சிங்கப்பூர் செலவு

வழமையானது


அழைப்பிதழ்

சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழக நாட்டுப்புறப்பாடல்களை அறிமுகம் செய்து பாடுவதற்கு நானும் தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்களும் சிங்கப்பூர் வந்துள்ளோம். நேற்று(22.01.2011) காரிக்கிழமை காலையில் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்திற்குக் காலை 7.45 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

எங்களை வரவேற்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.மூர்த்தி அவர்கள், நண்பர் மதி அவர்களுடன் வந்து காத்திருந்தார்(மதி உத்தமம் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் சின்ன தாராபுரம் பாவலர் இறையரசன் அவர்களின் மகன் என்ற அடிப்படையிலும் முன்பே எனக்கு அறிமுகம்). திரு.மூர்த்தி அவர்கள் செல்பேசி உரையாடல் வழியாக மட்டும் அறிமுகம். அவர்தான் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்து அறிமுகம் செய்பவர். அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நேராகத் திரு.மதி அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம்.

நாங்கள் சென்று இறங்கியதும் எங்களுடன் வந்து பொறியாளர் திரு.புருசோத்தமன் அவர்கள் இணைந்துகொண்டார். திரு.புருசோத்தமன் அவர்களைப் பற்றி அண்மையில்தான் சென்னை உயர்நயன்மை மன்ற வழக்கறிஞர் க.பாலு அவர்கள் வழியாக அறிந்தேன். அனைவரும் காலையில் திரு.மதி இல்லில் காலையுணவை உண்டோம். பிறகு திருவாட்டி. சின்னபொண்ணு அவர்களையும் அவர்களின் கணவர் திரு.குமார் அவர்களையும் ஓய்வெடுக்கச்சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்று நானும் புருசோத்தமன் அவர்களும் இராசமன்னார்குடியைச் சேர்ந்த திரு. இராசகோபால் இல்லம் சென்றோம்.

போகும் வழியில் திரு.புருசோத்தமன் அவர்களிடம் உரையாடியபடியே சென்றேன். திரு.புருசோத்தமன் அவர்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மீன்சுருட்டிக்கு அருகில் உள்ள சலுப்பை என்ற ஊரைச்சேர்ந்தவர் என்றார். மீன்சுருட்டியில் + 2 வில் “ஏ” பிரிவில் படித்தவரா என்றேன். அப்பொழுதுதான் நானும் அவரும் ஒரே காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற நினைவில் மூழ்கினோம். 26 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த எங்களை உருவம் மாற்றியிருந்ததே தவிர உணர்வால் ஒன்றுபட்டோம். என் ஊர்மேலும் எங்கள் பகுதி மக்கள் மேலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு என்று நம்பி வந்த என்னைவிட, ஊர்மேலும் மக்கள் மேலும் மிகுந்த பற்றுக்கொண்டராக திரு.புருசோத்தமன் தெரிந்தார். மேல்மருவத்தூர் அடிகளார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துக் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணிபுரிகின்றார். தம் மகள் பூங்குழலியைத் தமிழிசை அறியும்படி செய்து கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சார்ந்து சில இசைக்குறுவட்டுகளைத் தம் சொந்த பொறுப்பில் வெளியிட்டுள்ளார் என்று அறிந்து வியந்தேன்.பின்னும் இவர் பற்றிய நினைவுகளை எழுதுவேன்.

இராசமன்னார்குடி இராசகோபால் அவர்கள் எங்கள் வருகைக்காகக் காத்திருந்தார். அனைவரும் அறிமுகமாகி உரையாடினோம். குளித்து முடித்து நன்கு ஓய்வெடுக்கும்படி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.மூர்த்தி அவர்கள் அன்புக்கட்டளையிட்டிருந்தார்.அவருக்காக அரைமணிநேரம் ஓய்வெடுத்தேன்.

என் வருகை சிங்கப்பூரிலிருந்த என் நண்பர்கள் பலருக்கும் தெரிந்தது.எனவே பலரும் தொடர்புகொண்டவண்ணம் இருந்தனர். மலேசியாவிலிருந்து ஆசிரியர் திரு.முனியாண்டி அவர்கள் தொடர்புகொண்டு என்னை மலேசியாவுக்கு அழைத்துச்செல்ல இன்று வருவதாக உரைத்தார்.பொறியாளர் அத்திக்காடு இரவிச்சந்திரன் அவர்களும் என்னைச் சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தினார்.

நானும் இராசமன்னார்குடி இராசகோபால் அவர்களும் பாவாணர் பற்றாளர் ஐயா கோவலங்கண்ணன் அவர்களைக் கண்டு உடல்நலம் வினவச்சென்றோம். கோவலங்கண்ணன் அவர்கள் பாவாணரின் நூல்கள் வெளிவருவதற்குப் பல வகையில் உதவியவர். பாவாணரின் வறுமைச்சூழலை நேரில் கண்டு தாம் அணிந்திருந்தவற்றை அப்படியே கழற்றி வழங்கிய குமண வள்ளல். அவர் அண்மையில் நெஞ்சாங்குலை அறுவைப்பண்டுவம் செய்துகொண்டவர். அவரின் கால் பகுதி இயல்பாக இயங்கத் தடையாக உள்ளதை முன்பே எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். உடன் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஓமியோ மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களிடம் பேசி ஐயா கோவலங்கண்ணன் அவர்களுக்கு ஒரு மாதத்துக்குரிய மருந்துகளை இருகிழமைக்கு முன்பே வாங்கி சென்னையில் இருந்த ஐயாவின் மகன் பொற்கைப்பாண்டியன் வழியாக அனுப்பினேன். இதுபற்றியெல்லாம் பேசி ஐயாவுக்கு அன்புமொழிகள் சொல்லவும் இச்செலவை யான் அமைத்துக்கொண்டேன்.

ஐயாவிடம் நான் அவருக்குப் படையல் செய்த நாட்டுப்புறவியல் நூலின் கூடுதல்படிகளை வழங்கி மகிழ்ந்தேன். ஐயாவும் உரையாடி எங்களுக்குப் பிரியா விடைகொடுத்தார்கள். அங்கிருந்து மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஒத்திகைக்காக நாங்கள் விழா நடைபெறும் புக்கிட் பாஞ்சாங் திறந்தவெளி அரங்கிற்குச் சென்றோம்.

தஞ்சாவூர் சின்னப்பொண்ணுவும் வந்து சேர்ந்தார். இசைக்குழுவுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டோம்.ஒத்திகை இரவு 9 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் கணிப்பொறித்துறைப் பொறியாளர் திரு.நிலவன் என்னைக் காண வந்தார். அவருடன் பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாடினோம். பல அன்பர்கள் வந்து இணைந்தனர். எங்கள் ஊர் சேர்ந்த பொறியாளர் முத்துமாணிக்கம் அவர்கள் புதியதாக அறிமுகம் ஆனார். அவர் மகிழ்வுந்தில் திரு.இராசகோபால் அவர்களின் இல்லம் வந்தபொழுது இரவு பன்னிரண்டரை மணியிருக்கும். பிறகு ஓய்வெடுதேன்.

இன்று மாலை பொங்கல் விழா நிகழ்ச்சி முடிந்ததும் நாளை மலேசியா செல்கின்றேன். மலேசியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்குரிய வாய்ப்பினைப் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்களும் மறுநாள் சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்ற திரு.மாரியப்பன் ஆறுமுகம் அவர்களும் ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s