மலையகச் செலவு…

வழமையானது


புண்ணியவான் தலைமையில் நான் உரையாற்றுதல்

சிங்கப்பூரில் 18.05.2010 யாமப்பொழுதில் எங்கள் பேருந்து புறப்பட்டுச் சிங்கப்பூர் எல்லையை ஒரு மணி நேரத்துக்குள் அடைந்தது.நாங்கள் குடியேற்றத் துறையில் எங்கள் வெளியேற்றத்தைப் பதிந்து மலேசிய எல்லையை நோக்கி மீண்டும் பேருந்து வழியாகச் செலவு மேற்கொண்டோம்.சிறிது நேரத்தில் எங்கள் உடைமைகளைப் பேருந்திலிருந்து அவரவர் இறக்கினோம்.மலேசியாவின் குடியேற்றத்துறையில் பதிந்துகொண்டு எங்களுக்காக மலேசியா எல்லையில் காத்திருந்த வேறு பேருந்துகளில் நாங்கள் ஏறி அமர்ந்துகொண்டோம். சிங்கப்பூர் பேருந்து ஓட்டுநர் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் நாடு நோக்கிச் சென்றார்.

நாங்கள் சென்ற மூன்று பேருந்துகளும் காற்று வளிப்பாட்டு ஏந்து கொண்டவை.எனவே எங்கள் செலவு மகிழ்ச்சியாக இருந்தது.சீரான சாலைகளும்,இரு மருங்கும் அடர்ந்த காடுகளும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயர்ந்து நிற்கும் மலைகளும் செம்பனை மரங்களும் இரவு வேளையிலும் மின்விளக்குகளால் எங்கள் கண்ணுக்கு வைகறை விருந்து வழங்கின.

விடியல்பொழுதில் சாலையோரத் தங்குமிடத்தில் நாங்கள் காலைக்கடன்களை முடித்துத் தேநீர் அருந்தினோம்.சிறிது ஓய்வெடுப்புக்குப் பிறகு எங்கள் செலவு தொடர்ந்தது. சாலையோர ஓய்வெடுப்பு நிலையைக் கண்டு எனக்கு மிகு மகிழ்ச்சி.நம் நாட்டில் நிலை வேறு.ஓட்டுநர்கள் உணவுக்கூடங்களைப் பார்த்தால் நிறுத்திவிட்டு உணவுக்கு ஓடிவிடுவார்கள்.அவ்வாறு அவர்கள் செல்லும் உணவுக்கூடங்கள் ஈ மொய்த்தும், தூய்மையற்றும்,மிகு விலையில் பொருட்கள் கொண்டும் இருக்கும்.தரம் தாழ்ந்த உணவு வகைகள் மக்களுக்கு நோயுண்டாக்கும் தன்மையில் காணப்படும்.ஆனால் மலேசியாவில் உள்ள எல்லாக்கடைகளும் தூய்மையும்,தரமும் கொண்டு பேணப்படுகின்றன.

வரும்வழியில் காலைக்கடன்கள் முடித்ததால் நாங்கள் பிரிக்பீல்ட்சு நகரில் உள்ள துன் சம்பந்தன் சாலையில் அமைந்துள்ள ‘செம்(‘Gems’) உணவகத்தில் காலையுணவுக்காகப் பேருந்தை நிறுத்தினோம்.மிகச்சிறந்த உணவகம்.தமிழர்கள் மிகுதியாகப் பணிபுரிகின்றனர். உணவு முடித்து அவரவர் தேவைக்கு ஏற்பத் தொலைபேசி அட்டைக்கு(சிம்) முயன்று பார்த்தோம்.ஆனால் கிடைக்கவில்லை.சிறிது நேரம் கழித்துக் கிடைக்கும் என்றார்கள்.நாங்கள் அதனைப் பொருட்படுத்தாது கோலாலம்பூர் நகர்வலத்துக்குப் புறப்பட்டோம். இரட்டைக் கோபுரம், மலேசிய மன்னர் அரண்மனை,போர் நினைவுச்சின்னம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டோம்.

பேருந்து நின்ற இடங்களில் எங்கள் கூட்டத்தினர் நெல்லிக்காயை மூட்டையிலிருந்து கொட்டியதுபோல் அங்கும் இங்கும் சிதறினர்.அவர்களை ஒன்று திரட்டி மீண்டும் பேருந்தை எடுப்பதற்குள் ஓட்டுநரும் வழிகாட்டியும் பெரும் அல்லலுற்றனர்.ஒருவழியாக எங்களுக்குப் பகலுணவுக்குப் பிறகு விடுதியில் இடம் கிடைத்தது.DYNASTY என்ற விடுதி வானுயர் அடுக்குமாடி விடுதியாகும். 788 அறைகள் கொண்ட விடுதி.அவரவர் அறையைத் தேடிக்கண்டு பிடிப்பதே எங்களுக்குப் பெரும்பாடாக இருந்தது.அந்த விடுதி ஓர் ஊர் அளவு மக்கள் வாழும்படியாக இருந்தது. இங்கும் தங்குமிடச் சிக்கல் தற்காலிகமாக எனக்கு ஏற்பட்டது. ஒருவழியாகச் சரிசெய்து தங்கினேன்.

