மலேசியா,செலாங்கூர் மாநிலம், பந்திங் தமிழ் இணையப் பயிலரங்கம்

வழமையானது


அறிமுகவுரையாற்றும் திரு.முனியாண்டி அவர்கள்

மலேசியா,செலாங்கூர் மாநிலத்தில்,பந்திங்,கோலலங்காட் தமிழ்ப்பள்ளியில் -தலைமையாசிரியர் மன்றம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த திருவாளர் முனியாண்டி அவர்கள் ஓராண்டுக்கு முன்பே அழைப்பு விடுத்தார்.புதுச்சேரிக்கு நம் இல்லத்திற்கு வந்தபொழுது நம் தமிழ் இணைய முயற்சிகளைக் கண்டதும் இந்த அழைப்பு விடுத்தார். உரிய காலம் வாய்க்கட்டும் என்று இருந்தேன். மலேசியப் பயணத்தை வாய்ப்பாக்கிக்கொண்டு 22.05.2010 பயிலரங்கு நடத்த திட்டமிட்டோம்.வாய்ப்பும் கனிந்தது.செலாங்கூர் மாநிலத்தின் பல பகுதி சார்ந்த தமிழாசிரியர்கள் ஐம்பதின்மர் கலந்துகொள்வதாகத் திரு.முனியாண்டி அவர்கள் கூறினார்.

22.05.2010 காலை விழித்தெழுந்து ஐயா மாரியப்பனார் அவர்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டோம். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் என்னை அழைத்துச்செல்வதற்காக மாரியப்பனார் அவர்களின் கடைவாயிலில் காத்திருந்தார்.அனைவரும் கிள்ளானில் ஓர் உணவகத்தில் காலைச்சிற்றுண்டி முடித்துக்கொண்டு ஐயா மாரியப்பனார் அவர்களிடம் விடைபெற்றேன். திரு.மன்னர்மன்னன் அவர்கள் என் வருகைக்காக முன்பே அரைமணி நேரம் காத்திருந்தார்கள். அதனால் நாங்கள் வேகமாகப் பயிலரங்கம் நடைபெறும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று மகிழ்வுந்து வேகமெடுத்தது.சிறிது தூறல் இருந்தது.கிள்ளான்-பந்திங் 50 கி.மீ.இருக்கும்.மலேசியாவின் அழகியத் தார்ச்சாலைகளில் எங்கள் உந்து மிகச்சிறப்பாகச் சென்றது. பந்திங் பகுதியை 9.30 மணியளில் அடைந்தோம்.எங்களுக்காக அனைவரும் காத்திருந்தனர்.எந்த வகையான சடங்குத்தனமான நிகழ்வுகளும் இல்லாமல் பேராசிரியர் மன்னர் மன்னன் என்னை அறிமுகம் செய்து வைக்கவும் நண்பர் முனியாண்டி அவர்கள் நிகழ்ச்சி பற்றி அறிமுக உரையாற்றவும் பயிலரங்கம் தொடங்கியது.


முனியாண்டி,நான்,பேராசிரியர் மன்னர்மன்னன்


பயிற்சியில் நான்


பயிற்சி பெறும் தமிழ் ஆர்வலர் சரசுவதி


பயிற்சியில் ஆர்வலர்


உரை கேட்கும் ஆர்வத்தில் அவையினர்


பயிற்சியளிக்கும் நான்


பயிற்சி பெறுபவர்கள்


பயிற்சிபெறுபவர்கள்


பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட கணிப்பொறிகள் அரங்கில் இருந்தன.ஆளுக்கொரு கணிப்பொறியாகவும் இருவர் மூவர் ஒரு கணிப்பொறியாகவும் அமர்ந்து தங்கள் கணிப்பொறி செயல்பாடுகளை ஆங்கிலம் வழியாகப் பார்வையிடுவதை அறிந்தேன்.

என்னையும் என் முயற்சிகளையும் அறிமுகம் செய்துகொண்டு அனைவரும் இனித் தமிழில் தட்டச்சிடவும்,வலைப்பூ உருவாக்கவும்,இணைய இதழ்களில் எழுதவும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தட்டச்சுக்குரிய என்.எச்.எம் எழுதியைப் பதிவிறக்கம் செய்தேன்.எ.கலப்பையை இறக்குவது பற்றி அறிமுகம் செய்தேன்.இப்பொழுது அரங்கில் இருந்த பெரும்பாலான கணிப்பொறிகள் என்.எச்.எம்.எழுதி இறக்கித் தமிழில் தட்டச்சுக்கு ஆயத்தமாயின.

தமிழ்த்தட்டச்சு முறைகள் பலவற்றையும் விளக்கி இதில் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் சிறப்பு என்ன என்று விளக்கினேன்.அனைவருக்கும் எளிதில் விளங்கியதை உணர்ந்தேன். அனைவரும் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததால் நான் சொன்ன உடன் விளங்கிக் கொண்டனர்.மேலும் ஆங்கிலத்தில் பெரும்பாலனவர்கள் கணிப்பொறி,இணையம் பயன்படுத்துபவர்கள் என்பதும் இன்னொரு காரணமாகும்.

மதுரைத்திட்டம் தளத்துக்குச் சென்று தமிழ் நூல்களை இறக்கி நம் கணிப்பொறியில் பாதுகாத்துப் பயன்படுத்தலாம் என்று கூறிப் பல நூல்களை அறிமுகம் செய்தேன். தொல்காப்பியத்தை இறக்கினோம்.என் கணிப்பொறியில் முன்பே பதிவிறக்கப்பட்ட தொல்காப்பியத்தையும் செம்மொழி நிறுவனத்தளத்தில் இருந்து இறக்கப்பட்ட தொல்காப்பிய இசைவடிவையும் அரங்கிற்கு ஒரு சேர வழங்கிய பொழுது இசைப்பாடல்களைக் கேட்ட அரங்கினர் மகிழ்ந்தனர்.

தமிழ்மரபு அறக்கட்டளை தளத்தின் சிறப்பு,நூலகம் தளத்தின் சிறப்பு,சிங்கப்பூர் தேசிய நூலகம்,புதுவைப் பிரஞ்சு நிறுவன நூலகம் பற்றி எடுத்துரைத்தேன்.

திண்ணை,கீற்று,பதிவுகள் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களை அறிமுகம் செய்தேன். தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட தளங்களையும் அறிமுகம் செய்து வலைப்பூவை எவ்வாறு இணைப்பது என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தேன்.

மேலும் மின்னஞ்சல் தமிழில் செய்வது,உரையாடுவது பற்றிய நுட்பங்களை விளக்கினேன். பயிற்சி பெற்ற பலர் உடனுக்குடன் எனக்கு மின்னஞ்சலில் வாழ்த்தும் நன்றியும் தமிழில் சொன்னார்கள்.

பகலுணவுக்காக நாங்கள் பிரிந்து மீண்டும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டோம்.அனைவருக்கும் ஒவ்வொரு வலைப்பூ உருவாக்க பயிற்சியளித்தேன்.மேடையில் இருந்தபடி பயிற்சி வழங்கிய நான் ஒவ்வொரு கணிப்பொறியாகச் சென்று அவர்களுக்குத் தமிழ் வலைப்பூ உருவாக்குவதில் துணைநின்றேன்.பிற்பகல் 4 மணி வரை எங்கள் பயிற்சி நீண்டது.

அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு நானும் பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களும் திரு.இளந்தமிழ் அவர்களின் வீட்டில் என் உடைமைகளை வைத்துவிட்டு ஓர் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றோம்.மதுரைப் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்கள் நூல் திறனாய்வுரை வழங்கினார்.அவர்களைக் கண்டு தனித்து உரையாடமுடியவில்லை.ஐயா முரசு அவர்கள் வந்திருந்தார்.நூல் வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஐயா மன்னர் மன்னன் அவர்கள் என்னை ஈப்போ நகரில் மறுநாள் நடக்கும் ஐம்பெருங்காப்பிய மாநாட்டில் கலந்துகொள்ள ஈப்போவுக்குப் பேருந்து ஏற்றிவிட வந்தார்கள்.

8 மணியளவில் எனக்குக் கோலாலம்பூர் நகரில் பேருந்து கிடைத்தது.இரண்டு நாளுக்கு முன்புதான் நண்பர் முனியாண்டி இந்த இடத்தில் சுங்கைப்பட்டாணிக்குப் பேருந்து ஏற்றிவிடக் கொண்டுவந்தார். என்னை அழகிய பேருந்தில் ஏற்றிவிட்டு ஈப்போவில் நல்லாசிரியர் திரு.சிவநேசனார்க்குத் தொலைபேசியில் என் வருகை கூறி என்னை வரவேற்று விருந்தோம்ப பேராசிரியர் மன்னர் மன்னன் ஏற்பாடு செய்தார்.இரண்டு மணி நேரத்துக்குள் ஈப்போ நகரடைந்தேன்.

அங்கிருந்து திரு.சிவநேசனாருக்குத் தொலைபேசியில் நான் வந்து இறங்கிய செய்தியைச் சொன்னவுடன் ஐயா தம் மகிழ்வுந்தில் வந்து என்னை அழைத்துக்கொண்டார்.பத்தரை மணிக்கு மேல் இருவரும் உணவுண்ண பல கடைகளுக்கு அலைந்தோம்.எல்லாம் சீன உணவகங்கள். தழையும் செடியுமாக உண்டனர்.சிலர் பல்வேறு வகையில் கோழிக்கறியைச் சுவைத்து உண்டனர்.எனக்கு ஒரு சைவச்சாப்பாடு வாங்கித்தர வேண்டும் என்று ஐயா ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பல கடைகளுக்கு அழைத்துச்சென்றார்.

நடு இரவு பன்னிரண்டு மணியிருக்கும்.தமிழர் ஒருவரின் கடையில் கோதுமை அடை(சப்பாத்தி)கிடைத்தது.நான் உண்டேன்.ஐயா குளம்பி மட்டும் அருந்தினார்.பின்னர் அவர் வீடு திரும்பும்பொழுது இரவு ஒரு மணியிருக்கும்.அழகிய வீடு.எனக்கு ஓர் அறை தந்து ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.அருகில் இருந்த அறையில் ஐயாவின் நூல் பொதிகளைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி.நூலகத்தை அந்த நடு இரவில் ஒரு பார்வையிட்டேன்.


ஈப்போவில் நல்லாசிரியர்கள் சிவநேசன்,நான்,மாணிக்கம் ஐயா

பாவேந்தர் நூல்கள்,பாரதியார் நூல்கள், அகரமுதலிகள், பாவாணர் நூல்கள் யாவும் தனித்தனியாக அழகுடன் அடுக்கப்பெற்றிருந்தன.புதியதாகத் தமிழகத்தில் அச்சான பல அகராதிகளையும் பார்த்தேன்.ஐயா சிவநேசர் முன்பு பழகியவர்போல் இயல்பாகப் பழகினார்.என் நண்பர்கள் மதிவரன்,முனியாண்டி ஆகியோர் இவரின் மாணவர்கள்.பேராசிரியர் மன்னர் அவர்களும் நம் சிவநேசன் ஐயாவுடன் ஒன்றாகப் பணியாற்றியவர்களாம். மறுநாள் காலையில் ஐம்பெருங்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற வேண்டும் என்பதால் சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தபொழுது நள்ளிரவு இரண்டு மணியிருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s