என் மேலைப்பெருமழைச் செலவு

வழமையானது


பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திருத்துறைப் பூண்டிக்குப் பேருந்தேறினேன்(31.07.2010).முத்துப்பேட்டையில் நண்பருடன் உரையாடிய பல செய்திகளை அசைபோட்டபடி பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது இந்தப் பகுதியில்தானே பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் ஊர் உள்ளது என்று.அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரை வினவினேன். மேலைப்பெருமழைக்குப் போக வழி உங்களுக்குத் தெரியுமா? என்றேன். உடன் மகிழ்ச்சியடைந்த அவர் அடுத்த பேருந்து நிறுத்தம் பாண்டி என்பதாகும். அங்கு இறங்கிச் சென்றால் எட்டு கி.மீ தூரத்தில் மேலைப்பெருமழை உள்ளது என்றார். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து செல்வதாகவும் விரைந்து போகவேண்டும் என்றால் தானி அங்கு நிற்கும். அதில் செல்லலாம் என்று கூறினார். நடத்துனரிடமும் உறுதி செய்துகொண்டேன். பிறகு என்ன?

பாண்டி என்ற ஊரில் பேருந்திலிருந்து இறங்கினேன். என்னுடன் அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவரும் இறங்கினார். வேட்டி, சட்டை அணிந்து துண்டும் அணிந்திருந்தார். சமூகத்தில் மதிக்கத்தகுந்த தோற்றம். அவரை வினவினேன். நான் புதுச்சேரியிலிருந்து வருகின்றேன் எனவும் மேலைப்பெருமழைப் புலவர் பற்றி ஆய்வு செய்து வருகின்றேன் எனவும் கூறினேன்.

மகிழ்ச்சியடைந்த அவர், தாம் அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன் எனவும் தற்பொழுது ஊராட்சிமன்ற உறுப்பினராக உள்ளேன் எனவும் கூறியதுடன், பெருமழைப்புலவர் மேல் அளவுகடந்த பாசம் உடைய நாச்சிக்குளத்தார் அவர்களை இப்பொழுதுதான் கண்டேன் எனவும் அவரைக் கேட்டால் பெருமழைப்புலவர் பற்றி அறியலாம் எனவும் கூறினார். அத்துடன் புலவர் நாச்சிக்குளத்தாரைச் சந்திக்கவேண்டிய அவர் விருப்பத்தையும் தெரிவித்தார்.

அவர் கருத்தில் எனக்கு உடன்பாடு என்றாலும் நான் முதலில் பொ.வே.சோமசுந்தரப் புலவர் பிறந்த ஊரினைப் பார்வையிடவும், அவர் பிள்ளைகள் பற்றி அறிவதையும் முதன்மை நோக்கமாக நினைத்தேன்.பின்னர் நாச்சிக்குளத்தார் உள்ளிட்ட புலவருடன் பழகிய அன்பர்களைக் கண்டு மகிழ நினைதேன். ஏனெனில் நான் பாண்டியில் இறங்கியபொழுது பகல் மணி மூன்று இருக்கும். பொழுதுக்குள் என் பணி முடித்துக்கொண்டு இரவே நான் புதுச்சேரி திரும்பியாதல் வேண்டும். எனவே நான் மேலைப்பெருமழை செல்வதற்குப் பரபரப்பாக இருந்தேன்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் ஐயா அவர்கள் அருகில் இருந்த ஒரு தானி ஓட்டுநரை வினவி என்னை மேலைப்பெருமழையில் கொண்டுபோய்ப் புலவர் இல்லத்தில் விடவும், அங்கு உரையாடிய பிறகு மீண்டும் அழைத்துவரவும் சொன்னார். அங்கு வந்த ஓரிருவரிடம் தானி ஓட்டுநர் புலவர் குடும்பம் பற்றிய செய்திகளைப் பெற்றுக்கொண்டார். தானி இப்பொழுது மேலைப்பெருமழைக்கு விரைந்தது. வயல்வெளிகள் உழுது கிடந்தன. இடையில் தென்பட்ட சில ஊர்ப்பெயர்கள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி புதினத்தில் இடம்பெற்ற பெயர்களாகத் தெரிந்தன.

