தமிழ் மின் அகரமுதலிகள்

வழமையானது


பேராசிரியர் கிரிகோரி சோம்சு அவர்களுடன் கட்டுரையாளர் முனைவர் மு.இளங்கோவன்

தமிழில் அச்சுவடிவில் அகரமுதலிகள் இருப்பனபோன்றே வளர்ந்துநிற்கும் கணிப்பொறி, இணையத்துணையுடன் மின்வடிவிலும் உள்ளன.ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி அகரமுதலிகளைப்போல் நம் மின்அகரமுதலிகள் வளர்ந்தவடிவில் இல்லை. வளர்முக நிலையிலேயே உள்ளன.தமிழ் மின் அகரமுதலிகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி மின்னகரமுதலியாக உள்ளது.அதுபோல் தமிழ்விக்கிப்பீடியாவின் அகரமுதலியும் மின்வடிவில் உள்ளது.

பால்சு அகரமுதலியும்(தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில்), தமிழ் -செர்மனி -ஆங்கில அகரமுதலியும்,ஆங்கிலம்-தமிழ்-சிங்கள அகரமுதலியும்; வின்சுலோவின் ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும்,கிரியாவின் தற்கால அகரமுதலியும் இன்ன பிற அகரமுதலிகளும் மின்வடிவில் எந்த அளவில் வளப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இன்னும் மேம்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.

தமிழ் விக்கிப்பீடியா அகரமுதலி ஒரு பன்மொழி அகராதியாக, மிகச்சிறப்பாக இலவசமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும் அதில் தமிழ் அறிஞர்கள் இலக்கணப்புலவர்கள் பங்கெடுக்காமல் உள்ளதைச் சுட்டிக்காட்டி,அதனை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.

தமிழ் அகரமுதலிகளில் ஒலிப்புமுறைகள் இடம்பெற வேண்டியதன் தேவை,படங்கள், வரைபடங்கள், ஓவியங்கள்,ஒலிக்கோப்புகள் இணைப்பு பற்றியெல்லாம் இக்கட்டுரை விரிவாக விளக்குகிறது,இதுவரை மின்அகரமுதலிகளில் இடம்பெற்றுள்ள சொற்களின் வகைப்பாடு, தேவை,நோக்கம், அகரமுதலிகளை வெளியிட்ட நிறுவனங்களின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து எதிர்காலம் மின்னகரமுதலிகளை எதிர்நோக்கியுள்ளதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

தென்னாசிய மின் நூலகம் ( Digital South Asia Library ) (http://dsal.uchicago.edu/about.html )

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தென்னாசியாவில் வழங்கும் பலமொழிகளுக்கும் உரிய மின் அகரமுதலிகள் ஆய்வாளர்கள்,ஆர்வலர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன.இவை யாவும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளன.அவ்வகையில் அசாமி,பலுசி, பெங்காளி,ஆங்கிலம்,குசராத்தி,இந்தி,காசுமீரி,மலையாளம்,மராத்தி,நேபாளி,ஒரியா,பாலி,பஞ்சாபி,பெர்சியன்,இராசத்தானி,சமற்கிருதம்,சிந்தி,தமிழ் தெலுங்கு,உருது மொழி அகரமுதலிகளும்,பர்ரோ,எமனோவின் திராவிட வேர்ச்சொல்லகரமுதலியும்( Dravidian etymological dictionary ) குறிப்பிடத்தக்கன.

தமிழ்மொழி அகரமுதலிகள்

தென்னாசிய மின் நூலகத் தளத்தில் தமிழ்மொழிப் பகுதியில் பெப்ரியசு அகரமுதலி(Fabricius’s Tamil and English dictionary),கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ஆல்பின் அகரமுதலி,சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி,வின்சுலோ அகரமுதலிகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அகரமுதலிகளையும் வாங்கிப் பாதுகாத்தல், பயன்படுத்தலில் அச்சுவடிவு எனில் கையாளத்தொல்லையாக இருக்கும்.ஆனால் மின்னகரமுதலியாக இருப்பதால் சொற்பொருள் வேறுபாடு அறியவும்,ஆய்வுக்குக் கூடுதல் தகவல் பெறவும் வாய்ப்பாக உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி(Tamil lexicon.University of Madras, 1924-1936) http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

