நாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே வழங்கியத் தமிழ் இசைப் புலவர் பட்டம்

வழமையானது


இரகுநாத் மனே அவர்கள் பட்டம் வழங்கிய நாளில்(இடப்புறம் இரண்டாவது நிற்பவர் இரகுநாத் மனே)

நான் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் (1992-93) அறிமுகம் ஆனவர் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே அவர்கள்.அவர் அப்பொழுது முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார்.வில்லியனூர்த் தாசிகள் பற்றியது அவருடைய முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு.அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்.உலகின் பல நாடுகளுக்குக் கலைப்பயணம் சென்று நாட்டிய நிகழ்வுகள் நடத்தியவர்.அவர் நாட்டியம் பிரான்சில் நடந்தது என்றால் நம்மூர் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் இடம்பெறும் சிறப்பு நிகழ்வுபோல அவர் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுவார்கள்.அந்த அளவு பிரான்சில் கலையார்வலர்களுக்கு இரகுநாத் மனே அறிமுகம் ஆனவர்.

பல ஆண்டுகள் அவர் தொடர்பு அற்று இருந்தேன்.பின்னர்ப் புதுச்சேரிக்குப் பணியாற்ற வந்ததும் அவர் புதுவையில் இருப்பது அறிந்து அவரைக் காணச் சென்றேன்(23.02.2007). பல ஆண்டுகள் ஆனதால் என்னை மறந்திருப்பார் என்று நினைத்தேன்.ஆனால் அருமை நண்பர் இரகு அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும் பாசத்தையும் என் வாழ்வில் மறக்க இயலாது. அந்தச் சந்திப்பை நானே பதிவாக முதன்முதல் என் பதிவில் இட்டேன்.அதன் பிறகு கடந்த நான்காண்டுகளாகப் புதுச்சேரிக்கு வரும்பொழுதெல்லாம் நண்பர் இரகு என்னைச் சந்திக்க ஆர்வம் காட்டுவார்.நானும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவரைச் சந்தித்து விடுவேன். பணி அழுத்தத்தால் அவரைச் சந்திக்க முடியாமல் வருந்துவதும் உண்டு. அவர்போல் நட்பைப் பேணிப் பாதுகாப்பவர்கள் அரிது.

இருகுநாத் மனே அவர்கள் மிகச்சிறந்த கலைஞர்.ஆடலும் பாடலும் அவருக்கு இயல்பாக அமைந்தது.நாம் மூச்சு விடுவது போல் இத்துறைகளில் பயிற்சி பெறுவதுதான் இரகுவின் பணி,வேலை,கடமை.”நாடாறு மாதம் காடாறு மாதம்” என்பதுபோல் இரகு பிரான்சிலும், புதுச்சேரியிலும் வாழ்பவர்.இந்த வாரம் புதுவையில் இருப்பார்.அடுத்த வாரம் பிரான்சில் இருப்பார்.அடுத்த நாள் அமெரிக்கா செல்வார்.அப்படியே மாலையில் மலேசியா திரும்புவார். மறுநாள் தஞ்சாவூர் சரசுவதி மகால் அருகில் நாட்டியம் ஆடுவார்.புதுச்சேரியில் இருந்தாலும் பிரான்சில் அவர் வேலை தானே நடந்துகொண்டிருக்கும். பிரான்சில் இருந்தாலும் புதுச்சேரியில் அவர் வேலை மிகச்சிறப்பாக நடக்கும்.அவரின் உதவியாளர்கள் அந்த அளவு நம்பிக்கைக்குரியவர்கள்.

கொட்டு முழக்குக் களமாக அவர் வீடு இருக்கும்.தொன்மச் சின்னங்கள்,பல்வேறு இசைக்கருவிகள், பதிவுக் கருவிகள்,மாணவர்களின் ஆடல் பாடல்,பயிற்சி என்று இருக்கும். அவர் வீடு எப்பொழுதும் திருவையாறுதான். புதுச்சேரி வந்தால் அவர் வீடு அமளி துமுளியாக இருக்கும்.இரகு ஒரு வாரம் புதுச்சேரியில் தங்கினால் அவர் பணியாளர்கள் யாரும் ஓய்வாக இருக்க மாட்டார்கள்.அந்த அளவு வேலை இருக்கும்.அதற்குள் ஒரு நாட்டிய விழாவோ,வெளியூர்ப்பயணமோ,பிறந்த நாள் விழாவோ இருந்துகொண்டே இருக்கும். தவறாமல் எனக்கு அழைப்பு வரும்.பல பிரஞ்சு நண்பர்களிடம் இரகு என்னை அறிமுகம் செய்து மகிழ்ச்சியடைவார்.பாடல் எழுதச் செல்லி மெட்டு வழங்குவார்.சில பாடல்கள் நான் எழுதி அவரின் குறுந்தட்டில் வெளிவந்துள்ளன.திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் உள்ளார். பல குறுவட்டுகள் வெளியிட்டுள்ளார்,நூல்கள் எழுதியுள்ளார்.நம் நாட்டுப் பல்கலைக் கழகச் சட்டத் திட்டங்களுக்குள் நம் இரகுவால் அடங்கி ஓரிடத்தில் மூன்றாண்டுகள் கூடாரத்தில் அடைபட்டுக் கோழி அடைகாத்துக் குஞ்சுபொறிப்பதுபோல் முனைவர் பட்டம் பெற முடியாது. விடுதலைக் கலைஞனுக்குக் கால்கட்டு இட முடியுமா?

பல மாணவர்களுக்கு இலவயமாக நாட்டியம், பாடல் சொல்லித் தருவதற்குப் பள்ளியொன்றைப் புதுச்சேரியில் நடத்துகிறார்.பிரான்சிலும் அவர் நாட்டியப் பள்ளி புகழ் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு இரகு அவர்கள் எனக்கு ஒரு பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார். பிரான்சு நாட்டின் தூதுவர் ஒருவர் கையால் வழங்க ஏற்பாடாகி இருந்த ஒரு நிகழ்வுக்கு என்னால் உரிய காலத்தில் சென்று பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.ஏனெனில் வேறொரு நிகழ்ச்சியில் ஒரு நூலைத் திறனாய்வு செய்து பேச வேண்டிய நெருக்கடியில் இருந்தேன். அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. நேரத்தை நீட்டிவிட்டார்கள். நான் பேசி முடிந்ததும் விரைந்து சென்றும் இரகுவின் நிகழ்ச்சி நிறைவில்தான் அரங்கம் சென்று அடைந்தேன்.

நண்பர் இரகு அவர்கள் புகுழ்பெற்ற பிரஞ்சு இதழாளர்கள்,நண்பர்கள் கையால் தமிழிசைப் புலவர்(09.01.2010) என்ற பட்டத்தை எனக்கு வழங்கினார்.இது அவரின் தாளசுருதி ஆண்டு விழாவில் வழங்கப்பட்டதால் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s