புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழ்க்காவல் மின்னிதழின் இரண்டாம் இதழ் வெளிவந்துவிட்டது.இணைய உலகினர் கண்டு மகிழலாம்.
முகவரி
http://thamizhkkaaval.net/
மு.இளங்கோவன்,புதுச்சேரி
புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழ்க்காவல் மின்னிதழின் இரண்டாம் இதழ் வெளிவந்துவிட்டது.இணைய உலகினர் கண்டு மகிழலாம்.
முகவரி
http://thamizhkkaaval.net/
மு.இளங்கோவன்,புதுச்சேரி
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:தமிழ்க்காவல்
மூன்றுநாள் என் பிறந்த ஊர் சென்று திரும்பினேன்(01,02,03 -06.2008).
நல்ல மகிழ்ச்சி ஏற்பட்டது.
குழந்தைகள் மகிழ்ந்தனர்.
எங்கள் பழைய வீடு இடிபாடுகளுக்கு இடையே இருக்கிறது.
அடுத்த ஆண்டு விழுந்துவிடும்.
அந்த வீட்டில் குழந்தைகளைக் கொண்டுபோய் படுக்கவைத்து விளையாட வைத்து
அழைத்து வந்தோம்.
எத்தனையோ முயற்சி செய்தேன்.எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால் அதனைச் சீர்செய்யமுடியவில்லை.64 உத்திரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது.
அனைத்தும் இரங்கூன் தேக்கு மரம் கொண்டு கட்டப்பட்டது.
அழகிய வேலைப்பாடுடைய சரங்கள்,அருகால் நிலை,தூண்கள்.
சட்டங்கள்(ரீப்பர்) உட்பட அனைத்தும் இழைப்புவேலை கொண்டது.
வீடு முழுமையடையும் சூழலில் எங்கள் தாத்தா இறப்பு நிலையில் இருந்ததால் அவசரமாக வீட்டின் ஒரு பகுதியை முடிக்க வேண்டிய கட்டாயம்.எனவே சில இடங்களில் பொய்த்தூண்கள் இடப்பட்டன.அப்பொய்த்தூண்களுக்கு மெய்த்தூண்கள் இன்றும் பரண்களில் உள்ளன.அப்பொய்த்தூண்களுடனே இன்றுவரை அந்த வீடு வாழ்ந்தது.அவற்றைச்சரிசெய்ய முடியாதபடி பின்னாளில் குடும்பம் பொருள்வளம் இன்றிப்போனது.
ஒரு ஏக்கரை வளைத்துக் கட்டப்பட்டவீடு அது.’கோட்டையான் வீடு’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.கோட்டைபோன்று இருக்கும்.இரண்டு காலவாய் போட்டுக் கட்டப்பட்டது.இவ்வீடு கட்டி முடித்து எஞ்சிய பொருட்களைக் கொண்டுசுண்ணாம்புக்குழியில் வேறொரு வீடு கட்டப்பட்டதாம்.
வீடு கட்ட மிகப்பெரும் மரங்கள் வந்து இறங்கியுள்ளன.
அவற்றைத் தொன்னூரு ஐயம்பேட்டையைச் சேர்ந்த வாள்காரர்கள் அறுத்து துண்டாடி வழங்கியுள்ளனர்.தொன்னூரு இன்று தென்னூர் என்று அழைக்கப்படுகிறது.வலிமையனவர்கள் அப்பகுதியில் இருப்பார்களாம்.தீவட்டிக்கொள்ளையடிப்பது அவர்களின் வழக்கம்.எனவே முறைவைத்துப் பொருள்களை வழங்கிவிட்டால் எந்தப்பொருளும் கொள்ளையடிக்கப்படாதாம்.
அத்தகு வலிமை வாய்தவர்களின் உழைப்பில் எங்கள் வீடு உருவானது.அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு குடம் கள் வழங்கப்படுமாம்.மூன்று நாளைக்கு ஒரு முறை கிடாகறி சோறு வழங்கப்படுமாம்.பலர் சாப்பாட்டுக்கே வேலை செய்துள்ளனர்.