தமிழ் அகரமுதலிகளில் சென்னைப் பலைகலைக்கழகப் பேரகரமுதலிக்குத் தனியிடம் உண்டு.தமிழில் அறிவியல் அடிப்படையில் பல அறிஞர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட இவ்வகரமுதலியில் தமிழல்லாத பிறமொழிச்சொற்களைத் தமிழாகக் காட்டப்பட்டுள்ளமையை அறிஞர்கள் சிலர் எடுத்துக்காட்டி விளக்குவது உண்டு.திருத்தப்பட்ட பதிப்பு வெளிவர உள்ள, இந்த அகரமுதலியின் முன்னைப் பதிப்பாசிரியராக விளங்கிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தலைமையில் இயங்கிய குழுவினர் இந்த அகரமுதலியை மிக நுட்பமுடன் உருவாக்கியுள்ளனர்.தமிழ் மின் அகரமுதலிகளுள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.தமிழ்ச்சொல் அதனை அடுத்து,அதற்குரிய ஆங்கிலச்சொல்,ஆங்கில விளக்கம்,இலக்கணக்குறிப்பு, மேற்கோள், மேற்கோள் நூல் குறிப்பு, தொடர்புடையச்சொற்கள் என அச்சு வடிவில் உள்ள விளக்கங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் வசதிகள் பயன்படுத்துவோருக்குப் பல வகையாகத் துணைபுரிகின்றன.முன் பக்கம் பின் பக்கம் பார்ப்பதுபோலவே முன் சொல்,பின் சொல் பார்க்கும் வசதியும் உள்ளது.

பெப்ரியசு உருவாக்கிய பெப்ரியசு அகரமுதலி (Fabricius, Johann Philipp. J. P. Fabricius’s Tamil and English dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

பெப்ரியசு அகரமுதலி நான்காம் பதிப்பு(1972) மின்னகரமுதலியாக உள்ளது.இது தமிழ்,ஆங்கில அகரமுதலியாகும்.

ஒருங்குகுறி வடிவில் தமிழ் எழுத்துகள் உள்ளதால் எழுத்துரு சிக்கல் இல்லை.அகரவரிசைப்படி சொற்கள் உள்ளன.

தமிழில் தட்டச்சிட்டும்,ஆங்கிலத்தில் தட்டச்சிட்டும் தேடலாம்.சான்றாக mother என்ற ஆங்கிலச்சொல்லைத் தட்டச்சிட்டால் அதனுடன் தொடர்புடைய பல தமிழ்ச்சொற்களை அதன் பொருள்களை நாம் அறியலாம்.தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் இருந்து நமக்குப் பேருதவிபுரிகிறது.

பெப்ரியசு அகரமுதலியில் தேடு சொல்லாக யாப்பு என்பதைத் தட்டச்சிட்டால் யாப்பு தொடர்பான பக்கம் நமக்கு விரியும்.இதில் முழு விளக்கமும் வேண்டாம்.குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் போதும் என்றால் அதற்குரிய பெட்டியில் சரி குறியைத் தேர்ந்து உரிய யாப்பு என்ற சொல்லுக்குரிய பொருளை மட்டும் அறியலாம்.இதுபோல் குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள் மட்டும் அறிந்தால் போதும் என்றால் அந்தப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்குரிய தேர்வுச்சொற்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக யாப்பு என்று சொல்லுக்குரிய முடிவாக ஒரு முடிவு இருக்கும்.அதன் அருகில் உள்ள p.832 என்ற பகுதியை அழுத்தினால் பெப்ரிசியசு அகரமுதலியின் 832 ஆம் பக்கத்துக்குரிய பகுதியை முழுமையாகப் பார்வையிடலாம்.யாப்பு என்ற தனிச்சொல்லுக்கு மட்டும் விளக்கம் வேண்டினால்,

“யாப்பு (p. 832) [ yāppu ] , s. (யா v.) a bandage, a tie, கட்டு; 2. poetry, செய்யுள்; 3. prosody, செய்யு ளிலக்கணம்.
யாப்பதிகாரம், யாப்பிலக்கணம், prosody.
யாப்பருங்கலம், a treatise on prosody.” என்று விளக்கம் காணப்படும்.

ஒரு பக்கத்தைப் பார்வையிடும்பொழுது முன் பக்கம் பின் பக்கம் பார்க்கும் வசதியும் உண்டு. ஒருங்குகுறியில் இருக்கும் விளக்கத்தை asci i குறியீட்டு எழுத்திலும் படிக்க இயலும்.
கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி (N. Kathiraiver Pillai’s Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary) http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதி அனைவராலும் விரும்பபப்படும் அகரமுதலியாகும். ஆறாம் பதிப்பாக வெளிவந்த(1922) அகரமுதலி மின்னகரமுதலியாக உருவாகியுள்ளது. இது தமிழ்-தமிழ் அகரமுதலியாகும்.இதில் “அ” என்ற ஒற்றை எழுத்தை அழுத்தித் தேடும்பொழுது 5479 தேடல்முடிவுகள் கிடைக்கின்றன.

