என் மேல்நிலைக்கல்வி நினைவுகள்…

வழமையானது


அரசு மேல்நிலைப்பள்ளி,மீன்சுருட்டி(முகப்பு வாயில்)

உள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தபொழுது(1982) பத்தாம் வகுப்பில் 322/500 என்ற நிலையில் என் மதிப்பெண் இருந்தது.

என் தந்தையார் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பப் படிவம் வாங்கிவந்தார்.நிறைவு செய்து அனுப்பினோம்.ஒரு நாள் பிந்தி அனுப்பியதால் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பினர்.

பல ஊர்களில் இருந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கும்(ஐ.டி.ஐ) விண்ணப்பித்தோம்.
எங்கிருந்தும் அழைப்போலை வரவில்லை.எப்படியாவது ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்ததாக என் தந்தையார் கருதியிருந்தார்.அவர் முயற்சியை
அத்துடன் நிறைவுசெய்துகொண்டார்.

எங்கள் ஊருக்கு அருகில் இருந்த மேல்நிலைப்பள்ளிகள் இரண்டு. ஒன்று செயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி. மற்றொன்று மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.இந்த ஆண்டு தேர்ச்சி முடிவு செயங்கொண்டம் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாக இல்லை.தேர்வெழுதிய பலரும் தோல்வி கண்டனர்.மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய பலரும் தேறியிருந்தனர். எனவே எங்கள் பகுதியிலிருந்து மீன்சுருட்டிக்கு மேல்நிலைக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியானது.என்னுடன் பத்தாம் வகுப்பு பயின்ற சில மாணவர்களின் குடும்பத்தினர் பொருள்வளம், உலகியல் அறிவு பெற்றவர்களாக இருந்ததால் திருச்சிராப்பள்ளி,அரியலூர் என்று வெளியூர்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தவர்களும் உண்டு.

என் தந்தையார் என்னை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியில்(+2) கொண்டுபோய் சேர்த்துவிட்டார்(1982 சூன் அளவில் ).எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் சற்றொப்ப 12 கல் தொலைவு இருக்கும்.நான் மிதிவண்டியில் போய்வரலாம் என்பது எங்கள் நினைவாக இருந்தது.

தொடக்கத்தில் சில நாள் பேருந்துகளில் வீட்டிலிருந்து அருகில் உள்ள குருகாவலப்பர் கோயில் பேருந்து நிலைக்கு(இரண்டு கல்தொலைவு) நடந்து வந்து மீண்டும் பேருந்தேற வேண்டும்.குருகாவலப்பர்கோயில் பிற ஊர்களுக்குச் செல்லும் முனையாக இருந்தது.அருகில் உள்ள ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் மிதிவண்டியில் குருகாவலப்பர்கோயில் வந்து சேர்வார்கள். அவர்களை வைத்து மிதித்துச்செல்லவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அவர்கள் மிதிவண்டியில் நான் செல்வதும் உண்டு.

குருகாவலப்பர்கோயிலில் புறப்படும் எங்கள் மிதிவண்டி கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாள் நல்லூர்,முத்துச்சேர்வார்மடம் வழியாக நுழைந்து மீன்சுருட்டி சந்தை வழியாகத் தார்ச்சாலையை அடைந்து, பள்ளிக்குச் செல்வோம். திரும்பும்பொழுது சில நாள் அதே குறுக்கு வழியில் வருவோம்.பல பொழுது மீன்சுருட்டி-நெல்லித்தோப்பு-குறுக்குச்சாலை-கங்கைகொண்டசோழபுரம்-குருகாவலப்பர்கோயில் வழியே உள்கோட்டை வந்து சேர்வதும் உண்டு.

பேருந்திலும், மிதிவண்டியிலும் செல்வது என் இயல்பாகிவிட்டது.சிலநாள் இரண்டும் இல்லாதபொழுது 12 கல்தொலைவும் குறுக்கே நடந்துபோனதும் உண்டு.திரும்பி வந்ததும் உண்டு.

மழைக்காலங்கள் என்றால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.குடையும் இல்லை. புத்தகச்சுவடிகள் நனையாமல் இருக்க ஞெகிழ் பைகளில் உள்ளிட்டுச் செல்வதும் உண்டு. இப்பொழுது மகிழ்வுந்துகளில் செல்லும்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு என் கடந்து வந்த பாதைகளைக் காட்டி நினைவூட்டுவது உண்டு.

