ஐம்பெருங்காப்பிய மாநாடு-மலேசியா

வழமையானது


மலேசிய நடுவண் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களுடன் நான்

மலேசியாவின் ஈப்போ நகரில் 21-05-2010 முதல் 23-05-2010 வரை மலேசியத் தமிழர் பேரவை ஆதரவில் ஐம்பெருங்காப்பிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கருப்பொருள் “இன்றைய மானுட மேன்மைக்கு ஐம்பெருங்காப்பியத்தின் பங்கு” என்பதாகும். நிறைவுநாளான இன்று
(23.05.2010) நான் கலந்துகொண்டு சிலப்பதிகார இசைப்பகுதிகள்,நாட்டுப்புற இசைப்பகுதிகளை விளக்கினேன்.

காலை 8.30 மணிக்கு ஈப்போவில் உள்ள திரு.சிவநேசன் என்னும் நண்பர் இல்லத்திலிருந்து புறப்பட்டு,இடையில் உணவு முடித்துக்கொண்டு மாநாட்டு அரங்கினை 9.30 மணிக்கு அடைந்தோம்.மாநாடு மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டுப் பேராக் மாநில முதல்வர் அலுவலகத்தில் அரசு வளாக விருந்து மண்டபத்தில் அழகிய அரங்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

மாநாட்டில் தமிழகப் பேராளர்களும்,மலேசியப் பேராளர்களும் அரங்கில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இரண்டு நாளாகக் கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது. இன்று காலையிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழகம்,மலேசியா சார்ந்த பலர் ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.அதன் பின்னர் முனைவர் உலகநாயகி பழனி தலைமையில் மகளிர் அரங்கம் நடைபெற்றது.ஆர்வமுடன் மாநாட்டு நிகழ்வுகளைக் கவனித்தேன்.

இதன் இடையே ஈப்போ நகரின் புகழ்பெற்ற தனித்தமிழ் அறிஞர் குறிஞ்சிக்குமரனார் அவர்களின் மகன் திருவாளர் தமிழ்ச்சாத்தன் அவர்கள் தம் துணைவியாருடன் என்னைக் காண வந்திருந்தார். அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று,குறிஞ்சிக்குமரனாரின் இல்லம் சென்றேன். 1992-93 அளவில் குறிஞ்சிக்குமரனார் எனக்கு மடல் வழியாகத் தொடர்பில் இருந்தார்.பின்னர் அவர்கள் மறைவுற்றதை அவர் மாணவர் திரு.கருப்பையா அவர்கள் வழியாக அறிந்தேன்.

2001 இல் நான் மலேசியா சென்றபொழுது குறிஞ்சிக்குமரனாரின் இல்லம் செல்ல நினைத்தும் வாய்ப்பு அமையவில்லை.இந்த முறை குறிஞ்சிக்குமரனார் இல்லம் சென்று அவர்களின் துணைவியாரையும்,அவர்களின் குடும்பத்தாரையும் கண்டு அளவளாவினேன். அனைவருக்கும் தனித்தமிழ்ப் பெயர்கள் இடப்பெற்றிருந்தது அறிந்து மிக மகிழ்ச்சியுற்றேன்.1960 அளவில் மலேசியாவில் பாவாணர் புகழ்பரப்பிட பாவாணர் தமிழ்மன்றம் கண்டவர் நம் குறிஞ்சிக்குமரனார் அவர்கள்.அவர்கள் குடும்பத்தாரிடம் விடைபெற்று 1.30 மணிக்கு அரங்கை மீண்டும் அடைந்தேன். உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்திருந்தனர்.

பகல் 2.30 மணிக்குப் பொது அரங்கு நடைபெற்றது.மருத்துவர் உசேன் தலைமையில் அறிஞர்கள் எண்மர் ஐம்பெருங்காப்பிய மாண்பினை நிலைநிறுத்தனர்.நான் சிலப்பதிகாரத்தின் இசைப் பகுதிகளை விளக்கி,நாட்டுப்புற இசையை அடிகளார் பயன்படுத்திய இடங்களைப் பாடிக்காட்டி விளக்கினேன்.அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர்.

நான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்க உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன் அவர்கள், மருத்துவர் உசேன் அவர்கள்,மலேசியாவைச் சார்ந்த ஆசிரியர் திரு.இரா.மாணிக்கம் அவர்கள்,முனைவர் வா.மு.சே.ஆண்டவர் அவர்கள் உதவினர்.மாலையில் மலேசியாவின் நடுவண் அரசு கூட்டரசு பிரதேசம்,புறநாகர் நல்வழ்வுத்துறை துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் முன்னதாக அரங்கிற்கு வந்து அனைவருக்கும் வாழ்த்துரைத்துக் கலந்துரையாடினார். மாலையில் நிறைவு விழா மிகச்சிறப்பாக நடந்தது.

நான் ஈப்போவில் 5.30 மணிக்குப் பேருந்தேறி 7.30 மணிக்குத் தலைநகர் கோலாலம்பூர்(202 கி.மீ) வந்தடைந்தேன்.கணிப்பொறி வல்லுநர் திரு.பாலாப்பிள்ளை அவர்கள் கோலாலம்பூர் நடுவண் தொடர்வண்டி நிலையம் அருகில் வந்து என்னை மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு, பெட்டாலிங் செயா என்ற ஊருக்குக் கொண்டு வந்தார்.அங்கு பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களும் அவர்களின் தம்பிமார்கள் திரு.இளந்தமிழ், திரு.திரவியம், திரு.நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்கள் காத்திருந்தனர்.அனைவரும் கலந்துரையாடினோம்.விரிவான என் மலையகப் பயணத்தைத் தமிழகம் சென்றதும் விரித்து எழுதுவேன்.பல படங்கள் நினைவுக்காக எடுத்துள்ளேன்.அனைத்தையும் பதிவில் இணைப்பேன்.


எனக்கு நினைவுப் பரிசில் வழங்குகின்றனர்.அருகில் பேரா.வளன் அரசு


மாநாட்டு அரங்கில் அறிஞர்களுடன் நான்


மரு.உசேன்,மரு.பாலா,முனைவர் பா.வளன்அரசு,மு.இ


நான்,மருத்துவர் உசேன்,திரு.இரா.மதிவாணன்

தொடர்புடைய பதிவு: திருத்தமிழ்
கே.பாலமுருகன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s