” சிற்சில அகராதிகள் காலந்தோறும் அவவரால் வெளியிடப்பட்டன. அவைகளெல்லாம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களினும், வேதாந்த சித்தாந்த நூல்களினுமுள்ள அகப்பொருள் புறப்பொருட் பாகுபாடுகள், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகள், வெண்பா முதலிய பாவகை, பாவினம், அலங்காரவகை, பரதராக தாளப்பகுதி, அங்கக்கிரியை, உடலவருத்தனை,அவிநயம், நிலை, கூத்துவகற்பம், வங்கியமுதலிய கருவியிலக்கணம், பண், வண்ணப்பகுதி, வரிப்பகுதி, தத்துவம், முப்பொருளிலக்கணம் என்றின்னோரன்ன முக்கிய விடங்களாகிய சொற்பொருட்டொகைகளைக் கொள்ளாதனவாயிருந்தலை யுணர்ந்த சில நண்பர்கள் அவைகளெல்லாமமைய ஒரு அகராதியொன்று தருகவென்று பன்னாளும் பன்முறையுந் தூண்ட அதற்கிசைந்து யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்வான் நா …கதிரைவேற்பிள்ளை அவர்களைக்கொண்டு பரதசேனாபதீயம், இசை நுணுக்கம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை,குண்டலகேசி, அன்பினைந்திணை, கல்லாடம், தொல்காப்பியம், அகநானூறு,புறநானூறு, கலித்தொகை பத்துப்பாட்டு, இலக்கண விளக்கம், வீரசோழியம்,புராணங்கள், இதிகாசங்கள், சூளாமணி, புறப்பொருள் வெண்பாமாலை, சித்தாந்த சாத்திரம், பிங்கலந்தை, திவாகரம் முதலிய அரியபெரிய நூல்களினின்றுஞ் சொற்களையும் தொகைப்பொருள்களையும் செந்தமிழ்நாட்டு வழக்கமொழிகள் பலவற்றையுஞ் சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன்.” என்னும் நூலின் முகவுரைப் பகுதிகளைக் கற்கும்பொழுது கதிரைவேல் பிள்ளை அவர்களின் அகராதிச் சிறப்பு நமக்குப் புலப்படும்.

டேவிட் எம்.சி.ஆல்பின் அடிப்படைத் தமிழ்ச்சொற்களின் அகரமுதலி (A core vocabulary for Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/

டேவிட் எம்.சி.ஆல்பின் அகரமுதலி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது(1981) இந்த அகரமுதலியில் அ என்ற எழுத்தைத் தட்டச்சிடும்பொழுது 99 தேர்வுமுடிவுகளைக் காட்டுகின்றது.சந்தி என்ற ஒரு சொல்லைத் தட்டச்சிடும்பொழுது மூன்று தேர்வு முடிவுகள் கிடைக்கின்றன.அதில் சந்தி,சந்தி,சந்திரன் என்னும் சொற் தலைப்புகள் காட்டப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.

சந்திரன் (p. 30) [ cantiraṉ ] cantiran, nelaa சந்திரன், நெலா moon
என்று பேச்சு வழக்கில் விளக்கம் தரப்பட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது.தமிழில் வழங்கும் அடிப்படையான சொற்களுக்கு விளக்கம் தரும் இந்த அகரமுதலியில் பேச்சு வழக்கில் அமைந்த விளக்கம் தனித்துச் சுட்டத்தக்கது.
பஸ் [ pas ] bassu, kaaru பஸ்ஸு, காரு bus

என்று வரும் விளக்கம் தமிழில் இன்று கலந்து பேசப்படும் பிறமொழிச் சொற்களையும் தமிழாகக் காட்டும் போக்குக்குச் சான்றாகும்.

அகராதி [ akarāti ] DikSanari டிக்ஷனரி dictionary

என்று வரும் விளக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.
கணவன் [ kanavan ] viiTTukkaararu வீட்டுக்காரரு husband; (householder) landlord

என்னும் விளக்கம் பேச்சு வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு வழக்கில் விளக்கம் தரும் ஒன்றாக உள்ளது.பேச்சு வழக்கில் உள்ள டம்பளர்,லோட்டா,சார் என்ற பிறமொழிச்சொற்களையெல்லாம் தமிழ்ச்சொல்லாகக் காட்டும் வழக்கம் இந்த அகரமுதலியில் உள்ளது.தமிழில் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழக்குச்சொல்லால் விளக்கம் வரையப்பட்டுள்ளது.