தானி ஓட்டுநரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். என் பணிநிலை, ஆய்வு ஆர்வம் கூறியதும் தானி ஓட்டுநரும் மெதுவாக அவர் மனம் திறந்தார். அவர் பெயர் திரு.பழனி என்பதாகும். தமிழ்ப்பற்றுடைய குடும்பம் சார்ந்தவர். தமிழ் படிக்க நினைத்தவர். வீரவாள் என்ற சிற்றிதழ் நண்பர்களுடன் இணைந்து நடத்தியவர். இந்த இதழ் இடையில் நின்றதாம். தம் தமிழ் படிக்கும் விருப்பம் நிறைவேறாததால் தம் மகளைத் தமிழ் படிக்க வைத்துள்ளேன் என்றார். மகிழ்ந்தேன்.

மேலும் தம் சிறிய தந்தையார் திருப்புகழில் நல்ல பயிற்சியுடையவர் என்றும் திருமுருக கிருபானந்தவாரியாரால் சிறப்பிக்கப்பெற்றவர் என்றும் கூறினார். பழனி அவர்களின் பிறந்த ஊர் குன்னலூர் என்றார்.அவ்வூர் குன்னலூர் என்று பெயர்பெற்றமைக்கான காரணம் கூறினார். அருகில் இடும்பாவனம் என்ற ஊர் பாடல்பெற்ற ஊராக உள்ளதையும் கூறினார். ஔவையார் சிலை அந்தப் பகுதியில் உள்ளதாகவும் கூறினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தப் பகுதி பசுமையுடன் இருக்கும் என்றார். தண்ணீரின் வருகைக்கு வயல்வெளிகள் காத்துக்கிடந்தன. கோடை உழவு செய்து வைத்துள்ளனர்.கண்ணுக்கு எட்டியதூரம் வயல்வெளிகளே காட்சி தந்தன.

மேலைப்பெருமழைக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இருபது கல் தொலைவு. அதனைப் பெருமழைப் புலவர் உள்ளிட்ட மக்கள் அந்தக் காலத்தில் நடந்தே அடைவார்களாம். வயல் வரப்புகளில்தான் முன்பு நடந்து செல்லவேண்டியிருந்ததாம். அண்மையில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த திருவாளர் இராசமாணிக்கம் அவர்களின் காலத்தில்தான் ஊருக்குப் பல நல்ல வசதிகள் கிடைத்தன என்றும் அறிந்தேன். திருவாளர் இராசமாணிக்கனார் எளிய நிலையிலிருந்து மக்கள் மதிக்கும் தலைவராக உயர்ந்தவர். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பேருள்ளத்தினர். இவர் ஊருக்கு வேண்டிய பல நல்ல செயல்களைச் செய்ததால் குடியரசுத்தலைவரின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மனைவியார் இப்பொழுது ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளதாக அறிந்தேன்.

மேலைப்பெருழமையை எங்கள் தானி நெருங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தெரிந்தன. ஊரின் முகப்பில் ஒரு குளம் அழகுடன் காட்சியளித்தது. பள்ளிக்கூடமும் இந்த ஊரில் இருக்கிறது.

குளத்தின் கரையில் தென்னை மரங்கள் இருந்தன. அவற்றை அழகுடன் பராமரிகின்றனர். பூங்கா போலும் அதன் வனப்பு உள்ளது. அதற்கு பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுப் பூங்கா என்று பெயர். இவ்வாறு பெயர் வைக்கும் அளவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்குப் புலவர் மேல் பற்று ஏற்பட ஒரு காரணம் உண்டு.

