ஆய்வுக்களத்தில் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்

வழமையானது


உல்ரிக் அவர்களுக்கு அழைப்பிதழ் அளிக்கும் வி.முத்து

ஆய்வுலகில் ஈடுபடுபவர்கள் தங்களையொத்த உழைக்கும் ஆய்வாளர்களைப் பார்க்கும்பொழுது ஊக்கம்பெறுவது உண்டு.அதுபோல் துறைசார் முன்னோடிகளைப் பார்க்கும்பொழுது நம்மையறியாமல் நம் ஆய்வு வேகம் எடுக்கும். வறண்டு கிடக்கும் இன்றையத் தமிழக ஆய்வுத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றும் சில ஆய்வுகள் நடைபெறுகின்றனவே தவிரச் சரியான முன்மாதிரிகள் அருகிவிட்டனர்.

இந்த நிலையில் நாளை(28.03.2011) புதுச்சேரித் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் மதுரைத் திட்ட மின்பதிப்புப்பணியின் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணந்தரம் அவர்களின் சிறப்புப்பொழிவு அழைப்பிதழ் கொடுக்க செர்மன் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் புதுச்சேரி –கோர்க்காடு இல்லத்திற்கு நானும் கல்விச்செம்மல் முனைவர் வி.முத்து ஐயா அவர்களும் இன்று சென்றோம்.

பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களைக் கோவைச் செம்மொழி மாநாட்டில் முதன்முதல் கண்டேன். முன்பே அவர்களின் பணியை இணையம் வழியாக அறிவேன்.நாமக்கல் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்களுடன் உலகப் பல்கலைக்கழகத் தமிழாய்வுகள் பற்றி உரையாடும் பொழுதும் அம்மாவைப் பற்றி நாங்கள் உரையாடியது உண்டு.மேலும் கோர்க்காட்டிலிருந்து வந்து எங்கள் கல்லூரியில் பயின்ற என் மாணவி இரேவதி அவர்கள் வழியாகவும் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் தமிழ் ஈடுபாட்டை அறிவேன்.

நாட்டுப்புறவியல்துறை ஆய்வில் பேராசிரியர் அம்மாவுக்கு ஈடுபாடு என்பதால் அவர்கள் மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. பல ஆண்டுகள் பார்க்க நினைத்தும் உரிய நேரம் வாய்க்காமல் இருந்தேன். இன்றும் அவர்கள் வெளிநாடு புறப்படுவதற்குரிய பயண ஏற்பாட்டில் இருந்தார்கள். சந்திக்க நேரம் ஒதுக்க அவர்களால் இயலாமல் இருந்தார். எனினும் குறைந்த நேரம் மட்டும் சந்திப்பு இருக்கும் என்று உறுதி கூறிச் சந்திப்பு உறுதியானது.

கல்வி வள்ளல் வி.முத்து ஐயா அவர்களின் மகிழ்வுந்தில் காலை 11.45 மணியளவில் கோர்க்காடு புறப்பட்டோம். அரைமணிநேர ஓட்டத்திற்குப் பிறகு கோர்க்காட்டில் வெள்ளைக்கார அம்மா வீடு என்றால் ‘அழும் குழந்தையும் சொல்லும்’ என்ற நம்பிக்கையில் வினவினோம்.
அதன்படியே மிக எளிதாகப் பேராசிரியர் அம்மா அவர்களின் வீட்டை அடைந்தோம். பழங்கால வீடு. எங்கள் இடைக்கட்டு காளியம்மன்கோயில் அருகில் இருந்து மண்மேடான பழையவீட்டின் முகப்பு போல் இருந்தது.

கதவுகள் பழங்காலத்துக் கதவுகள். தூண்கள் பழயைத்தூண்கள். அழகிய வண்ணம் பூசப்பட்டு இருந்தது. வீட்டுப்பணிகளில் இருந்த இளைஞர் ஒருவர் எங்களை எதிர்கொண்டு அழைத்தார். அவருக்கு முன்பாகக் குறிஞ்சிப்பாட்டில் வருவதுபோல் நாய்கள் சில ஓடி வந்தன. அதன் வரவேற்பு எங்களுக்கு அச்சம் தந்தாலும் அது அதட்டியதும் குரைப்பதை நிறுத்தியது. பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களுக்கு எங்கள் வருகை தெரிவிக்கப்பட்டது. வீட்டின் தொட்டிமுற்றம் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தோம்.