தலைமைத் தச்சனுக்கே 50 காசுதான் சம்பளம்.
அவ்வீடு கட்டும்பொழுது சாப்பாட்டுக்கு இழைப்புளி போட்ட தங்கத்தாசாரியாரை நான் பார்த்துள்ளேன்.(அண்மையில்தான் மறைந்தார்.மிகப்பெரிய உடம்பு.என்னை ஆசாரியார் வேலைக்குப் பழக்கிப்பார்த்துத் தோற்றார்.நான் இழைப்புளி போடத் தெரிந்துகொண்டேன்.அவர் எங்களை மிக ஏளனமாகத் திட்டித் தீர்ப்பார்.அவருக்கு ஈடுகொடுத்து வேலை செய்யாததே காரணம்.பல் நீண்டிருக்கும்.அவர் இளைஞராக இருக்கும்பொழுது பல்லில் ஒரு மூட்டை பாரத்தைத் தூக்கியவராம்.இடுப்பில் ஒரு இரும்புச் சங்கிலியைக் கட்டிக்கொண்டு பனைமரத்தில் பிணைத்து அச்சங்கிலியை அறுப்பாராம்.அடிக்கடி தேவரடியார் வீடு சென்றுவருபவராம் தங்கத்தாசாரியார்.கும்பகோணத்திற்குப்படம்பார்க்கச்செல்ல எதிரித்திசையில் உள்ள செயங்கொண்டம் சென்று வாடகை மிதிவண்டி எடுத்துக்கொண்டு செல்வார்களாம்.)
எங்கள் உடையார்பாளையம் வட்டத்திலேயே அதுபோல் வீடு கட்டப்படவில்லை.அக்காலத்தில் எங்கள் வீட்டைக்கட்டி முடித்ததும் அக்கம் பக்கம் ஊரில் உள்ளவர்கள் வண்டி கட்டிவந்து வேடிக்கை பார்த்துச்சென்றுள்ளனர்.80 வயதைக்கடந்த வீடு.ஆடு, மாடுகள் கட்டி வைக்கும் கூடாரம்போல் காட்சி தருகிறது.
எத்தனைபேர் அமைதியாகப் படுத்து உறங்கியிருப்பார்கள்.எத்தனை திருமணங்கள் அந்த வீட்டில் நடந்திருக்கும். எத்தனை இழவு விழுந்திருக்கும்.எவ்வளவு தானியங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.எத்தனைக் குழந்தைகள் அந்த வீட்டில் தவழ்ந்திருக்கும்.
அந்த வீட்டைப் புதுப்பித்தால் ஒரு அழகிய கலைக்கோயிலை உயிரூட்டியதற்குச் சமமாகிவிடும்.முயன்று பார்ப்போம்

முனைவர் மு.இளங்கோவன் பிறந்த வீடு தோற்றம்
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:முனைவர் மு.இளங்கோவன
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் 39 ஆம் கருத்தரங்கம் நடைபெறும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வாயிலை 17.05.2008 காலை 8.30 மணிக்கு அடைந்தேன்.சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு திருவள்ளுவர் விடுதியில் தங்க இடம் ஒதுக்கினர்.நான் தங்கும் அறைக்கு எதிரில் என் பேராசிரியர்அ.அறிவுநம்பி அவர்கள் பேராசிரியர் சு.இராசாராம் (அழகப்பா பல்கலை) அவர்களுடன் தங்கியிருந்தார்.வணங்கி மகிழ்ந்தேன்.
காலைக் கடமைகளை முடித்து உணவுக்கூடம் சென்று உண்டேன்.கருத்தரங்க வாயிலை அடைந்தபொழுது நண்பர் பேராசிரியர் மு.பரமசிவம்(புத்ரா பல்கலைக்கழகம்,மலேசியா) அவர்கள் வந்திருந்தார்.மலேசிய இலக்கியப்போக்குகள்,நண்பர்கள் பற்றி உரையாடினோம்.