பள்ளியில் மாணவர்கள் நீலம் வெள்ளைநிறச் சீருடை அணிதல் வேண்டும்.பல மாணவர்களால் சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.
எங்கள் உடற்கல்வி ஆசிரியர் பட்டாளத்து வீரர்போல் புதியதாகப் பணிக்கு வந்தார்.அவர் மிகவும் கண்டிப்புக்குப் பெயர் போனவர்.நல்ல விளையாட்டு வீரர்.கைப்பந்து,கால்பந்துகளில் வல்லவர்.அவருக்கு இணையாக மாணவர்கள் சிலர் விளையாடுவார்கள்.அவ்வாறு விளையாண்ட மாணவர்கள், அருகில் உள்ள வரதராசன்பேட்டைத் தொன்போசுகோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்களாவர்.

நாங்கள் அந்த அளவு விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்கள்.எங்களுக்கு அதுபோல் விளையாடும் வாய்ப்புகள் அதுநாள்வரை கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் பந்துகளைக் கூச்சமின்றித் தொட்டோம். மாணவர்களிடையே நல்லொழுங்கு ஏற்பட விளையாட்டு ஆசிரியர் பாடுபட்டார்.அவர் ஆர்வத்துக்கும் எங்கள் வறுமைக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் நாளும் அவர் கைகலப்பு நடத்துவார்.அவரைக் கண்டால் சீருடை அணியாத மாணவர்களாகிய நாங்கள் இடிஒலிகேட்ட நாகம்போல் நடுங்குவோம்.(இந்த ஆசிரியர் பின்னாளில் ஒருநாள் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளனாகப் பணியில் இருந்தபொழுது வங்கியில் வரிசையில் நின்றிருந்ததைக் கண்டேன்.அவர் அருகில் சென்று என் நிலை கூறியும் பழையை நிகழ்வுகளைப் பெருமையாகக் குறிப்பிட்டு அவர் கடமையைப் போற்றியும் பேசி அவருக்கு விருந்தோம்பல் செய்து அனுப்பினேன்)இது நிற்க.

மேல்நிலைப்பள்ளியில் நான் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயின்றேன்.தமிழ் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், தாவரவியல்,விலங்கியல் பாடங்கள் இருந்தன.

தமிழ்ப் பாடத்தை நடத்தியவர் சின்னவளையம் என்ற ஊரிலிருந்து வந்த புலவர் வைத்தியலிங்கம் ஐயா ஆவர்.நன்கு தமிழ் பயிற்றுவிப்பார்.வெள்ளுடையில் தோற்றம் தருவார்.
மீசையை மிகச்சிறப்பாக நறுக்கி ஒழுங்கு செய்திருப்பார்.பின்னாளில் அதே பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றதாக அறிந்தேன்.

நான் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயின்றபொழுது, நம் வைத்தியலிங்கம் ஐயா பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வந்திருந்தார்.என்னை அறிந்து அதன்பிறகு என் விடுதி அறையில் தங்கிச்செல்லும் அளவு உரிமை பெற்றிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் ஐயா அவர்களை ஒரு முறை சந்தித்தேன்.தாம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில்கின்றேன் என்றார்.வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்ற வேட்கையுடைவர் ஒருவர் உண்டு என்றால் நான் வைத்தியலிங்கம் ஐயாவைத்தான் சொல்வேன்.

ஆங்கிலப் பாடத்தை நடத்துவதில் திருவாளர் வீராசாமி அவர்கள் புகழ்பெற்றவர்.அவர் எவ்வளவோ எளிமைப்படுத்தியும், ஆங்கிலத்தை எங்களுக்குப் பயிற்றுவிக்க முனைந்தும், முடியாமல் தோற்றார்.ஆம். ஆங்கிலப் பாடம்தான் சிறூர்ப்புற மாணவர்களாகிய எங்களுக்கு எட்டிக்காயாக இருந்தது.தேர்வில் பலரும் தோல்வியுற்றோம்.எங்கள் தவறே தவிர எம் ஆசிரியர் வல்லவரேயாவார். இதுவும் நிற்க.

