தமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் முஸ்தபா!

வழமையானது


திரு.முஸ்தபா

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் முஸ்தபா.

ஆம். நாணயமாற்று நிறுவனங்களில் உலக அளவில் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஏசியன் எக்சேஞ்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தும் முஸ்தபா அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும். இப்பொழுது தொழில் நிமித்தமகாச் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று இருக்கின்றார்.பணம் மாற்று(money exchange) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.உலக அளவில் தரமான தங்கம் பற்றி நன்கு அறிந்தவர்.தமிழகத்திலும் இவருக்குப் பல நிறுவனங்கள் உண்டு.அடிக்கடித் தமிழகத்திற்கு வந்து தமிழக உறவுகளைப் போற்றி வருகின்றார்.சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களைத் தொடங்கி நடத்துவதுடன் உலகின் பல நாடுகளில் இவரின் நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் அறிமுகமாகியிருக்கும் இவர் தன்னம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லவர்.சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்ப்பணிகளில் முன்னிற்பவர்.அயராத உழைப்பும், நிர்வாகத்திறமையும், பேச்சு வன்மையும்,பழகும் பண்பும்கொண்டவர். தமிழில் பேசுவோம் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்ப்பணிபுரியும் இவரின் வாழ்க்கை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டானதாகும்.முஸ்தபாவுடன் உரையாடியதிலிருந்து…

உங்களின் இளமை வாழ்க்கை பற்றி…

முத்துப்பேட்டையில் அப்துல்காசிம், ரஹ்மத் அம்மாள் ஆகியோர்க்கு மகனாக நான் 18.08.1949 இல் பிறந்தேன். எங்களின் முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் சிறந்திருந்தாலும் தந்தையார் எளிய நிலையில் வணிகம் நடத்திவந்தார். தந்தையார் அப்துல்காசிம் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வணிகம் செய்வதற்காகச் சென்று வந்தவர். எங்களின் குடும்பத்திற்கு ‘நகுதா குடும்பம்’ என்று பெயர்(நகுதா என்றால் பாய்மரக்கப்பல் என்று பொருள்.எங்கள் முன்னோர்கள் பாய்மரக் கப்பலில் வணிகம் செய்தவர்கள் ).எங்களின் தந்தையார் 1920 அளவில் மலேசியா சென்று வணிகம் செய்தவர்.


திரு.முஸ்தபா

நான் முத்துப்பேட்டையில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன்.அதன் பிறகு அண்ணனின் அறிவுரைப்படி 1966 இல் சென்னைக்கு வணிகத்திற்கு வந்தேன்.மயிலாப்பூர் பகுதியில் ‘டாலர் ஸ்டோர்’ என்ற பெயரில் ஒரு கடையை நடத்தினோம்.எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருள்கொண்ட பொதுவணிகக்கடை அது. வணிகம் சரியாக நடைபெறாததால் நான்கு ஆண்டுகளில் கடையை இழுத்து மூடவேண்டியநிலை.இல்லை.கடை தானே மூடிக்கொண்டது.

கடை வைத்து முன்னேறலாம் என்று நினைத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அப்துல் கறீம் என்ற பொறியாளருடன் இணைந்து ‘ஹாரிஸ் கன்ஸ்ட்ரக் ஷன்’ என்ற பெயரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டேன்.எதிர்பார்த்த முன்னேற்றம் அதிலும் இல்லை. என் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. கனவுகளுடன் ஊரிலிருந்து வந்த எனக்கு எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் என் உடன் பிறந்தவர்கள் சிங்கப்பூர் சென்று வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தோல்வியில் துவண்ட நான் இசுலாமிய மார்க்க நூல்களைப் படிப்பதும் இறை ஈடுபாட்டில் திளைப்பதுமாக இந்தக் காலகட்டத்தில் இருந்தேன்.

உங்கள் உடன் பிறப்புகள் பற்றி..

என் பெற்றோர்களுக்கு ஒன்பது குழந்தைகள்.முதல் இருவர் பெண்குழந்தைகள்.அடுத்தவர் அண்ணன் யாகூப்.அவரையடுத்து யூசுப். பின்னர் கமால்,பக்ருதின் என்ற இரட்டையர்கள். அவர்களுக்கு அடுத்து நான்.எனக்குப் பின்னர் தங்கை ஒருவர். அடுத்துத் தம்பி தமீம். தந்தையார் 1975 இல் இயற்கை எய்தினார். குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டது.மற்ற சகோதரர்கள் வசதியுடன் இருந்தனர்.ஆனால் வேலையில்லாமல் இருந்தவன் நான். என்றாலும் பாகப்பிரிவினையால் குடும்பத்தில் அமைதி குலையக்கூடாது என்று பெருந்தன்மையாகத் என் பங்கின் சில பகுதிகளை உடன்பிறப்புகளுக்கு விட்டுத் தந்து அமைதியாகப் பாகப்பிரிவினையை முடித்தேன்.