வீடு என்று சொல்வதைவிட ஒரு கலைக்கூடமாக என் கண்ணுக்குத் தென்பட்டது. “பட்டிக் காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பதுபோல்” ஒவ்வொரு பொருளாக ஆர்வமுடன் பார்த்தேன். சங்கிலிக் கருப்பன் கோயிலில் தொங்கும் சங்கிலிபோல் பல சங்கிலிகள் தொங்கின. பழையகாலத்துக் குறுவாள்கள் மாட்டப்பெற்றிருந்தன. வீடுமுழுவதும் பித்தளைக் குவளைகள், தவலைகள், தோண்டிகள், குடங்கள் எனப் பலவகை இருந்தன. நன்கு கழுவித் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். சில பூச்செடிகளும் வீட்டின் உள்ளே இருக்கின்றன.

எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். என் நூல்கள் சிலவற்றை அம்மாவுக்கு வழங்கினேன். விழாவுக்கான அழைப்பிதழைக் கல்விச்செம்மல் வி.முத்து ஐயா அவர்கள் வழங்கினார். எங்களின் தமிழார்வம் பற்றி அறிமுகம் செய்துகொண்டோம்.
அடுத்தமுறை வரும்பொழுது புதுவைத் தமிழ்ச்சங்கத்திலும் கல்விச்செம்மல் முத்து ஐயா அவர்களின் கல்வி நிறுவனங்களிலும் உரையாற்றும்படி பேராசிரியர் அம்மா அவர்களிடம் விண்ணப்பித்துக்கொண்டோம்.

உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகள் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. அவர்களின் புதுச்சேரி வருகை, திருமண வாழ்க்கை, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகப் பணி, இன்றைய கல்விப்பணிகள், ஆய்வுப்பணிகள் பற்றி நீண்டநேரம் உரையாடினோம். செர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் செய்யப்படும் தமிழ்த்துறைப்பணிகள், தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம், தமிழாய்வு மாணவர்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் கல்விப்பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பல செய்திகளைப் பேசினோம்.

அதற்குள் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் கணவர் திரு.சரவணன் ஐயா எங்களை வரவேற்றப்படி வெளியிலிருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த ஊர் மதுரை. சிலைவடிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கலைக்குடும்பம் சார்ந்தவர் அவர். அவர்கள் தரப்பு செய்திகளைப் பேசினோம்.

பின்னர் அம்மாவிடம் வீட்டைச் சுற்றிப்பார்க்கும் என் அடங்காத ஆசையைச் சொன்னேன். அம்மா உல்ரிக் நிக்லாஸ் அவர்கள் ஒவ்வொரு அறையாகத் திறந்து இந்த வீட்டின் வரலாற்றைக் கால்மணி நேரத்திற்குள் சொல்லிமுடித்தார்கள். பழைமை மிக்க செல்வக் குடும்பத்தினரிடமிருந்து இந்த வீட்டை அம்மா அவர்கள் 1995 அளவில் வாங்கியுள்ளனர். பின்புறம் தோட்டத்துடன் கூடியவீடு.

மாட்டுவண்டி நிறுத்திவைத்திருந்த இடத்தை அம்மா அவர்கள் திருத்தி ஓர் அறையாக்கி தம் அலுவலகமாக மாற்றியுள்ளார்கள். கணிப்பொறி, இணைய இணைப்பு, மின்வசதி, வளிக்கட்டுப்பாட்டு அறை என்று அழகிய அலுவலகமாகச் செயல்படுகின்றது. நெல்லைக் கொட்டிவைக்கும் தானியப் பாதுகாப்பு அறையைத் திருத்தி அதனை ஒரு நீண்ட அலுவலகமாக மாற்றியுள்ளார்கள். இன்னொரு அறையில் காணொளிச் செப்பம் செய்யும்(எடிட்டிங்) பணிக்குரிய கருவிகள் இருக்கின்றன. தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வின்பொருட்டுத் திரட்டப்பெற்ற பாடல்கள் ஆய்வுமூலங்கள் அடங்கிய காணொளி நாடாக்கள், ஒலிவட்டுகள் எனப் பல திறத்து ஆய்வுக்களஞ்சியமாகத் தம் வீட்டை மாற்றியுள்ளார்.