எங்களுக்கு வேதியியல் பயிற்றுவித்தவர் திரு.கலியமூர்த்தி அவர்கள் ஆவார் (எஸ்.கே.எம்). வேதியியல் கூடத்தில் பல்வேறு வேதிப்பொருட்களைப் பொறுப்புடன் கையாள்வதற்கு எங்களுக்குப் பழக்கம் உண்டாக்கியவர்.வேதியியல் பதிவேடுகளைப் பொறுப்புடன் பாதுகாக்கவும் கிழமைதோறும் கையொப்பம் பெறுவதையும் ஆங்கிலத்தில் அடிக்கடிப் பேசி நினைவூட்டுபவர்.அவர் நடத்திய பல வேதியியல் பாடங்கள் இன்றும் நினைவில் உள்ளன. புன்சன் அடுப்பை எரியூட்டுவதிலிருந்து,பிப்பெட்,பியூரெட்டைப் பயன்படுத்துவது, வேதிப்பொருள்களைக் குடுவையில் இட்டுக் கலக்குவது யாவும் அவர் வழியாக அறிந்தவைதான்.

இயற்பியல் பாடத்தை ஈராண்டு பயிற்றுவித்தவர் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா ஆவர்.கடும் சினம் கொண்டவர்.அவர் உருவத்தைக் கண்டால் ஆண் பெண் அஞ்சி நடுங்குவோம். அவர் முகத்தில் சிரிப்பையே கண்டதில்லை.பாடத்தைப் பொறுப்பாக நடத்துவார். சுவடிகள் உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தளபதிபோல் ஆணையிடுவார். நல்ல வேளையாக அவரின் செய்முறைத்தேர்வில் குவியாடி பற்றிய ஒரு செய்முறையைச் செய்து பிழைத்தேன்.

திரு.வெள்ளைசாமி ஐயாவை எங்களால் மறக்க இயலாது.ஆம்.என் இசையார்வத்துக்கு அவர்தான் முதல் பாராட்டு விழா நடத்தினார்(ஆம். யாருக்கும் தெரியாமல் வகுப்பறையில் ஓர் அணி அமைத்து நாடாப்பதிவுக்கருவியில் பாடல்களைப் பாடிப் பதிவு செய்ய மாணவர்கள் என்னைத் தூண்டினர்.திட்டமிட்டபடி பாடலும் பதிவானது.”நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே” என்ற திரைப்பாடலை நான் இனிமையாகப் பாடினேன். மெல்லிசையாகத் தொடக்கம் இருந்தது.மாணவர்களின் ஊக்குவிப்பால் தெருக்கூத்துக் கலைஞரைப் போல் வேகமான குரலில் பாட வைத்துவிட்டது. நாடாப்பதிவுக்கருவியில் என்குரல் பதிவாகிறது என்ற ஆசையில் திரைப்படப்பாடலைப் பாடியதால் அருகில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த திருவாளர் வெள்ளைச்சாமி ஐயாவிடம் எங்கள் ஒலிப்பதிவு அணி அகப்பட்டது. தலைமைப்பாடகராகிய எனக்குப் பெருஞ்சிறப்பும்(!) பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும்(!) நடந்தது. தலைமையாசிரியர் அறையில் விவரம் அறிந்த ஆசிரியப்பெருமக்கள் ஆர்வமுடன் திரண்டு சிறிய அளவில் மீண்டும் ஒரு மண்டகப்படி நடத்தினர்.)

பின்னாளில்தான் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் தந்தை பெரியார்கொள்கையில் ஈடுபாடு உடையவர் என்பது அறிந்து மகிழ்ந்தேன்.பல திராவிட இயக்கஅரங்குகளில் அவரைக் கண்டுள்ளேன்.

எங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தியவர் மீன்சுருட்டியைச் சேர்ந்த திருவாளர் திருநாவுக்கரசு ஆவார்.அவர் மெலிந்த தோற்றம் உடையவர்.மாணவர்களாகிய எங்களிடத்து மிகுந்த அன்புகாட்டுவார்.செய்ம்முறைப் பயிற்சி அன்று உணவு உண்ணமாட்டாராம்.தவளை அரிந்தது,கரப்பான் பூச்சி அரிந்தது,எலியைக் குளோரோபாமில் மயங்க வைத்து அரிந்தது எல்லாம் திருவாளர் திருநாவுக்கரசர் அவர்களிடம் கற்றேன்.பின்னாளில் நான் திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுதும் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்றும் மீன்சுருட்டியில் நலமுடன் இருப்பதாக என் நண்பர்கள் சொல்வார்கள்.

தாவரவியல் பாடம் நடத்திய ஆசிரியர் வானதிரையன்பட்டினம் சார்ந்த திருவாளர் அண்ணாமலை அவர்கள் ஆவார்.பெருந்தன்மையுடன் செலவு செய்வார்.வெள்ளைவேட்டியில் அவர் நடக்கும் அழகு தனித்துச்சுட்டவேண்டியது. அவர் சட்டைப்பையில் நூறு உருவா புதிய தாள்கள் படபடக்கும்.வெண்சுருட்டுக்குக்குட ஒரு புதிய தாளை எடுத்து நீட்டுவார். அந்தத்தாளில் அவரின் செல்வச்செழிப்பு சிரிக்கும்.