பேராசிரியர் என்ற சொல்லை நோக்கும் பொழுது “பேராசிரியர் [ pērāciriyar ] prafasaru பரபசரு professor ” என்று உள்ளது.பேச்சுத் தமிழுக்கு இந்த அகரமுதலியில் முதன்மையளிக்கப்பட்டுள்ளது. அறுபத்தெட்டுப் பக்கங்களில் அமைந்துள்ள இந்த அகரமுதலி தமிழாய்வில் ஈடுபடும் அயல்நாட்டாருக்கு மிகுதியும் பயன்படும்.

வின்சுலோ தமிழ் அகரமுதலி (A comprehensive Tamil and English dictionary of high and low Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/winslow/

மிரோன் வின்சுலோ அவர்கள் அமெரிக்காவில் உள்ள வெர்மான் மாநிலத்தில் வில்லிசுடன் என்ற ஊரில் 1789 ஆம் ஆண்டு திசம்பர் 1 இல் , பிறந்தார். இவர் ஒரு கிறித்தவச் சமயபோதகர்; இவர் தொகுத்த தமிழ் ஆங்கில விரிவு அகராதி (A Comprehensive Tamil and English Dictionary) 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.சோசப் நைட் பிரபு அவர்களின் மூலப்படியைத் துணையாகக்கொண்டு நாளும் மூன்று மணிநேரம் என்ற அளவில் இருபதாண்டுகள் உழைத்து வின்சுலோ இந்த அகரமுதலியை 1862 இல் உருவாக்கினார். தமிழ் ஆங்கிலம் என்ற அமைப்பில் இந்த அகரமுதலி உள்ளது.

அ தொடங்கி வௌவு என்று முடியும் சொல் ஈறாக 969 பக்கத்தில் தமிழ்ச்சொற்களும் சொற்களுக்கு உரிய விளக்கமும் உள்ளன.விடுபட்ட சொற்களையும் இணைத்து 976 பக்கத்தில் வின்சுலோ அகராதித் தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் கொண்டு விளங்குகிறது.சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலிக்கு முன்மாதிரியான அகரமுதலியாக இதனைக் கொள்ளலாம்.இதில் இலக்கிய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

தமிழ் விக்சனரி http://ta.wiktionary.org/wiki

விக்கிப்பீடியா என்ற தளம் பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும்.இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது.உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதன் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது.ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் உள்ளன.

தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இன்று 1,12,587 சொற்களைக் கொண்டு(15.04.2010) உலக அகரமுதலிகளில் 24 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.

அம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப்பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது(இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்).அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும்.அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).

தொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை,தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன்,அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் “அப்பா” என்ற சொல் உள்ளது.அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.

விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம்.

விக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம்,தமிழ் இந்தப் பகுப்பில் பெயர்,வினை,உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப்பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.

தமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன.இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாகத் தமிழ்எழுத்துகள்,ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும். இவற்றின் துணைகொண்டும் தேடலாம்.மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டையும் பெறலாம்.

அதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.தமிழ் – ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச்சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன.அதுபோல் ஆங்கிலம் – தமிழ் என்ற வகையில் ஆங்கிலச்சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.

தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது.இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது.பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள்,பறவைகள்,விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு, வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும்.கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி http://www.crea.in/dictionary.html

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல்பதிப்பு(1992)இணையத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.இது தமிழ்-தமிழ் -ஆங்கிலம் என்ற அமைப்பில் பொருள் தருகின்றது.ஒரு சொல்லின் இலக்கண வகை,வழக்குக் குறிப்பு,துறைக்குறிப்பு உள்ளிட்டவற்றின் துணைகொண்டு தேடலாம்.எழுத்துகள் ஒருங்குகுறியில் இருப்பின் மிகுந்த பயன் தந்திருக்கும்.

ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலி http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய சிங்களச் சொல்லையும், தமிழ்ச் சொல்லையும் தரும் ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலியும் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய சிங்களச் சொற்கள்,தமிழ்ச்சொற்களின் விளக்கம் உள்ளது.ஆங்கிலமொழியில் ஆங்கிலச்சொற்கள் உள்ளன. அதற்குரிய பொருள் சிங்களமொழிச் சொல்லிலும் தமிழ்ச்சொல்லிலுமாகத் தரப்பட்டுள்ளன.28 335 சொற்களுக்குரிய விளக்கம் இதில் உள்ளது.