தங்கள் இல்லறவாழ்க்கை பற்றி…

1976 இல் எனக்குத் திருமணம். கதீஜா நாச்சியா என்னும் அம்மையாரை மணந்துகொண்டேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் இருவரும் பெண் குழந்தைகள் மூவரும் பிறந்தனர். ஆண்மக்கள் என் வழியில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் வாழ்க்கை பற்றி…

1978 அளவில் நான் சிங்கப்பூர் சென்று பணமாற்றுத்தொழிலில் உடன்பிறந்தாருடன் ஈடுபட்டேன்.அண்ணன் யாகூப் அவர்கள் பல்பொருள் அங்காடிக் கடையைக் கவனிக்கத், தம்பியுடன் இணைந்து பணமாற்றுத் தொழிலில் ஈடுபட்டேன். பணமாற்று இன்று வானுயர் கட்டடங்களில் மிகப்பெரியத் தொழிலாக நடந்தாலும் அன்று சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகில் கப்பலில் வரும் பயணிகள்,மாலுமிகளுக்கு உரியப் பணமாற்று இடமாக ‘சேஞ்ச் அலி’ என்னும் இடம் விளங்கியது.அங்குதான் நானும்-தம்பி தமீமும் இணைந்து பணமாற்று வணிகத்தைத் தொடங்கினோம்.1980 இல் என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.பணமழை பெய்யத் தொடங்கியது.மிகப்பெரிய அளவில் வணிகம் சூடுபிடித்தது.அடுக்கடுக்காகத் தொழிலில் இலாபம் ஈட்டினேன். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றேன்.

நான் சம்பாதித்த பணத்தை உரியவகையில் செலவிடும் எண்ணம் ஏற்பட்டது. மொழிப்பணிக்கும், சமயப்பணிக்கும், கல்விப்பணிக்கும் என் பொருளை மகிழ்ச்சியுடன் செலவிட முடிவெடுத்தேன்.

தங்களின் அறக்கட்டளை பற்றி சொல்லுங்களேன்.

சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இலக்கியப் பாலம் அமைக்கும் விருப்பம்கொண்டு “முஸ்தபா தமிழ் அறக்கட்டளை” என்ற அமைப்பை 2001 இல் ஏற்படுத்தினேன். பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சிங்கப்பூர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஓர் ஆய்விருக்கை உருவாக்கினேன்.அந்த ஆய்விருக்கையில் தொடர்ந்து சிறப்பாக ஆய்வு நடைபெற இருபது இலட்சம் உரூவாவினுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பங்குகளை வாங்கித் தந்துள்ளேன். அத்தொகை வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய ஆய்வு தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உண்டு.

மேலும் சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தையும் திரட்டித் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனியாக வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்,தமிழறிஞர்களுக்கு உதவி செய்தல்,ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது இந்த அறக்கட்டளையின் பணிகளில் குறிப்பிடத்தகுந்தது.

சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன். சிங்கப்பூரில் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு இயன்ற வகையில் பொருளுதவி செய்துவருகின்றேன். மேலும் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஆண்டுதோறும் தேர்வு செய்து கரிகாலச் சோழன் தங்கப் பதக்க விருது வழங்கிப் பாராட்டுவதையும் முஸ்தபா அறக்கட்டளை கடமையாகக் கொண்டுள்ளது. தி சிராங்கூன் டைம்ஸ்(The serangoon Times) என்ற தமிழ் மாத இதழையும் நடத்தி வருகின்றோம்.

தங்களின் சமயப்பணி பற்றி…

இசுலாமிய நெறிகளைத் தமிழில் எடுத்துரைக்கும்வகையில் தமிழில் நூல்கள் இல்லாத குறை உண்டு.எனவே இசுலாமியத் தமிழ்நூல்களை வெளியிடச் சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையை நிறுவியுள்ளேன்.இவ்வறக்கட்டளையின் சார்பில் இயங்கும் பதிப்பகம் திருக்குர்ஆன் நூலினை அரபி மூலத்துடன் வெளியிட்டுள்ளது. மேலும் முகமது நபிகளின் பொன்மொழிகளை வெளியிடும் முயற்சியிலும் முன்னிற்கின்றது. நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இசுலாமிய நூல்கள் விற்பனை செய்யும் தரமான விறபனை மையத்தையும் இந்த அறக்கட்டளை நடத்த உள்ளது.