எங்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றாலும் நன்கு அறிமுகமான ஒரு பெயர் இலட்சுமணன் ஆசிரியர் ஆவார்.

மீன்சுருட்டிப் பகுதி எப்பொழுதும் சாதியப்பூசல்களுக்கு எளிதில் ஆட்படும் ஊராகும்.குறிப்பிட்ட சமூக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதிப்பெருமை காரணமாக அடிக்கடி கைகலப்பில் இறங்குவர்.உயிரிழப்புகளில் போய் முடிவதும் உண்டு.பேருந்துகளை மறிப்பது,அடித்து நொறுக்குவது அவ்வப்பொழுது நடக்கும்.ஆசிரியர்களும் சூழல் அறிந்து பக்குவமாக நடந்துகொள்வார்கள்.இந்தச்சூழலில் அனைத்து இன மக்களும் மதிக்கும் ஒருவராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பதால் பலர் பகல் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் திரையரங்கிற்குச் செல்வதுண்டு.அப்பொழுதுதான் மீன்சுருட்டியில் நல்லையா திரையரங்கம் வனப்புடன் கட்டப்பட்டு நல்ல நிலையில் இயங்கியது.புதிய படங்கள் காட்டப்படும். அந்தத் திரையரங்கில் மாணவர்கள் வாய்ப்பாகப் படம் பார்க்கச் செல்வார்கள்.நம் ஐயா இலக்குமணன் அவர்களுக்கு நண்பர்கள் பலர் அந்தத் திரையரங்கில் இருந்தனர்.அவர்களின் ஒத்துழைப்புடன் ஐயா அவர்கள் திரையரங்கில் உள்ளே இருந்துகொண்டு, திரையரங்குக்கு வரும் மாணவர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் செய்வார்.அவரின் கண்டிப்பை எந்தப் பெற்றோரும் பகையுடன் பார்ப்பதில்லை.அனைவரும் மதிக்கும் நல்லாசிரியராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.

பள்ளி ஆண்டு விழா என்றால் சில ஆசிரியர்கள் பாடல்,நாடகம் இவற்றிற்குப் பயிற்சியளிப்பார்கள். திரு.அழகர் என்று ஒரு தமிழய்யா இருந்தார்.அவர் நன்கு பாடுவார். பாடல்களைப் பயிற்றுவிப்பார்.நான் சில போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றேன். பாட்டுப்போட்டி,கட்டுரைப்போட்டி,பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்கியமைக்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன.ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன்.அல்லது எடுக்கப்பெற்ற படங்களை நான் வாங்காமல் இருந்தேனா என்றும் நினைவில் இல்லை.

பள்ளி ஆண்டுவிழாவில் நான் சாக்ரடீசாக நடித்த ஒரு நாடகம் அரங்கேறியது.
எங்களுக்குப் பரிசு கொடுக்காத நடுவர்களை இன்றும் திட்டித் தீர்ப்பது உண்டு.
தாடிக்காக நான் புதுச்சாவடி சென்று கற்றாழை நார் வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.
நீதிபதி உடைக்காக ஒரு வக்கீலிடம் கறுப்பு அங்கி வாங்கி வந்தோம்.அந்த வழக்கறிஞரின் எழுத்தர் எங்களுடன் வந்து கறுப்பு அங்கியைப் பாதுகாப்பாக வாங்கிச் சென்றார். சிற்றூரில் பட்டுச்சேலை இரவல் வாங்கிய பெண் நிலை எங்களுக்கு. நான் படிக்க நினைத்தது அந்தக் காலத்தில் சட்டப்படிப்புதான்.அது நிறைவேறாமல் போனது.

அதற்கு முன்பாக நான் பட்டாளத்துக்குப் போகப் பயிற்சியில் ஈடுபட்டதும் உண்டு.ஒருமுறை திருச்சியில் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தார்கள்.அதில் கலந்துகொண்டேன்.நாள் முழுவதும் அரைகுறை உடையில் அமர்ந்து ஒருமுறை இராணுவக்கல்லூரியின் விளையாட்டிடத்தை ஓடிச் சுற்றி வந்தோம்.ஒரு கிலோ எடை குறைவாக இருக்கின்றேன் என்று திருப்பியனுப்பி, ஒரு மாதத்தில் வருக என்றனர்.அந்தக் கனவும் நடக்கவில்லை.

