங்க உள்ளது. முதற்கட்ட படப்பதிவு விரைவில்….

தமிழ் இணைய மாநாடு 2014, புதுச்சேரி மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு

வழமையானது


உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் 2014, செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான  மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்த உள்ளது.
மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான “மாநாட்டு நிகழ்ச்சிக் குழு”விற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்றுசேர்த்து, பரிசீலனை செய்து, தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத்  தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வுமுதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச் சொல்லாளர்(சொற்பிழை திருத்திசந்திப்பிழை திருத்தி…) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு  பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள்,     இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்…
கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள்   (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
•  கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.
தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்
தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு,     கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….• தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்-பட்ட   கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் ஜூன் 30ஆம் தேதிக்குள் cpc2014@infitt.org  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு  ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.  கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம். 
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.   
ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட-வுள்ளது.  இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு (ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள்  உலகின் முக்கிய/பெரிய  நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முனைவர் கு. கல்யாண சுந்தரம்
தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு

மேலும் விவரங்களுக்கு உத்தமம் இணையதளத்தைப் பார்வையிடலாம்.
13ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான  இறுதி நாட்கள்:
கட்டுரையின் ஆய்வுச்சுருக்கம் அனுப்ப     : 30ஜூன் 2014
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச்  சுருக்கங்கள் பற்றிய அறிவுப்பு  : 31ஜூலை 2014
முழுக்கட்டுரை அனுப்ப    : 30ஆகஸ்ட் 2014
மாநாடு நடைபெறும் நாட்கள்  :  19-20 செப்டம்பர் 2014
மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவின் உறுப்பினர்கள்
  முனைவர் கு. கல்யாணசுந்தரம் (லுசான்),
  பேராசிரியர் ஆ. க. இராமகிருட்டினன் (பெங்களூர் ),
  திரு. சிவ பிள்ளை (இலண்டன்),
  முனைவர் (திருமதி) சீதா லட்சுமி (சிங்கப்பூர்),
  முனைவர் அ. சிவகுமாரன் (சிங்கப்பூர்),
  முனைவர் (திருமதி) மாலா நேரு (சென்னை),
  முனைவர் (திருமதி) வி. தனலட்சுமி (சென்னை),
  முனைவர் இல. சுந்தரம் (சென்னை),
  திரு. அனுராஜ் (கொழும்பு),
  திரு. முகுந்தராஜ் சுப்ரமணியன் (பிரிஸ்பேன்)
———
Tamil Internet 2014  (13th International Conference)
Puducherry, India
CALL FOR  PAPPERS
The International Forum for Information Technology in Tamil (INFITT) is
pleased to inform that arrangements are currently underway to hold
the next Tamil Internet Conference 2014 at Puducherry ( Pondicherry),
 India (Pondicherry University campus) during 19-21 September 2014.
The INFITT annual conference is being co-hosted by the following
institutions: Pondicherry University, Puduvai Tamil Sangam, Puducherry
Institute of Linguistics and Cultures (PILC), Puduvai Tamil Sangam,
Pallavan Group of Institutions and the Central Institute of Indian Languages (CIIL).
One of the committees formed to organize “Tamil Internet 2014, the
“Conference Program Committee” (CPC)* has been given the task to
collect, review and select papers for presentation in various technical
sessions of the conference. “Natural Language Processing (NLP) as applied
to Tamil” has been chosen as the principal theme for the Tamil Internet
Conference 2014.
The CPC is pleased to release the following “Call-for-Papers for presentation
at the Tamil Internet 2014″.  We welcome research papers on the following
topics to be addressed at various technical sessions of the Conference.
• NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition,
    speech synthesis, Search engines, Machine Translation, Data-mining, etc.
• Tamil “enabling” in mobile platforms (smartphones, tablets,..) with
   particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows 8 platforms
• Open Source Tamil softwares and Tamil Localization
• Computer- and online-assisted Teaching, Learning of Tamil
• Tamil content and delivery via Internet:  Blogging, microblogging,
     Wikipedia, Podcasting, social networks,…
• Tamil Digital Library and e-content delivery across various handheld
    devices (ebooks, ezines,..)
• Tamil Databases and e-commerce
• Any other hardware, software development related to Tamil computing technology
All those interested to make an oral presentation at the conference are
requested to submit a 1-2 page (A4) summary/abstract of their planned
presentation to the CPC (email ID: cpc2014@infitt.org) on or before 30 June 2014. 
The conference program committee will send an acknowledgement mail
on the receipt of the abstract.
The abstracts can be in Tamil, English or bilingual (Tamil and English) but
all abstracts must be based on Unicode encoding. The abstract submission
can be in the form of plain text (.txt), Microsoft Word (.doc or .docx),
Open office and html formats (formats where the content can be extracted).
Please try to be as precise on what you want to present.
Submission of an abstract implies that at least one author of the paper
attends the conference to present the work in person. Proxy or remote
presentation is not permitted. In cases where the message from the abstract
is not clear, CPC may request more details in the form of an expanded
 abstract (4-6 pages) to judge adequately the submission.
Authors of papers accepted for oral presentation will be informed on or
before 31 July 2014. As with the abstracts, the full paper of the presentation
(4-6 A4 size pages inclusive of all graphics and tables) is to be submitted
in the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office format file.
 To ensure proper formatting, full paper may be submitted “additionally” in
 the form of PDF (with font embedding). Only the quality of the final paper
will determine the participation in the conference and the decision of the
Conference Program Committee will be final in all respects.
The Conference Proceedings will be published in printed paper format
and as an e-book. Arrangements are being made to have the Conference
Proceedings of the annual Tamil Internet Conferences published with an
ISSN (International Standard Serial Number). ISSN will permit routine
indexation of the Conf. Proceedings in bibliographic databases of all
leading libraries across the globe and proper referencing of the content
of the Proceedings in academic journal publications.
We look forward to your active participation in the Tamil Internet 2014 conference.
If you have any questions or need further clarifications, feel free to
send us a note to .
(sd.). K. Kalyanasundaram
Chair, CPC, Tamil Internet 2014
Some Key Deadlines to observe:
• Paper abstract: 30th June 2014
• Paper acceptance notification      : 31st  July 2014
• Camera ready copy submission     : 31st August 2014
•  Conference Dates   : 19-21 Sept. 2014
*Members of the Conference Program Committee (2014):
   Dr. K. Kalyanasundaram (Lausanne, CH, Chair),
   Prof. A.G. Ramakrishnan (Bangalore, India),
   Mr. Siva Pillai (London, UK),
   Dr. S. Seetha Lakshmi (Singapore),
   Dr. A. Sivakumaran (Singapore),
   Dr. Ila Sundaram (Chennai, India),
  Dr. Mala Nehru (Chennai, India),
  Dr. V. Dhanalakshmi (Chennai, India),
  Mr. Anuraj (Colombo, Sri Lanka)
  Mr. S. Muguntharaj (Brisbane, Australia)