தங்களுக்குக் கல்விப்பணியில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

எதிர்காலத்தை நான் திட்டமிட்டுச் செயல்படுவது வழக்கம். எனவே என் பிறந்த ஊரில் வரும்பொழுது தங்குவதற்குப் பெரியவளமனைகளைக்(பங்களா) கட்டுவதை விரும்பாமல் பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபட்டேன்.ஊரில் முசுலிம்பெண்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட இனப் பெண்களும் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதனையறிந்து ஒரு பள்ளியை நிறுவினேன்.என் தாயர் ரஹ்மத் அவர்களின் பெயரில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் 1996 முதல் பள்ளி செயல்பட்டு வருகின்றது.

இயற்கை எழிலுடன் விளங்கும் பள்ளியில் தோப்புகளும்,தேக்குமரங்களும் அழகுடன் காட்சி தருகின்றன. மா, கொய்யா, வாழை,தென்னை உள்ளிட்ட மரங்களின் காய்,பழங்களைப் பறிக்காமல் அதனை இயற்கையாகப் பறவைகள்,விலங்குகள் உண்ணுவதற்கு வழிகண்டுள்ளேன்.


பதின்நிலைப் பள்ளி

எங்கள் பள்ளியில் ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் 150 மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.இசுலாமியப் பெருமக்கள் தங்கள் பெண்குழந்தைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை. அதுபோல் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை.இதனை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக இந்தப் பள்ளியை உலகத் தரத்திற்கு நடத்துகின்றேன்.இந்தப்பள்ளியில் மாணவிகள் அதிக அளவில் முசுலீம்களாக இருந்தாலும் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து,கிறித்தவர்களே ஆவர். இந்து,கிறித்தவ சமயம் சார்ந்த மாணவிகளும் படிக்கின்றனர்.அனைத்து மத்தினரும் கைகோர்த்துக் கல்வி பயிலும் இத்தகு பள்ளி தமிழகத்தில் வேறு இல்லை எனலாம்.


மகளிர் பள்ளிவாசல்

பெண்கள்,மாணவிகள் மட்டும் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் பள்ளியில் உண்டு.மதத்திணிப்புக்கு இங்கு வழியில்லை.விரும்பியவர்கள் விரும்பிய வகையில் வழிபாடு நடத்தலாம்.பள்ளிக்கட்டணம் யாவும் மற்ற இடங்களை நோக்கக் குறைவாகவே உள்ளது.காற்றோட்டமான அறைகள்,போக்குவரத்து வசதிகள்,பணியாளர்களுக்குப் பணிப்பாதுகாப்பு யாவும் செய்துள்ளேன்.

தங்களின் தமிழ் ஆர்வம் பற்றியும் சமய ஈடுபாடு பற்றியும் கூறவும்…

எந்த வகையான மதமாச்சரியத்துக்கும் நான் இடம் தருவதில்லை.மதச்சின்னங்களும் அணியாமல் வாழ்ந்து வருகிறேன். தமிழ்க் கவிஞர்களிடத்து எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.கவிஞர்கள் வைரமுத்து,அப்துல் ரகுமான்,ஈரோடு தமிழன்பன்,மேத்தா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதை இயல்பாகக் கொண்டுள்ளேன்.அதுபோல் சிங்கப்பூருக்கு வரும் தமிழறிஞர்களைக் கௌரவிப்பதிலும் நான் முன்னிற்பது உண்டு.

இசுலாமிய நெறியை வாய்ப்பேச்சாக்கிக் கொள்ளாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். தமிழை விளம்பரப் பொருளாக்காமல் வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் பின்பற்றுகிறேன்.என் பிள்ளைகள் வீட்டில் தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்.வீட்டில் தமிழ் பேசினால்தான் நாட்டில் தமிழ் வாழும்.தமிழர்களாக வாழமுடியும்.மொழியை இழந்தால் பண்பாட்டை இழப்போம்.தமிழை இழந்தால் அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அமர்ந்துகொள்ளும்.ஆங்கிலப்பண்பாடு நடைமுறைக்கு வரும். ஆங்கிலப் பண்பாட்டைப் பின்பற்றினால் வேரை மறந்தவர்களாக மாறிவிடுவோம்.ஆங்கிலம் மூக்குக் கண்ணாடி போன்றது.தேவையென்றால் கழற்றி வைத்துக்கொள்ளலாம்.தமிழ் கண் போன்றது.கழற்றி வைக்கக்கூடாது.


மு.இளங்கோவன்,முஸ்தபா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s