மீன்சுருட்டியில் மெகராஜ் என்று உணவகம் இருந்தது.பரோட்டோ அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும்.மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடைக்குக் கையில் கொண்டுவரும் உணவுக் குவளையுடன் சென்று உண்டு, சில பரோட்டாக்களையும் கூடுதலாக வாங்கி உண்டு வருவோம்.பகல் நேரத்தில் மாணவர்களின் ஆதிக்கம் மீன்சுருட்டிக் கடைத்தெருக்களில் இருக்கும்.கடைக்காரர்கள் எங்களை அன்புடன் நடத்துவார்கள்.

முதலாண்டு,இரண்டாமாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடந்தன.இரண்டாம் ஆண்டில் எப்படியாவது தேறிவிட வேண்டும் என்று அனைத்து வழிகளையும் பின்பற்றிதான் தேர்வு எழுதினோம்.

என் குடும்பச்சூழல்,நெடுந்தொலைவு நடந்தே வந்து படிக்க வேண்டிய நிலை யாவும் என்னை அழுத்தித் தேர்வில் தோல்வியடையும் நிலைக்கு என் கல்வி நிலை அமைந்துவிட்டது
தேர்வில் தோல்வி என்றதால் குடும்பம்,உறவினர்.நண்பர்கள் யாவரும் ஆறுதல்கூட சொல்ல வில்லை.மாறாகத் திட்டித் தீர்த்தனர்.விருத்தாசலம் நடுவத்தில் தோற்றவர்கள் எழுதினால் தேறலாம் என்றனர்.விருத்தாசலத்தில் தனித்தேர்வு எழுதினேன்.மீண்டும் மீண்டும் பல முயற்சிகளுக்குப் பிறகு தேறினேன்.மேல்நிலைக்கல்வி எனக்குத் தடைக்கல்லாக இருந்தது. மூன்றாண்டுகள் என் படிப்புக்குத் தடைவிதித்தது.இந்த நேரம் பார்த்து என் தந்தையார் என் தலையில் குடும்பப்பொறுப்புகளை ஒப்படைத்தார்.எனக்காக ஒரு சோடி மாடு வாங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்ததற்குத் தண்டனையாக வயல்வெளிகளில் உழன்றேன்.

வயல்வெளி எனக்கு நிறையக் கற்றுத்தந்தது. கவிதை எழுதினேன். உறவுகளைப் பற்றி அறிந்தேன்.இயற்கை வாழ்க்கை வாழ்ந்தேன்.வயல்வெளியை என்னால் மறக்கமுடியாது.ஆடு மாடுகளுடன் ஒரு நேச வாழ்க்கை வாழ்ந்தேன்.விதைப்பது தொடங்கி அறுப்பது வரை வேளாண்மையின் அனைத்துக்கூறுகளையும் கற்றேன்.பலதரபட்ட மக்களிடம் பழகினேன். உழவுத்தொழிலில் பயன்படுத்தப்பட்டும் ஓராயிரம் தமிழ்ச்சொற்களை அறிந்தேன்.இது பின்னாளில் நான் ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பயன்பட்டது.

வயல்வெளிகளில் நடவுப்பாடல்களையும் ஒப்பாரிப்பாடல்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென்மொழி என்னும் இலக்கிய ஏடு வயல்வெளி உழவனாக நான் இருந்தாலும் ஒரு கல்லூரி ஆசிரியருக்குத் தெரிவதைவிட மிகுதியான தமிழைத் தந்தது. பண்ணேர் உழவனாகவும் மின்னேர் உழவனாகவும் பின்னாளில் மாறப்போவதை இந்த மண்ணேர் உழவனுக்கு இயற்கை கற்றுத் தந்தது.

வயல்வெளிகளில் முளைத்த இந்தக் காட்டுச்செடி பின்னால் தன்னைப் பாதுகாத்த வயல்வெளியை மறக்காமல் நன்றியறிதலாக ஒரு நினைவை வரலாற்றில் பதித்தது.ஆம் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளை வயல்வெளி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோட வழி செய்தது.
ஆம்.
தமிழ் நூல்களை வெளியிடும் எங்கள் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகமாக மலர்ந்தது இப்படித்தான்.
பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகில் வயல்வெளிக்கென ஒரு வரலாற்றைத் தேடிக்கொண்டது.
வயல்வெளி இயற்பெயரல்ல.
இது காரணப்பெயர் எனலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s