மாலையில் குளித்து ஓய்வெடுத்துக் கீழ்த்தளத்திற்குச் சென்றேன்.கடும் மழை.அனைவரும் வரவேற்பறையில் காத்திருந்தோம்.சிலர் மகிழ்வுந்து பிடித்துக் கடைகளில் பொருள் கொள்முதலுக்குச் சென்றனர்.

என் நண்பர்களுக்கு என் வருகையைத் தெரிவிப்பதற்கு எனக்கு உடனடியாகத் தொலைபேசி அட்டை தேவைப்பட்டது.மழையில் நனைந்தபடி ஒரு கடைக்குச் சென்று தொலைபேசி அட்டை 12 வெள்ளிக்கு வாங்கினேன்.அதுகொண்டு நண்பர்கள் திருவாளர்கள் முனியாண்டி, சுப.நற்குணன்,பாலாபிள்ளை,மாரியப்பனார்,புண்ணியவான்,மதிவரன்,முரசு,மன்னர்மன்னன் உள்ளிட்டவர்களுக்கு என் வருகை,தங்குமிடம் பற்றிய விவரம் சொன்னேன்.நாளை முழுவதும் குழுவுடன் இருப்பதாகவும்,நாளை நடு இரவில் குழுவிலிருந்து பிரிந்துவர வாய்ப்பு உள்ளது என்றும் அனைவருக்கும் செய்தி சொன்னேன்.இரவு உணவுக்குப் பிறகு விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம்.

19.05.2010 காலையுணவுக்குப் பிறகு அனைவரும் பத்துமலை முருகன் கோயிலுக்குப் புறப்பட்டோம்.தமிழர்கள் எங்குச் சென்றாலும் சமய நம்பிக்கை குறையாதவர்களாக இருப்பதைப் பத்துமலை கோயில் காட்டியது.தம்புசாமிப்பிள்ளை என்பவர் இக் கோயில் உருப்பெறக் காரணமாக இருந்ததை அறிந்தோம்.நினைவுக்குச் சில படங்களை எடுத்துக் கொண்டேன். 2001 இல் ஒருமுறை முரசு.நெடுமாறன் அவர்களுடன் இந்த இடத்துக்கு நான் வந்துள்ளேன். அந்த ஊரில் பேசியுள்ளேன்.திரு.திருமாவளவன் என்ற தோழர் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவராக இருந்து தமிழ்ப்பணி புரிகின்றார்.அவர் ஏற்பாட்டில் முன்பு பேசியுள்ளேன்.

பத்துமலை முருகன் கோயிலைப் பார்வையிட்ட பிறகு அனைவரும் கெந்திங் ஐலேண்டு (GENTING HIGHLANDS) சென்றோம்.நம் ஊர் வி.சி.பி.தங்கக்கடற்கரை போன்று பொழுதுபோக்கு இடம் ஆகும்.சீனநாட்டு முதலாளி ஒருவன் இந்தத் தீவை விலைக்கு வாங்கி அழகிய நகர் உருவாக்கியுள்ளான்.பெரும் முயற்சி.மாந்தனால் எதுவும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இந்த நகரத்தை 3.4 கி.மீ தூரம் கம்பிவடத்தின் வழியாக அடைய வேண்டும்.பல மலைகளைக் கடந்து இந்தத் தூரத்தை அடைய வேண்டும்.வானில் செலவு செய்யும் வியப்புக்காட்சி இதுவாகும். பல அடி உயரத்தில் மலைக்கு மேல் கம்பிவடம் நகர்கிறது.156 கம்பிவட வண்டிகள் (ரோப் கார்) செல்கின்றன.Asian Cultural Village First World Plaza என்ற குறிப்பு இந்தப் பகுதியின் சிறப்பு உணர்த்தும்.நம்மூர் பழனிமலையில் கம்பிவட முயற்சி அறுந்து தோல்வியுற்றது நினைத்துப் பார்க்கவும்.

எங்கள் வழிகாட்டி எங்களுக்குக் கம்பி வடத்தில் ஏறிச்செல்வதற்கு உரிய வழிகளை முன்பே சொல்லி நெறிப்படுத்தினார்.வானுயர் மலையில் கம்பி வடத்தில் ஊர்ந்து சென்றமை அச்சத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேரத் தந்தன.என் புகைப்படக்கருவி மின்கலம் தீர்ந்ததால் சரியாகப் படம் பிடிக்கமுடியவில்லை.நண்பர் புகழேந்தியும் பேராசிரியர் தனராசு (இராச மன்னார்குடி) அவர்களும் பல படங்கள் நினைவுக்கு எடுத்தனர்.