ஒரு இருள் செறிந்த அறையைத் திறந்துகாட்டினார்கள். அதில் நூலகத்திற்கான பல நிலைப்பேழைகள் இருந்தன. துறைசார் நூல்கள் முறைசார்ந்து அடுக்கப்பட்டிருந்தன. நூல்களை எளிதாக அடுக்க நிலைப்பேழையின் வெளிப்புறத்தில் உரிய பொருத்தமான படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ம.கோ.இரா, கலைஞர் படம் உள்ள நிலைப்பேழையைத் திறந்தால் திராவிட இயக்க நூல்கள், தொல்.திருமாவளவன் படம் உள்ள அறையைத் திறந்தால் தலித்தியம் சார்ந்த நூல்கள், சமயவாணர்கள் படங்கள் உள்ள பேழையைத் திறந்தால் சமய இலக்கியங்கள், பழங்குடி மக்கள் படம் உள்ள அறையைத் திறந்தால் நாட்டுப்புறவியல் ஆய்வு சார்ந்த நூல்கள் உள்ளன.

அடுப்பங்கறையின் அமைப்பையும் பார்க்கத் தவறவில்லை.சிற்றூப்புற மக்கள் பயன்படுத்தும் விறகு அடுப்பு.அதனை ஒட்டி வளியடுப்பு. அதன் அருகே மேல்நாட்டார் பயன்படுத்தும் மின்அடுப்பு. இவற்றைப் பயன்படுத்த அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முறைப்படி அனைவரும் கீழே அமர்ந்து உண்ணும் முறை என்பதை அறிந்து ஒவ்வொரு முறையும் வியப்பின் உச்சிக்குச்சென்று மீண்டேன்.

அங்கிருந்த ஒவ்வொரு பேழைகளும் பழைய கலைக்கருவூலங்களாகக் காட்சி தருகின்றன. ஆய்வாளர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் வந்தால் தங்கிச்செல்ல பல அறைகள் கொண்ட வீட்டினைப் பாதுகாக்கின்றனர். தம் பணிக்கு உதவும் பணியாளர்களுக்குத் திருமணம் உள்ளிட்ட கடமைகளைச் செய்து தம் வீட்டில் தங்கவைத்துப் பாதுகாக்கின்றார். அவரின் ஆய்வு உள்ளத்துக்கு இடையில் தாய்மையின் தவிப்பை உணர்ந்தேன். அங்குள்ள அனைவரும் புகைப்படம் எடுப்பவர்களாகவும் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவராகவும் மாற்றியுள்ள பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் பணிகளைக் கண்டு வியப்படைந்தேன்.

அடுத்து அவர்களின் வீட்டுப் பூசையறையில் உள்ளே சென்று பார்த்தோம்,
வகைவகையான வழிபாட்டுப் பொருள்கள் எங்களுக்கு மலைப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தின. அய்யனார் சிலைகள், கோயில் மணிகள், விளக்குகள், கத்திகள், வீச்சரிவாள் என்று நாட்டுப்புறப் பயன்பாட்டில் இருந்த அழகிய கலைக்கருவூலமாகத் தம் இல்லத்தை விளங்கச்செய்துள்ளார்.

பூசைக்குரிய பொருட்கள்


உல்ரிக் அவர்களின் பாதுகாப்பில் கலைப்பொருட்கள்

புதுச்சேரி வரும் உண்மையான ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழார்வலர்கள் தொலைவுபாராமல் பார்க்க வேண்டிய இடம் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்களின் இல்லம். அவர்களின் இசைவுபெற்று ஒருமுறை சென்றுவந்தால் உங்கள் ஆய்வு சிறக்கும். உங்கள் பார்வை புதுமையடையும். பழைமையைப் போற்றிப் பாதுகாக்கும் உள்ளம் உங்களிடம் உருவாகும்.

ஒரு பேராசிரியர் எவ்வாறு வாழ வேண்டும், இருக்கவேண்டும், என்பதற்கு உல்ரிக் அவர்களின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. ஆய்வுத்தலைப்புடன் பொருந்தி, தம் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்குப் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் அவர்கள் எடுத்துக்காட்டு.

இவர்களின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை. இவர்களின் பணிதான் தமிழ் ஆய்வுப்பணி.


மு.இளங்கோவன்,உல்ரிக்


முனைவர் வி.முத்து,மு.இளங்கோவன்,உல்ரிக்,சரவணன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s