தொடக்கவிழா வழக்கம் போல் காலத் தாழ்ச்சியுடன் தொடங்கியது.துணைவேந்ததர் திருவாசகம்,நடுவண் அமைச்சர் வழக்கறிஞர் வேங்கடபதி ஆகியோர் தமிழ் உணர்வு சார்ந்து உரையாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.தமிழச்சி அவர்கள் உரையாற்றியமையும் சிறப்பாக இருந்தது.
பல்வேறு அறிஞர்களின் பேச்சுகளுக்கு இடையில் கருத்தரங்க மலர்வெளியீடு,சிறப்புச்செய்தல் நிகழ்வுகள் நடந்தன.இரண்டுமணிவரை தொடக்கவிழா நீண்டது.பகலுணவுக்குப் பிறகு தமிழ்த்துறையில் கருத்தரங்க அமர்வுகள் நடந்தன.இணைய உலகில் தமிழ்நூல்கள் என்னும் தலைப்பில் நான் கட்டுரை படித்தேன்.நல்ல வரவேற்பு.இணையம் சார்ந்த மூன்று கட்டுரைகள் படித்தோம்.பிற கட்டுரைகள் வழக்கம்போல் இருந்தன.
பேராசிரியர் சபாபதி(மலேசியப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முத்தையா(மேற்கு வங்காளம்-விசுவபாரதி பல்கலைக்கழகம்),பேராசிரியர் கோவி. இராசகோபால்(தில்லிப் பல்கலைக்கழகம்) நண்பர் சு.தமிழ்வேலு உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன்.இரவு உணவு புலால் வகையில் சிறப்பு.நீண்டநேரம் பேராசிரியர் பரமசிவம் பேசி மகிழ்வித்தார். முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் தமிழ்ப் பணிகளை அசைபோட்டோம்.
மேலும் சில நண்பர்களைக் கண்டு உரையாடி இரவு படுத்து, மறுநாள் வைகறையில் எழ நினைத்து, அயர்ந்து தூங்கி, காலையில் காலம் தாழ்ந்து எழுந்தேன்.உடன் புறப்பட்டு கோவைப் பேருந்து நிலையம் வந்தேன்.ஈரோட்டுக்குப் பேருந்தேறி காலை 11 மணியளவில் சக்தி துரைசாமி திருமணமாளிகை சென்றேன்.
பேராசிரியர் கனல் மைந்தன் இளையமகனின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தேன். எழுத்தாளர் ஞானி.ஓவியர் வீரசந்தானம்,பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்,வழக்கறிஞர் முருகன் ஆகியோரைக் கண்டு அளவளாவினேன்.பலரைக் கண்டு மகிழ்ந்தாலும் திட்டமிட்டபடி சிலரைச் சந்திக்கமுடியாமல் போனது.பிற்பகல் பேருந்தேறி இரவு 10 30 மணியளவில் புதுச்சேரி வந்தேன்.வீரசந்தானம் அவர்களுடன் நன்கு பழக நல்ல வாய்ப்பு.
1 இல் பதிவிடப்பட்டது
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுத், தமிழியல் கருத்தரங்கிற்கு 16.05.2008 காலை புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு,திருச்சிராப்பள்ளி வழியாகச் சென்றன்.திருச்சிராப்பள்ளியில் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்களைச் சந்திப்பது என் நோக்கம்.திருச்சிராப்பள்ளியில் நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டபொழுது பேராசிரியர் பே.க.வேலாயும் அவர்களின் அறிவு மேன்மை கண்டடு வியந்துள்ளேன்.அவருடன் மாலை வேளைகளில் உரையாடுவது அந்நாள் வழக்கம்.தமிழ்த்தந்தி சிவலிங்கனார்,காட்டூர் நாணயவியல் அறிஞர் ப.சீனிவாசன்,முனைவர் இரா.திருமாறன் அவர்கள்,பேராசிரியர் நாகராசன்,பேராசிரியர் திருஞானம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் பழகவும் வேலாயுதனார் காரணமாக இருந்தார்.