தஞ்சாவூருக்கு நம் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் ஒருமுறை சென்றிருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது சாதாரணமாக எதிர்ப்பட்ட பெரியவர் ஒருவர் நம் ஊராட்சி மன்றத் தலைவரை என்ன ஊர் என்று பேச்சு வாக்கில் வினவியுள்ளார். மேலைப்பெருழமழை என்று உரைத்தாராம். ஊர்ப்பெயர் கேட்ட பெரியவர் நம் ஊராட்சிமன்றத் தலைவரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாராம். ஊராட்சிமன்றத் தலைவருக்குச் செய்தலறியாத திகைப்பு. ஊர்ப்பெயர் சொன்னதும் எதற்கு நம் காலில் விழுந்தார்? என்று பதைபதைப்பு. விழுந்து வணங்கி எழுந்தப் பெரியவர் சொன்னாராம்.

தாங்கள் மேலைப்பெருமழையில் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்த ஊரிலிருந்து வந்துள்ளதால் தங்களை வணங்கினேனே தவிர தங்களையல்ல என்றாராம். அதன் பிறகுதான் நம் ஊராட்சி மன்றத் தலைவருக்குப் பெருமழைப் புலவரின் சிறப்புத் தெரியவந்தது. ஊருக்கு வந்த கையுடன் அவர் பிள்ளைகளையும் ஊர்ப்பெரியவர்களையும் அழைத்து ஊரில் ஏற்படுத்த உள்ள பூங்காவுக்குப் புலவர் பெயர் வைக்க எண்ணி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். ஆம். மேலைப்பெருழமழையில் புலவர் பெயரில் ஒரு பூங்கா ஏற்படுத்தப்பட்டு வருவோரை வரவேற்கின்றது.


புலவரின் பெருமை சுமந்து நிற்கும் பூங்கா

ஊராட்சிமன்றத் தலைவர் பெருமழைப்புலவரின் வாழ்க்கைக் குறிப்பையும் நண்பர் ஒருவருடன் இணைந்து அச்சிட்டு அனைவருக்கும் இலவசமாக வழங்கியுள்ளார். செம்மொழி மாநாட்டை ஒட்டி இவ்வாழ்க்கைக்குறிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது நிற்க.

நாங்கள் புலவரின் வீட்டை அடைவதற்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதில் சென்று சேர்ந்தோம். அந்த வீட்டை அடைந்து, எங்கள் வருகையின் நோக்கத்தையும் விருப்பத்தையும் சொன்னோம். ஒரு தம்பி எங்களை அன்பொழுக வரவேற்றார். அவர் பெயர் மா.குமார் என்றார். தாம் புலவரின் பெயரன் என்றார். தனியார் செல்பேசி நிறுவனத்தில் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். தம் பெரிய தந்தையார் பெயர் சோ.பசுபதித்தேவர் எனவும் தம் தந்தையின் பெயர் சோ.மாரிமுத்துத் தேவர் எனவும் கூறினார்.

தந்தையாரும் பெரிய தந்தையாரும் வெளியில் சென்றுள்ளதாகக் கூறினார். அவர் வீட்டில் தங்கித் தண்ணீர் குடித்துப் புலவரின் சிறப்புகளை நான் எடுத்துரைத்தேன். அந்த நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க ஒரு அகவை முதிர்ந்தவர் உள்ளே நுழைந்து எங்களை வரவேற்றார். அருகிலிருந்த தம்பி குமார் சொன்னார். இவர்தான் எங்கள் பெரியப்பா பசுபதி தேவர் என்றார். பதசுபதி தேவரைப் பார்த்ததும் புலவரைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு. ஆம் புலவரின் உடைமைகளுள் ஒன்றைக் கண்ட பெரு மகிழ்வு எனக்கு ஏற்பட்டது. அன்பொழுக அவரிடம் பேசினேன்.


சோ.பசுபதி(புலவரின் தலைமகன்)


சோ.மாரிமுத்து(புலவரின் இரண்டாம் மகன்)

காலையில் நூறுநாள் வேலைக்குச் சென்றதாகவும் அந்த அடையாள அட்டையை வயல்வரப்பில் போட்டுவிட்டு மறந்து வந்ததாகவும் அதனை ஓடி எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.


