இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் …

வழமையானது


வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க 2006,மே 19,20 ஆகிய நாள்களில் சென்றிருந்தேன்.

மதுரையை அடுத்த சக்குடி என்னும் ஊரில் பிறந்த என் நண்பர் ச.கு.சீனிவாசன் அவர்கள் என் வருகைக்கு மதுரைத் தொடர் வண்டிநிலையத்தில் காத்திருந்தார்.அவர் விருந்தினனாகவும் அன்று இருந்தேன். அவர்களின் ஊர் வைகையாற்றில் இருந்தது. சமணர்களைக் கழுவேற்றியப் பகுதி அருகில்தான் உள்ளது என்றார். இரவுப்பொழுதில் அவரும் நானும் அவர் இல்லத்துக்குச் சென்று நெடு நாழிகை உரையாடி வைகறையில் கண்ணயர்ந்தோம். காலையில் எழுந்து நான் மாநாட்டுக் கருத்தரங்கிற்குப் புறப்பட்டதாக நினைவு.அவர் ஊருக்கு அருகில்தான் திருப்பாச்சி என்ற ஊர் இருப்பதாகவும் சொன்னார். அங்கு உருவாகும் கத்தி, அருவா புகழ்பெற்றது (திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா-வைரமுத்து).

இந்தமுறை ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் இல்லம் செல்வது என்றும், அவர் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டு ஐயாவின் இறப்பு, மற்ற விவரங்களைக் கேட்பது என்றும் நினைத்திருந்தோம். நான் திட்டமிட்டபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கட்டுரை படித்து 20 ஆம் நாள் பிற்பகல் மதுரை-பசுமலைக்கு வருவது என்றும் அங்கு என்னை நண்பர் சீனிவாசன் எதிர்கொண்டு மீண்டும் அழைத்துக் கொள்வது என்றும் திட்டம். அதன்படி மே, 20 பிற்பகல் நான் மதுரை நகருக்கு வந்தேன்.

நண்பர் சீனிவாசன் அவர்கள் எனக்காக ஒரு உந்துவண்டியில் காத்திருந்தார்.இருவரும் நேரே பசுமலை சென்றோம். (ஐயாவின் இல்லத்துக்கு நான் முன்பே ஒருமுறை சென்றுள்ளேன் (19.05.2000). நான் திருநெல்வேலியில் ஒரு கருத்தரங்கிற்குச் சென்றபொழுது வழியில் உள்ள மதுரை-பசுமலையில் ஐயா அவர்கள் இருப்பது அறிந்து பசுமலை சென்றிருந்தேன். நன்கு விருந்தோம்பினார்.இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து பிரிந்த(1998) பிறகு மீண்டும் சந்திப்பது இப்பொழுதுதான் முதல் முறை.

எனவே இருவரும் மனம் திறந்து பேசினோம். எனக்கு நிலைத்த வேலை இல்லாமல் இருப்பதும், திருமணம் ஆகாமல் இருப்பதும் ஐயாவுக்குப் பெருங்கவலையாக இருந்தது.அவர் பங்குக்கு அவரும் பல இடங்களில் எனக்கு மணப்பெண் வேண்டியதையும் மறைமுகமாக அறிவேன். நம் தகுதிக்கும் மேம்பட்ட பல இடங்களில் ஐயா பெண்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். அத்தகு பேச்செல்லாம் நேரில் பார்த்தபொழுது மகிழ்ச்சியாகப் பெருக்கெடுத்தது. மாலைவரை ஐயாவுடன் இருந்துவிட்டுப் புறப்பட்டேன். அப்பொழுது மதுரையில் நடந்த ஒரு இசை குறித்த நிகழ்வில் பங்கேற்க அரிமளம் அவர்கள் வந்தார். அவருக்கு இடையூறு இல்லாமல் நான் ஐயாவிடம் விடைபெற்றேன் என்பதும் நினைவுக்கு வருகின்றது)

பசுமலையில் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் குடியிருந்து மறைந்த வீட்டுக்கு நானும் நண்பரும் சென்றோம். ஐயா அவர்கள் நடமாடிய அந்த வீதி இப்பொழுது ஆள் அரவம் இல்லாமல் இருந்தது. மெதுவாக அருகில் வேலைசெய்துகொண்டிருந்த அகவை முதிர்ந்த ஆயா ஒருவரிடம் நான் ஐயாவின் மாணவர் என்றும், அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்தவன் என்றும் அவர் மறைவு பற்றி எனக்குக் காலம் கடந்தே தெரியும் என்றும் கூறி அவர் நினைவாக அவர் வாழ்ந்த வீட்டையாவது பார்த்துச் செல்வோமே என நான் புதுச்சேரியிலிருந்து வருவதாக உரைத்தேன்.