ஆங்கிலம் – தமிழ் – செர்மன் அகரமுதலி http://www.tamildict.com/english.php

ஆங்கிலத்தில் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய தமிழ்ச்சொற்பொருளும் செர்மன்மொழிப் பொருளும் தரும் வண்ணம் ஒரு அகரமுதலி உள்ளது.ஆங்கிலச்சொற்களுக்கு இணையான சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக இந்த அகரமுதலியில் தரப்பட்டுள்ளன.இந்த அகரமுதலியில் பல்வேறு தேடல் வசதிகள் உள்ளன.பாமினி,ஒலி அடிப்படை எனப் பலவகை விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.ஆங்கிலம்-தமிழ், தமிழ் -ஆங்கிலம், ஆங்கிலம் -செர்மன்,செர்மன்-தமிழ் என்று பலவகையில் சொல் தேர்வு செய்யலாம்.47 துறைசார்ந்த சொற்கள் இதில் உண்டு.

கலைச்சொல் அகரமுதலி http://www.thozhilnutpam.com/

மின்னியல்,மின்னணுவியல்,கணினியியல்,பொறியியல்,அறிவியல்,தொழில்நுட்பவியல் சார்ந்த செய்திகளை விளக்கும் சொற்களுக்கு உரிய விளக்கம் பெறும் தளமாக இது உள்ளது. இத்தளத்தில் உள்ள அருஞ்சொற்பட்டியல் என்ற தலைப்பில் உள்ள பகுதிக்குச் சென்றால் பல துறை சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்குரிய கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் பொது அருஞ்சொற்பொருள், தானியங்கி அருஞ்சொற்பொருள், பறவையியல், தாவரவியல், வேதியியல்,மூலிகை,மலர்,பழம்,குடி நுழைவு,கணிதம்,உடலியல்,இயற்பியல், உளவியல், கப்பலியல்,குறிகையியல், காய்கறிப்பெயர்கள், விலங்கியல், ஒருங்கிணைப்பியல் சார்ந்த பல துறைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைத் தாங்கி இத்தளம் உள்ளது.

பால்சு அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

பழனியப்பா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும், தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியும் குறிப்பிடத்தக்க அகரமுதலிகளாகும்.

ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி சுமார் 22,000 முக்கியச் சொற்களையும் மற்றும் 35,000 வழிச் சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளம் சென்று இதனை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளன. இதில் உலாவும் முறையும், தேடும் முறைமையையும் கொண்டுள்ளது.

உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களைப் புத்தக வடிவினைப் போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தமிழ் அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் பல அகரமுதலிகள் உள்ளன.அவற்றுள் ஒன்று பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் தமிழ் அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பக்கம் பார்த்தல், சொல்தேடல்,அகரவரிசைப் பார்த்தல் என்ற அமைப்பில் சொற்களைத் தேடலாம்.பக்கம் பார்த்தல் பகுதியில் பக்க எண் குறிப்பிட்டுச் சொல் தேடலாம்.சொல்தேடல் பகுதியில் சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடலாம்.அகர வரிசைப் பார்த்தல் பகுதியில் அகரவரிசையைக் கொண்டு சொற்களைத் தேடலாம். தமிழ் இணையப் பல்கலக்கழகத் தளத்தில் நான்கு அகரமுதலிகள் உள்ளன(செ.ப.பேரகராதி,பால்சு அகராதி,சண்முகம் பிள்ளை,சென்னைப் பல்கலைக்கழ ஆங்கிலம்-தமிழ் அகராதி)

விசைத்தமிழின் தமிழ்-ஆங்கிலம் அகராதி http://dictionary.sarma.co.in/Default.aspx

புதுக்கோட்டை சர்மா சானடோரியத் தயாரிப்பான விசைத்தமிழ் மென்பொருளின் தமிழ்- ஆங்கிலம் அகராதியில் ஏறத்தாழ 60,000 ஆங்கிலச் சொற்களுக்கு 2,30,000 தமிழ்ப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குகுறியிலும் மாற்றிக் கொள்ள முடியும்.