தீவின் அழகிய பொழுதுபோக்கு இடங்களை அனைவரும் சுற்றிப்பார்த்து நகர்ந்தனர்.நானும் நண்பர் ஒருவரும் சில இடங்களைப் பார்த்துவிட்டு ஒன்றுகூடும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்குள் திரும்பிவிட்டோம். போவோர் வருவோரைப் பார்த்தபடி மலேசிய நாட்டின் சிறப்புகளை நண்பர் வழியாக அறிந்து மகிழ்ந்தோம்.அங்குச் சூதாட்டம் புகழ்பெற்றது என்று குறிப்பிட்டனர்.நம் நண்பர்கள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பொருளிழந்து வந்ததாகவும் அறிந்தேன்.ஒருவழியாகத் தீவுப்பயணம் முடித்து இரவு உணவுக்கு மலையடிவாரத்திலுள்ள பகுதிகளைக் கடந்து உணவுக்கூடம் வந்தோம்.

எனக்காக நண்பர் முனியாண்டி விடுதியில் காத்திருந்தார்.உண்டு மகிழ்ந்தோம்.பின்னர் முனியாண்டியின் வண்டியில் நான் ஏறி அமர்ந்து விடுதிக்கு வந்தோம்.இந்த இடத்தில் எனக்கு இருந்த ஒரு பதற்றத்தைப் பதிதல் நன்று.நான் குழுவுடன் 20.05.2010 காலை ஏர் இந்தியா வானூர்தியில் திரும்புவதாகச் செலவுச்சீட்டு எடுக்கப்பெற்றிருந்து.ஆனால் நான் தமிழகத்திலயே 25.05.2010 இல் திரும்புவதுபோல்(காலம் நீட்டித்து) சீட்டை மாற்றி வழங்க வேண்டியிருந்தேன்.அது மிக எளிது என்றாலும் கடைசிவரை எனக்குச் சீட்டு மாற்றிக் கையில் வழங்காமல் இருந்தனர்.கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பினும் வெளிநாட்டில் இருந்தபடி சீட்டு இல்லாமல் இருப்பது ஒருவகை பதற்றத்தைத் தந்தது.எனவே செலவு ஏற்பாட்டாளரை நெருக்கிப் பிடித்துச் சீட்டை வாங்க வேண்டிய நெருக்கடி எனக்கு இருந்தது. ஏனெனில் பொருள்கள் வாங்குவது,ஊர் திரும்புவது என்று அனைவரின் கவனமும் இருக்க நான் மட்டும் சீட்டு மாற்ற வேண்டிய நிலையில் இருந்தேன்.

19.05.2010 இரவு 10.30 மணிக்கு என் கையினுக்குச் சீட்டு வந்தது.அப்பாடா!என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.அதற்குள் கணிப்பொறி அறிஞர் பாலாபிள்ளை அவர்களும் முனியாண்டியுடன் வந்து இணைந்துகொண்டார்.மூவரும் அறைக்குச் சென்று பேசியபடி இருந்தோம்.அறையில் என்னுடன் தங்கியிருந்த திருவாளர் கோவிந்தராசு ஐயாவும் வந்து சேர்ந்தார்.என் உடைமகளை எடுத்துகொண்டு மூவரும் கீழ்த்தளத்துக்கு வந்தோம். பாலாபிள்ளை அவர்களைக் கண்டு உரையாடியமை வாழ்வில் நினைக்கத்தகுந்த நிகழ்வாகும்.

பாலா உலக அளவில் கணிப்பொறித்துறை முன்னேற்றம் பற்றி சிந்திப்பவர்.அவரின் வாழ்க்கை வரலாறு அறிந்தேன்.மீண்டும் சந்திப்போம் என்ற உறுதியுடன் அவருக்கு விடைகொடுத்தோம். நானும் திரு.முனியாண்டி அவர்களும் முன்பே திட்டமிட்டபடி சுங்கைப்ப்பட்டாணி செல்ல உரிய பேருந்து நிறுத்தம் அடைந்தோம்.சுங்கைப் பட்டாணிக்கு இரவு 11.45 மணிக்குப் பேருந்தேற்றி என்னை விட்டார்.