உடனே அந்த ஆயா ஐயாவின் மறைவு பற்றியும் அதன் பிறகு அவர்களின் வீடு விற்பனை செய்யப்பட்டது பற்றியும் எடுத்துரைத்தார்கள். அவர்களின் உறவினர்கள் இந்தப் பகுதியில் இருப்பதாகவும் சொன்னார்கள். ஞானசம்பந்தர் மனை எனப் பெயரிட்டு அழைக்கப்பெற்ற அந்த இல்லத்தை வெளிப்பகுதியிலிருந்து ஏக்கத்துடன் பன்முறையும் பார்த்தேன்.

ஐயா இருந்தபொழுது நான் வந்த அந்த வீட்டில் எனக்கு இருந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை.ஐயா இல்லாத தனிமைத்துயரமே எனக்கு இருந்தது.இந்த வீடு வாங்கியவர் மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற அன்பர் என்பது அறிந்தேன். எவ்வளவோ தமிழார்வலர்கள் இருந்தும் ஐயாவின் வீட்டை வாங்கி நினைவில்லமாக மாற்ற இயலாமல் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்துள்ளோமே என்று வருந்தினேன். தக்க கொடையுள்ளம் கொண்டவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருந்தால் பத்து இலட்சம் உருவா செலவு செய்து ஐயாவின் நினைவுக்கு அந்த இல்லத்தை வாங்கி அவர் பெயரில் காலத்துக்கும் பாதுகாத்திருக்கலாம்.

அந்த வீட்டை வாங்கியவர்கள் அதன் சிறப்பு உணராமல் இடித்து அவ்விடத்தில் புதிய வீடு கட்டினால் என்ன செய்வது என்று நினைத்து நினைவுக்குப் பல படங்களை எடுத்துக் கொண்டேன். ஐயா உயிருடன் இருக்கும்பொழுது தாள முழக்கமும்,இசையாய்வுச் செய்திகளும் காற்றில் பரவிய அந்த இல்லத்தின் முகப்பில் ஒரு மாட்டைக்கட்டி வைத்திருந்தனர். அதனை மெல்ல அவிழ்த்து ஓரமாகக் கட்டிவிட்டுப் பல கோணங்களில் அந்த வீட்டைப் படம் பிடித்தேன்.

அதன் பிறகு அந்த ஆயாவிடம் விடைபெற்று இசைமேதையின் உறவினர்களைத் தேடும் பணியில் நானும் நண்பரும் ஈடுபட்டோம். பல தெருக்களைக் கடந்தும் எங்களால் உரியவர்களை உடனடியாகக் காணமுடியவில்லை. ஒருவழியாக அவரின் மருமகள் என்று நினைக்கிறேன். ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஒரு அம்மாவைக் கண்டு உரையாடிக் குடும்ப நிலை அறிந்தேன். வீடு விற்கப்பட்டதன் பின்னணியும் அறிந்தேன். எப்படியோ மீட்க முடியாதபடி வீடு கை நழுவிப் போனதாக உணர்ந்தேன்.

அதன் பிறகு ஐயாவை அடக்கம் செய்த கல்லறை எங்கு உள்ளது என்று கேட்டு அங்குச் சென்றோம். அந்தப் பகுதியில் இருந்த பல கல்லறைகளை நோட்டமிட்டுக் கடைசியில் ஐயா மீளாத்துயில்கொண்டுள்ள கல்லறைக்கு வந்தோம். ஐயா கல்லறை மிகத் தூய்மையாக இருந்தது. அதன் அருகில் வேறொரு கல்லறைமேல் ஒரு குடிமகன் மீளும் துயிலில் இருந்தான். அவனுக்கு இடையூறு இல்லாமல் ஐயாவின் கல்லறையைப் பலமுறை சுற்றி வந்து அவர் நினைவாகச் சில மணிப்பொழுது அங்கு இருந்தோம்.

அதன் பிறகு சில படங்களையும் நினைவுக்கு எடுத்துக்கொண்டேன்.ஐயாவைப் பிரிந்த மனத்துயருடன் கல்லறையை நாங்கள் கடக்கும்பொழுது அருகில் கடந்து சென்ற தொடர்வண்டியின் ஓசையால் அப்பகுதி அதிர்ந்தபடி இருந்தது. அதுபோல் ஐயாவின் நினைவும் என் உள்ளத்தில் அதிர்ந்தபடியே உள்ளது.


வீ.ப.கா.சுந்தரம் வாழ்ந்த பசுமலை இல்லம்


ஐயாவின் வீட்டு வாசலில் நான்


ஐயாவின் இல்லத்தின் முகப்பில் மாடு கட்டப்பட்டிருந்த காட்சி


இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை


இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் மீளாத் துயில்கொள்ளும் கல்லறை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s