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள மருதூர் ஊரினர்.மருதூர் இளங்கண்ணன் அவர்கள் நம் பேராசிரியரின் உடன்பிறப்பு.தமிழ் இலக்கண,இலக்கியங்கள்,கிரேக்க இலக்கியங்களில் நல்ல புலமை,வானியல் அறிவு,வடமொழி இலக்கியஅறிவு நிரம்பப் பெற்றவர்.இவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஊர்களைப் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.பல நூல்கள் அகராதிகளை உருவாக்கியுள்ளார்.இவர்களை 16.05.2008 பிற்பகல் இரண்டு மணியளவில் கண்டேன்.நீண்டநேரம் உரையாடினேன். அவர்களைச் சில படம் எடுத்துக்கொண்டு 5 மணிக்குத் திருச்சிராப்பள்ளிப் பேருந்து நிலையத்தில் பேருந்தேறி இரவு 11 மணிக்குக் கோவை சென்றடைந்தேன்.
அப்பொழுது பல்கலைக்கழகம் செல்ல பேருந்து இல்லை என்றனர்.விடுதி எடுத்துதான் தங்க வேண்டும் என்ற நிலை.அப்பொழுது என்னுடன் பேருந்தில் பயணம் செயத அன்பர் தங்கள் இல்லத்தில் வந்து தங்கிச்செல்ல வேண்டினர்.அவர்பெயர் நெடுமாறன் ஆகும்.அவரின் தொழில் காண்பொளி எடுப்பது.வெளியூரில் காண்பொளி பணி முடித்து மீண்டவர் என்னையும் அழைத்தார்.5 மணிநேரம் ஓய்வெடுத்து பல்கலைக்கழகம் செல்ல நினைத்து அவருடன் சென்றேன்.
முதற்கண் அவர் பெரிய தந்தையார் இல்லத்தில் கையில் கொண்டுவந்த பொருள்களைக் கொண்டுபோய் வைக்கச் சென்றோம்.அவர் பெரிய தந்தையாரிடம் உரையாடியபொழுது அவர் தமிழ்ப்பேராசிரியர் என்பதும் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரினர் எனவும் பணியின்பொருட்டு கோவையில் தங்கியுள்ளதாகவும் கூறினார்.பேராசிரியர் கனல்மைந்தன் அவர்களுடன் பணி புரிந்தமையும் நினைவூட்டினார்.எனக்குத் தெரிந்த பல பேராசிரியர்கள் அவரின் நண்பர்கள்.உணவு உண்ணச் சொல்லி அன்புடன் வேண்டினர். காங்கேயம் ஊரில் உண்டதால் ஒப்புக்குச் சிறிது உண்டேன்.அவர்களிடம் அன்பு விடைபெற்று மாறன் இலத்திற்குச் சென்று உரையாடினேன்.நல்ல நண்பர்.உதவும் உள்ளம் வாய்த்தவர்.தம் ஊரில் உள்ள இளைஞர்களுக்குக் காண்பொளி எடுக்க பழக்கி அவர்களுக்கு வேலை வழங்கிவருபர். நல்ல நண்பர் கிடைத்த மகிழ்வில் அவர்களிடம் விடைபெற்று காலை 8.30மணிக்குக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அடைந்தேன்…
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:Add new tag, வெளியூர்ச்செலவு...
கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாள் விழா புதுவை அரசின் கலை,பண்பாட்டுத்துறையின் சார்பில்
21.09.2007 மாலை புதுச்சேரி பாரிசுமகாலில் நடைபெற உள்ளது. திரைப்பா ஆசிரியர் பாவலர்
கே.அறிவுமதி சிறப்புரையாற்றுகிறார்.
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது