ஈப்போ காப்பிய மாநாடும் குறிஞ்சிக்குமரனார் இல்லம் கண்டு மகிழ்தலும்…

வழமையானது


நான் கணிப்பொறி அறிஞர் பாலாவுடன்

ஈப்போ காப்பிய மாநாடு(மே21-23) பற்றி மலேசியா செல்வதற்கு இரு கிழமைக்கு முன்புதான் சரியான செய்தி தெரியும்.முன்பே தெரிந்திருந்தால் மாநாட்டு அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு உரியபடி பதிந்து சென்றிருக்கலாம். எனினும் மருத்துவர் உசேன் ஐயா, உழைப்புச் செம்மல் இரா.மதிவாணன் ஆகியோர் வழியாக என் மலேசிய வருகையை உறுதிப்படுத்தியிருந்தேன். அவர்களும் நான் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள்.இரா.மதிவாணன் அவர்களுக்கு எனக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த ஈடுபாடு தெரியும்.எனவே எப்படியும் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பெரும் முயற்சியுடன் இருந்தேன்.

23.05.2010 காலையில் நிறைவு நாள் நான் மாநாட்டில் பங்கேற்பது என்று திட்டமிட்டபடி பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களின் நெறிப்படுத்தலில் சிவநேசனார் தொடர்பு அமைத்து, ஈப்போவில் தங்கியிருந்தேன்.காலை 6.30 மணியளவில் கண்விழித்து காலைக்கடன்களை முடித்து மலேசியச் செய்தி ஏடுகளைப் பார்த்தேன்.முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வந்தமை பற்றி முத்தெழிலன் ஒரு நாளிதழில் நேர்காணல் அளித்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன்.அந்தத் தாளின் படி எனக்கு வேண்டும் என்றேன்.பின்னர் வாங்கிக்கொண்டோம்.

சிற்றுண்டி ஒரு கடையில் முடித்து காலை 9.30 மணிக்கு மாநாட்டு அரங்கை அடைந்தோம். அந்த மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் அலுவலகத்துக் கருத்தரங்கக்கூடத்தில் கருத்தரங்கம் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.காலையில் கருத்தரங்கம்,பிறகு மகளிர் அரங்கம் சிறப்பாக நடந்தது.எனக்கு நன்கு அறிமுகமான அம்மா உலகநாயகி பழனி அவர்கள் மேடையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துச் செவிக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கட்டுரை படித்தார்கள்.என் நெஞ்சங்கவர்ந்த பேராசிரியர் முனைவர் பா.வளன்அரசு அவர்களும் பெருங்கவிக்கோ வா.மு.சே அவர்களும் வீற்றிருந்தார்கள்.

நான் பிற்பகல் இரண்டு மணிக்குக் கோலாலம்பூர் திரும்புவதற்குப் பேருந்துச்சீட்டு முன்பதிவு செய்திருந்தேன்.என் திட்டத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருந்ததால் அதனை அடிக்கடி மாற்றிப் புதுப்பித்துக்கொண்டிருந்தேன். மாலையில் இரண்டு மணிக்கு எங்கள் பேச்சுப்பகுதி இருக்கும் என்று ஆசிரியர் மாணிக்கம் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.அதன்படி இடைப்பட்ட உணவு நேரத்தில் ஒரு முதன்மையான இடத்துக்குச் சென்று திரும்பவேண்டும் என்று காலையிலேயே திட்டமிட்டோம்.நம் ஆசிரியர் திரு.சிவநேசனார் அவர்களும் உரியவர்களை அணுகி என் விருப்பம் நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

1992-93 இல் எனக்கு மடல் வழித்தொடர்பில் இருந்தவரும் என்மேல் அளவு கடந்த அன்புகாட்டியவருமான ஐயா குறிஞ்சிக்குமரனார் பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவர் பற்றி என் அயலகத் தமிழறிஞர்கள் நூலில் எழுதியுள்ளேன்.அவர்கள் உயிருடன் இருந்தபொழுது பார்க்க இயலவில்லை. ஆனால் இந்தப் பயணத்தில் அவர்களின் இல்லம் சென்று குடும்பத்தினரைக் கண்டு என் அன்புகாட்ட வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.ஓரிரு அன்பர்கள் என் விருப்பம் புரிந்து குறிஞ்சிக்குமரனாரின் இல்லத்தினருடன் தொடர்புகொண்டு அவர் மகன் தமிழ்ச்சாத்தன் அவர்களின் செல்பேசி எண் பெற்றுத்தந்தனர்.

குறிஞ்சிக்குமரன் அவர்களின் துணைவியார்,நான்.

தமிழ்ச்சாத்தனை நான் சந்திக்க ஆர்வமாக உள்ளதை அன்பர்கள் முன்பே சொன்னதால் என் தொலைபேசலுக்கு நல்ல மதிப்பு இருந்தது. தமிழ்ச்சாத்தன் அவர்கள் தம் துணைவியாருடன் மகிழ்வுந்தில் என்னைக் காண அரங்கத்திற்கு வந்துவிட்டார்கள்.நானும் அவர்களும் தனித்து உரையாடினோம்.அரை மணி நேரத்தில் அருகில் உள்ள அவர்களின் இல்லம் சென்று ஐயா வாழ்ந்த இருப்பிடத்தைக் கண்டு வர வேண்டும் என்ற என் வேட்கையைக் கூறினேன்.உடன் எங்கள் மகிழ்வுந்து குறிஞ்சிக்குமரானார் இல்லத்தில் பத்து நிமையத்தில் நின்றது.குறிஞ்சியாரின் துணைவியார் அவர்களும் மற்ற மகன்மார்களும் பேரக்குழந்தைகளுமாக இல்லம் நிறைந்தது.என் வருகையைச்சொன்னவுடன் அனைவரும் ஒன்றுதிரண்டுவிட்டனர்.தமிழுக்கு உள்ள மதிப்பு அறிந்து மகிழ்ந்தேன்.


குறிஞ்சிக்குமரனார் குடும்பத்தினர்

ஐயா தம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தூய தமிழ்ப்பற்று ஏற்படும்படி வளர்த்துள்ளார்களே என்று வியந்தேன்.அனைவருடனும் இருந்து படம் எடுத்துக்கொண்டேன்.பத்து நிமைய உரையாடலுக்குப் பிறகு மீண்டும் அடுத்த முறை ஐயாவின் இல்லத்தில் ஒருநாள் தங்குவது என்ற உறுதியளிப்புடன் விடைபெற்றேன்.உணவு உண்டு செல்லல் வேண்டும் என்று அனைவரும் வேண்டினர்.குறைந்த அளவு தேநீராவது உட்கொள்ள வேண்டும் என்று மன்றாடினர்.எனக்குத் தேநீர் அருந்தும் பழக்கம் இல்லாததால் அதுவும் நிறைவேறாமல் போனது.அடுத்த பத்து நிமையத்தில் மீண்டும் எங்கள் மகிழ்வுந்து அரங்கத்தை அடைந்தது. அதற்குள் மாநாட்டுக்குழுவினர் உண்டுமுடிக்கும் நிலையில் இருந்தனர்.எளிய வகையில் இருந்த உணவை உண்டு மகிழ்ந்தேன்.ஐயா இல்லம் சென்ற மன நிறைவு எனக்கு இருந்தது.

2.15 மணியளவில் பகல் நிகழ்ச்சி தொடர்ந்தது.பொது அரங்கில் சிறப்புக்கலந்துரையாடல் இடம்பெற்றது.முதன்மையான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு அமைந்தது.மருத்துவர் உசேன் ஐயா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்.பேரா.பா.வளன்அரசு அவர்களும் எங்கள் அணியில் இருந்தார்கள்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை,நாட்டுப்புறக்கூறுகள் பற்றிய வினாவுக்கு என் விளக்கம் அவையினர் மகிழும்படியாக இருபது நிமையங்கள் அமைந்தது.சிலப்பதிகாரத்தில் ஐந்து நிலங்களுக்கும் உரிய இசையை அடிகளார் உரிய இடங்களில் வைத்துள்ள பாங்கை எடுத்துரைத்து கானல்வரி, ஆய்ச்சியர்குரவை,கந்துகவரிப்பாடல்களை யான் பாடிக்காட்டினேன். அவையினர் அமைதி காத்து இலக்கிய இன்பம் நுகர்ந்தனர்.

உரையரங்கம் நிறைவுக்குப் பிறகு தேநீர் இடைவேளை.அந்த நேரத்தில் மலேயா நடுவண் துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்கள் அவைக்கு வந்து அனைவரையும் அன்பொழுக நலம் வினவித் தம் தமிழ் ஈடுபாட்டை மெய்ப்பித்தார்.அனைவரும் அன்புடன் வணங்கி அவர்களை வரவேற்றோம்.

நான் இடையில் புறப்பட வேண்டிய நிலை.நான் 4 மணிக்குக் கோலாலம்பூரில் கணிப்பொறி அறிஞர் பாலா பிள்ளை அவர்களைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்தேன்.மீண்டும் இரவு 8 மணிக்குச்சந்திப்பதாகத் திட்டத்தை மாற்றினேன்.6.30 மணிக்குப் பேருந்தில் புறப்படத் திட்டமிட்டேன்.அதற்குத் தகச்சீட்டும் பதிந்தோம்.ஆனால் மாநாட்டில் என் பங்களிப்பு எதிர்பார்த்தைவிட முன்பே நிறைவுற்றதால் 5 மணிக்கே பேருந்து நிலையம் வந்தோம்.நாங்கள் பதிந்த சீட்டுக்குரிய பேருந்து நிறுவனத்தின் மற்றொரு பேருந்து புறப்படத்தயாராக இருந்தது.அதில் இடம் இருந்ததால் இசைவுபெற்று அதில் அமர்ந்துகொண்டேன்.