அகராதி.காம் http://www.agaraadhi.com/d/DH.jsp

அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறையும்,மொழியியல் ஆய்வுக்கூடமும் இணைந்து உருவாக்கியுள்ள மின் அகரமுதலித் தளம் அகராதி.காம் என்பதாகும்.இணையம் வழியாகத் தமிழ்,ஆங்கிலத் தட்டச்சுகளின் துணைகொண்டு தமிழ்ச்சொற்களுக்குரிய பொருளும் ஆங்கிலச்சொற்களுக்கு உரிய தமிழ்ப்பொருளும் அறியலாம்.இரண்டு இலட்சம் தமிழ்ச் சொற்களுக்கு உரிய பொருளும் விளக்கமும் இந்த அகரமுதலியில் உள்ளன. செல்பேசிகளிலும் அகராதி.காம் பயன்கொள்ள முடியும்.பலவகையான புதிய பயன்பாட்டுக்குத் தக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடும்பொழுது அந்தச் சொல் உணர்த்தும் பல பொருள்கள் உள்ளன.மேலும் அம்மா என்பதை விளக்கும்பொழுது அம்ம என்று வருவதும் அம்மா என்று திருக்குறளில் வரும் இடம் சார்ந்த மேற்கோளும்,அம்மா என்பதிலிருந்து உருவாகும் பிற சொல்வடிவங்களுக்கும்(அம்மாவிலிருந்து,அம்மாவுக்கு என்பது போல்…) அம்மா என்று இடம்பெறும் திரைப்படப்பபாடல் வரிகளும் உள்ளன.இந்த வகையில் பிற அகரமுதலிகளிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறை அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

அப்பா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடினால் அப்பா என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொற்கள்,தமிழில் சொற்பொருள் விளக்கம் காட்டப்பட்டுள்ளன. திருக்குறளிலிருந்து தவறுதலாக “மருந்தாகித் தப்பா” என்ற குறள் அப்பா என்பதற்குச் சான்றாக இடம்பெற்றுள்ளது. அகராதியில் இடம்பெறும் சொற்கள் தொடர்பான விளக்கங்களை நண்பர்களுக்கு மின்னஞ்சலாகவோ,பேசு புத்தகத்திலோ,டுவிட்டரிலோ,அச்சிடவோ தக்க வசதிகள் இந்த அகரமுதலியில் உள்ளன.திரைப்படம் தொடர்பான குறிப்பு இடம்பெறும் போது,படம், பாடலாசியர்,இசையமைப்பாளர்,பாடல் உள்ளிட்ட குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உலகப் போக்குக்கு ஏற்ப மின்னகரமுதலிகளைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது.இம் மின்னகரமுதலிகள் இன்னும் பல நிலைகளில் மேம்படுத்த வேண்டுவனவாக உள்ளன.முன்பு அச்சில் வெளிவந்துள்ள அகரமுதலிகள்தான் மின் அகரமுதலிகளாக வெளிவந்துள்ளன. இவை பழைமை போற்றும் முயற்சியாக உள்ளது.தமிழக அரசு அல்லது பல்கலைக்கழகங்கள் பலவகையான அகரமுதலிகளைப் புதியதாக உருவாக்கி மின் அகரமுதலிகளாக வைக்க வேண்டும்.படிமக் கோப்புகளாக உள்ள மின் அகரமுதலிகள் ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றப்பட வேண்டும்.அதுபோல் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் புதிய பதிப்பு மின் அகராதியாக மாறும்பொழுது உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் தளமாக விளங்கும்.இதுவும் ஒருங்குகுறியில் இருந்தால் சிறப்புநல்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி செம்பதிப்பு அச்சில் வருவதுடன் இணையத்தில் இருக்கும்பொழுது உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கும்,ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கும் பேருதவிபுரியும்.மற்ற நிறுவனங்களின் அகரமுதலிகளை நாம் திருத்தவோ,விளக்கம் சேர்க்கவோ இயலாது. ஆனால் தமிழ் விக்சனரியை நாம் மேம்படுத்தி வளர்த்தெடுக்கமுடியும். தமிழில் வழக்குச்சொல்லகராதி,இணைச்சொல் அகராதி போன்று பல அகராதிகளை இணையத்தில் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலகுக்கு வழங்குமுடியும்.

(கோவை செம்மொழி மாநாட்டில் உலகப்புகழ்பெற்ற அகராதியியல் அறிஞர் கிரிகோரி சோம்சு(ஆங்காங்கு நாட்டு அறிஞர்) அவர்களின் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுக்கட்டுரை. இதனைப் பயன்படுத்துவோர் உரிய இணைப்பு வழங்கவேண்டும்.கட்டுரையாசிரியன் பெயரையும் குறிப்பிடவேண்டும்.)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s