புலவரின் மனைவி மீனாம்பாள் அம்மா

நற்றிணை,குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை,பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்க ளான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம்,பரிபாடல்,ஐந்திணை எழுபது,ஐந்திணை ஐம்பது, திருக்கோவையார்,பட்டினத்தார் பாடல்கள் முதலிய நூல்களுக்கு உரைவரைந்த புலவரின் குடும்பத்தார் கூலிவேலைக்குச் செல்லும்படியான குடும்பநிலையறிந்து, நேரில் கண்டு என் கண்களில் துன்பக்கண்ணீர் துளிர்த்தது.

ஐயகோ! என் தமிழ்நாடே! யானையும்,குன்றும்,பதினாறு நூறாயிரம் பொன்னும், மணிமண்டபமும் வழங்கி ஆதரித்த மன்னர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் அறிவில் வல்ல புலமைநலச் சான்றோரின் குடும்பம் வறுமைநிலையில் இருப்பது என்னே! என்று மனம் வருந்தினேன்.

புலவர் தங்கியிருந்த இடம், அவர் படுத்திருந்த இடம், அவர் உரை வரைந்த இடம், அவரின் கடைசிக்காலம் எந்த இடத்தில் கழிந்தது என்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டேன். புலவரின் உரை வரைந்த ஒருநூல்கூட அவர்கள் குடும்பத்தில் இல்லை. அவர்கள் வீட்டில் தமிழக முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆகியோர்க்கு உதவி வேண்டி வரைந்தனுப்பிய சில மடல்களின் படிகள் மட்டும் இருந்தன. வாரிசு சான்று இருந்தால் உதவு முடியும் என்று சில அதிகாரிகள் சொன்னதாக அறிந்தேன். வாரிசு சான்றிதழ் வாங்குவது அவ்வளவு எளிதானசெயலா?. ஊர் நிருவாக அதிகாரி, வட்டாட்சியர், நீதிமன்றம் வரை இவர்களால் செலுவு செய்து வாங்குவது நடக்காத செயல். அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே இவர்கள் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள்? புறச்செலவுகளுக்கு ஏது பணம்?.

புலவர் இறந்து சற்றொப்ப நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. புலவரின் மக்களுக்கோ அவர் எழுதிய நூல்கள், உரைவரைந்த நூல்கள் பற்றிய முழுவிவரமும் தெரியவில்லை. மேலும் அவர்களைப் புலவர் அதிகம் படிக்க வைக்காததால் முழுவிவரத்தையும் நினைவுகூர முடியவில்லை. இருப்பினும் சோழநாட்டுப்புலவர் என்ற நூலிலிருந்து கருப்பக்கிளர் சு.அ. இராமசாமிப்புலவர் எழுதிய பெருமழைப்புலவர் பற்றிய வாழ்க்கைக்குறிப்பைத் தனித்து அச்சிட்டு அனைவர் பார்வைக்கும் உட்படும்படி செய்துள்ளனர்.

புலவரின் மகன்கள் தம் பிள்ளைகளிடம் குடும்பப்பொறுப்பை ஒப்பளித்துவிட்டு எளியநிலையில் வாழ்ந்துவருவதை அறிந்து இந்த நிலையை மாற்றத் திட்டமிட்டபடியும்,புலவரின் புகழ் உலகு உள்ளவரை நின்று நிலவுமான பணிகளைச் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர்களிடம் பிரியா விடைபெற்றேன்.


சோ.பசுபதி,சோ,மாரிமுத்து(புலவரின் இரு மகன்கள்)


ஊராட்சி மன்றத் தலைவர் இராசமாணிக்கம்,சோ.பசுபதி


புலவர் பெற்ற விருது


மேலைப்பெருமழைப் பேருந்து நிறுத்தம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s