இப்பொழுது பாலா பிள்ளைக்கு என் புறப்பாட்டைச் சொல்லி மீண்டும் 7.45 மணிக்குக் கோலாலம்பூர் வருவேன் எனவும் அங்கு எனக்காகக் காத்திருக்கும்படியும் சொன்னேன். கோலாலம்பூர் நெருங்கியதும் பாலா அவர்களுக்குத் தகவல் தந்தேன்.பாலா அவர்களுக்கு மலேசியா பூர்விக நாடாக இருந்தாலும் அங்குள்ள சாலை அமைப்பு அவர்க்குச் சிலபொழுது பிடிபடாமல் அவர் ஒரு மணி நேரக் காலத்தாழ்ச்சியில் வந்தார்.அதுவரை நானும் காத்திருந்து மலேசியா நகர் வலத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.

9 மணிக்குப் பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்கள் தம் தம்பிமார்களுடன் எனக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்திருந்தார்.பிரிக்பீல்ட்சு என்ற நகரில் நாங்கள் ஒரு விடுதியில் உண்ணுவதற்குத் திட்டமிட்டிருந்தோம்.நானும் பாலாவும் மகிழ்வுந்தில் பாதை தெரியாமல் குழம்பிச்,சென்ற திசையில் செல்வதும் மீள்வதுமாக இருந்தோம்.9.20 மணி வரை எங்களால் உரிய இடத்தை அடையமுடியவில்லை.பாலா அவர்கள் வண்டி ஓட்டும்பொழுது தொலைபேசி பேச விரும்பாதவர்.அடிக்கடி தொலைபேசி உரையாடலைச் சமாளித்தபடி ஒருவழியாக உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அந்த விடுதியில் கூட்டம் மிகுதி.எனவே வேறு விடுதிக்குச் சென்று உண்டு மகிழ்ந்தோம். உணவு வேளையில் பாலா அவர்கள் கணிப்பொறி, தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் பற்றி மிகப்பெரிய விரிவுரை நிகழ்த்தினார்.அவரின் தமிழும் ஆங்கிலமும் கலந்த மழலைப்பேச்சு எனக்கு இனித்தது.மிகப்பெரிய தொழில்நுட்ப அறிஞருடன் ஆர அமர அமர்ந்து பேச முடியவில்லையே என்று நான் வருந்தினேன்.இரண்டு நாளுக்கு முன்பு நான் தங்கியிருந்த டைனசுடிக் விடுத்திக்கும் வந்து உரையாடினார் என்பதை முந்திய பதிவில் சுட்டியிருப்பேன்.
பாலா ஆர்முடன் உரையாடலில் பங்கேற்றார்.பதினொரு மணியளிவில் பாலாவுக்கு விடைகொடுத்துப் பேராசிரியர் மன்னர் அவர்களின் தம்பியர்கள் திரவியம், அண்ணாதுரை, இளந்தமிழ், எல்லோரும் விடைபெற்றுகொண்டோம்.


பாலா,நான்,இளந்தமிழ்

மன்னர்மன்னன் அவர்களின் உடன்பிறந்தார் ஒற்றுமை கண்டு எனக்குத் தொன்மக்கதைகளும், காப்பியங்களும் நினைவுக்கு வந்தன.பதினொரு பேருடன் உடன் பிறந்த நம் மன்னர் மன்னன் அவர்கள் தலைச்சன் பிள்ளை.அனைவருக்கும் திருமணம் முடித்து,அனைத்துக் குடும்பத்தையும் ஒன்றிணைத்துப் போகும் பாங்கறிந்து வியப்புற்றேன்.நல்ல மீகாமர்(மாலுமி).அதனால் மன்னர் குடும்பக்கப்பல் சரியான திசையில் செல்கின்றது.அவரின் உதவும் உள்ளம் அனைவருக்கும் வேண்டிய ஒன்றாகும்.அண்ணன் எனக்கு இல்லை என்ற குறை அவரால் நீங்கியது.

நான் கணிப்பொறியறிஞர் இளந்தமிழ் இல்லம் வந்து தங்கினேன். மின்னஞ்சல்,வலைப்பதிவு வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 2.30 மணியளவில் படுத்தேன்.காலையில் மலேயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தரும் மொழியியல் அறிஞருமான ஐயா கி.கருணாகரன் அவர்களையும் மைசூர் இந்தியமொழிகளின் நிறுவனப் பேராசிரியர் மோகன்லால் அவர்களையும் சந்திக்கும் திட்டம் இருந்தது.அதனை நினைத்தபடி மெதுவாகக் கண்ணயர்ந்தேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s