செம்மொழித்தொண்டர் சீனி நைனா முகம்மது

வழமையானது


செ.சீனி நைனா முகம்மது

20.05.2010 இரவு பதினொன்று முப்பது மணியளவில் எங்கள் மகிழ்வுந்து பினாங்கு நகரின் ஒளிவெள்ளத்தில் நீந்தியபடி சென்று சைனா சித்திரீட்டு பகுதியில் உள்ள ‘உங்கள் குரல்’ இதழ் அலுவலகத்தில் நின்றது.எங்கள் வருகைக்குக் காத்திருந்தவராக ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார்.முதல்மாடியில் இருந்த இதழ்க்குவியல்களுக்கு இடையே சீனி ஐயாவின் அலுவலகம் இருந்தது.அவரே தட்டச்சு முதல் இதழ் வடிவமைப்பு வரை அனைத்து வேலைகளையும் பார்ப்பதாகச் சொன்னார்கள்.


உங்கள் குரல் இதழ் முகப்பு

மலேசியாவில் வெளிவரும் தூய தமிழ் இதழ்களில் உங்கள் குரல் குறிப்பிடத்தக்கது. சீனி நைனா முகம்மது அவர்கள் ஆசிரியர்.குறைந்த படிகள் அச்சானாலும் மலேசியாவில் மொழி வளர்ச்சிக்குப் பாடுபடும் இதழாக உங்கள் குரல் உள்ளது.தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் ஐயாவுக்கு உதவியாக இருந்து இதழ் வளர்ச்சிக்குத் துணைநிற்கின்றார்கள்.ஐயா அவர்களின் இளமைப்பருவம் அறிந்து வியப்புற்றேன்.பள்ளிப்படிப்பை மட்டும் பெற்ற ஐயா அவர்கள் தமிழின் மேல் இருந்த ஈடுபாட்டால் தாமே தொல்காப்பியத்தைப் பயின்று இன்று மலேசியாவில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவுகள் செய்கின்றார்கள். உரைகள்,பொழிவுகள் வழியாக மலேசியாவில் தொல்காப்பியத்தை நிலைபெறச்செய்துள்ளார்.

என் முயற்சிகளை நண்பர்கள் சுப.நற்குணன்,மதிவரன்,தமிழ்ச்செல்வம் ஆகியோர் எடுத்துரைக்க என்மேல் ஐயாவுக்கு அன்பு மேலிட்டது.இருவரும் தொல்காப்பிய ஆய்வில் புகுந்தோம்.தொல்காப்பியத்தில் இடம்பெறும் பெயரியல் வினையியல் பகுதிகளை விளக்கப் புகுந்த ஐயா அந்தப் பொருளில் இன்னும் செய்ய வேண்டிய ஆய்வுகளை எனக்கு எடுத்துரைத்தார்கள்.மாணவனாக அமர்ந்து தொல்காப்பியம் குறித்து பல உண்மைகளை அறிந்தேன்.


நானும் சீனி ஐயாவும்

அந்த நேரத்தில் மலேசியாவில் இருக்கும் அன்பர்களின் மொழி குறித்த எண்ணம் பற்றி நண்பர் சுப.நற்குணன் அவர்கள் எடுத்துரைக்க ஐயா நக்கீரனார் போலும் கனன்று தமிழ் உணர்வு மீதூரப்பெற்று மிகச்சிறந்த மொழியியல் விளக்கங்களை எடுத்துரைத்தார்.பன்மொழியறிவு பெற்ற நம் சீனி ஐயா அவர்கள் தமிழ்,ஆங்கிலம்,மலாய்,உருது மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டித் தமிழ் மேன்மையை எடுத்துரைத்தார்கள். எனக்கு வாய்த்த இசுலாமிய சமய ஈடுபாடு கொண்ட அன்பர்களுள் சீனி அவர்கள் மொழிப்பற்றில் முதலில் தெரிந்தார்.அவர்களைப் போலவே புதுக்கோட்டை கிரவுன் இனிப்புச்சாலை உரிமையாளரும் திருக்குறள்,திருக்குரான் ஈடுபாடு உடையவர்கள்.சென்னை மருத்துவர் உசேன் ஐயா அவர்கள் இராமலிங்க அடிகளார்பால் பேரன்பு உடையவர்கள்.இத்தகு நல்லுள்ளங்களால்தான் தமிழ் சமயங்கடந்தும் போற்றப்படுகின்றது.

சீனி ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளைக் கேட்ட வண்ணம் எங்கள் உரையாடல் முன்னேறியது.அந்த நேரத்தில் பேராசிரியர் மறைமலை ஐயாவிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்ததை நம் சீனி ஐயா குறிப்பிட்டார்கள். என் வருகை பற்றி கூறியிருந்ததாகவும், எழுத்துத் திருத்தம் பற்றித் தமிழக அரசுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்று பேராசிரியர் மறைமலை கூறியதாகவும்,அதுபற்றி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அறிக்கை இன்று வெளியானதாகவும்,எழுத்துத் திருத்த எதிர்ப்பில் தொடக்கம் முதல் எதிர்க்குரல் கொடுத்து வந்த எனக்கு இச்செய்தி உடன் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ஐயாவிடம் மறைமலை அவர்கள் உரையாடியதாக அறிந்தேன்.பேராசிரியர் மறைமலை அவர்களை அங்கிருந்தபடியே நன்றியுடன் போற்றினேன்.இது நிற்க.

சீனி ஐயாவின் பாப்புனையும் ஆற்றல் எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.நினைத்தவுடன் பாடல்புனையும் பேராற்றல் ஐயாவுக்கு உண்டு என்பது அறிந்து உள்ளம் பூரித்தேன்.அவர்களின் தமிழ்த்தொண்டைப் போற்றியது என் உள்ளம்.ஐயாவின் உங்கள் குரல் ஏடுகளும் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலரும் ஐயா அவர்கள் வழங்கி மகிழ்ந்தார்கள்.

செம்மொழிச் சிறப்பு மலர் தரமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.39 கட்டுரைகளைத் தாங்கி மலர் வந்துள்ளது.செம்மொழி: பொது விளக்கம்;செம்மொழி நேற்று-இன்று-நாளை; செம்மொழி: சிறப்பியல்புகள்; செம்மொழி அக்கரை நாடுகளில்;தமிழ்க்கல்வி,கலை நிறுவனங்கள்என்ற தலைப்புகளிலும் தமிழ்ச்செம்மொழிப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்,அரசு ஆணைகள் என்று பின்னிணைப்பாகச் செய்திகள் உள்ளன.


உங்கள் குரல் இதழின் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்

சென்னையில் வாழும் உழைப்புச்செம்மல் ஐயா இரா.மதிவாணன் அவர்களை இணைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த மலர் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துப் புதையல்கள் கொண்டதாகும்.

சீனி ஐயா அவர்களைப் பிரிய மனம் இன்றி விடைபெற நினைத்தோம்.எங்கள் மணிப்பொறி நள்ளிரவு 1.00மணி காட்டியது.அந்த நேரத்தில் எங்களை விடாப்பிடியாக அழைத்துச்சென்று தேநீர் பருக வைத்தது அந்தத் தமிழுள்ளம்.ஐயாவிடம் விடைபெற்றபொழுது நடு இரவு 1.30 மணி இருக்கும்.கடல் நடுவே கட்டப்பட்ட 13 கி.மீ.நெடும்பாலத்தின் அழகைப் பருகியபடியே எங்கள் மகிழ்வுந்து போரிட்பந்தர் என்ற நகர் நோக்கி விரைந்தது…

செ.சீனி நைனா முகம்மது அவர்களின் முகவரி:
உங்கள் குரல் எண்டர்பிரைசு,
UNGALKURAL ENTERPRISE,
Room 2,I Floor,22 China Street,
10200 Pulau Pinang,Malaysia.
Tel/ Fax 04 – 2615290

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s