சுங்கைப் பட்டாணியில் எழுத்தாளர் புண்ணியவான் அவர்கள் உள்ளார்கள்.அவர் மகனுக்கு ஒருகிழமையில் திருமணம் நடக்க உள்ளது.அந்த வேலைகளுக்கு இடையிலும் என்னை விருந்தினனாக ஏற்க முன்வந்தார்.அவரிடம் நான் பேருந்தேறிய விவரம் சொல்லி காலை 5 மணியளவில் சுங்கைப்பட்டாணி வருவேன் என்று முனியாண்டி தெரிவித்தார்.அந்த நேரத்தில் என்னை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் வேண்டுகை.நண்பர் முனியாண்டி என்னைப் பேருந்தேற்றிவிட்டு விடைபெற்றார்.உரிய இடத்தில் இறங்க வேண்டுமே என்ற தவிப்பு எனக்கு இருந்தது.ஓட்டுநர் மலாய்க்காரர்.3.30 மணிக்கு விழித்துக்கொண்டேன். சுங்கைப்பட்டாணியை 4.30 மணிக்கு எங்கள் பேருந்து அடைந்தது.பொறுப்பாக என்னை இறக்கிவிட்டனர்.

நான் இறங்கியதும் தொலைபேசியில் புண்ணியவான் அவர்களுக்குப் பேசினேன்.10 மணித்துளியில் என்னை வந்து அழைத்துச்சென்றார். புண்ணியவான் வீடு மிகச்சிறப்பாக இருந்தது.எனக்குஓர் அறை தந்து ஓய்வெடுக்க வைத்தார்.2 மணி நேரம் ஓய்வெடுத்தேன்.9 மணியளவில் புறப்பட்டு இருவரும் கெடா மாநிலத்தில் உள்ள பூசாங்கு பள்ளத்தாக்கு சென்றோம்(Lembah Bujang’s-1800 Years old heritage& civilazation).

எங்கள பகுதியான கடாரங்கொண்டானுடன் தொடர்புடைய ஊர்(இது பற்றி முன்பே பதிந்துள்ளேன்).சுற்றிப் பார்த்துச் சுங்கைப்பட்டாணி மீண்டோம்.மாலையில் 5.30 மணிக்கு மாலை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் புறப்பட்டோம். ஒரு நூல் அங்காடி அரங்கில் என் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கல்லூரி மாணவர்கள்,தமிழார்வலர்கள்,பதிவர்கள்,தமிழ்நெறிக்கழகத் தோழர்கள் என 100 பேருக்கு மேல் இருந்தனர். பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.போரிட்பந்தர் என்ற ஊரிலிருந்து நண்பர்கள் சுப.நற்குணன்,மதிவரன்,தமிழ்ச்செல்வன் மூவரும் மகிழ்வுந்தில் வந்திருந்தனர்.இரண்டரை மணி நேரம் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் பற்றி உரையாற்றினேன். அனைவரும் மகிழ்ந்து கேட்டனர்.அனைவரிடமும் விடைபெற்று இரவு உண்டு, பினாங்கு நோக்கிப் புறப்பட்டோம்.

அப்பொழுது மணி 10.00 மணி இருக்கும்.பினாங்கு நம் பகுதி மக்களுக்கு உயர்வான ஊராகும்.பெயரளவில் அறிந்த ஊருக்கு இப்பொழுது செல்கின்றோமே என உள்ளுக்குள் எனக்கு மகிழ்ச்சி.தரையில் மகிழ்வுந்தில் சென்று-பிறகு நாங்கள் சென்ற மகிழ்வுந்து கப்பலில் சென்று அதன்பிறகு தரையில் செல்லும் வியப்பான செலவுப் பட்டறிவு.பாலத்தில் செல்ல வேண்டும் என்றால் கடலில் 13 கி.மீ.செலவு செல்ல வேண்டும்.டத்தோ சாமிவேலு அவர்களின் காலத்தில் இப்பாலம் கட்டப்பட்டிருக்கவேண்டும்.அவர்தான் மலேசியாவில் சாலை வசதிகளுக்கு முதன்மையளித்தவர். அப்படியே கப்பலில் இருந்தபடி பினாங்கின் ஒளிவெள்ளத்தினைக் கண்டபடி எங்கள் மகிழ்ச்சிச்செலவு இருந்தது.

இரவு 11.30 மணியளவில் எங்கள் வருகைக்காக ‘உங்கள் குரல்’ ஆசிரியரும்,மலேசியாவில் தொல்காப்பியத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டவரும் தனித்தமிழ் அன்பருமான செ.சீனி நைனா முகம்மது ஐயா அவர்கள் காத்திருந்தார்.


பார்வையாளர்கள்


ஆர்வமுடன் அமைந்த என் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


நான் உரையாற்றும் காட்சி


பார்வையாளர்கள்


சுப.நற்குணன்,மு.இ,தமிழ்ச்செல்வன


மதிவரன்,மு.இ,சுப.நற்குணன்


கல்லூரி மாணவர்களுடன

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s